ஹஜ் யாத்திரிகர்களுக்கு விழிப்புணர்வு கருத்தரங்கு
இவ்வருடம் புனித ஹஜ் கடமையை மேற்கொள்ளவுள்ள ஹஜ் யாத்திரிகர்களுக்கு அரச ஹஜ் குழு நாடெங்கும் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளது. இதன் அடிப்படையில் எதிர்வரும் சனிக்கிழமை கண்டியிலும், ஞாயிற்றுக்கிழமை சம்மாந்துறை மற்றும் காத்தான்குடியிலும் ஹஜ் விழிப்புணர்வு கருத்தரங்குகள் நடாத்தப்படவுள்ளன.
இக்கருத்தரங்கில் சவூதி அரேபியாவின் சட்டத்திட்டங்கள், சவூதி அரேபியாவில் ஹஜ்ஜாஜிகள் பாதுகாப்பாக எவ்வாறு கடமையை நிறைவேற்றலாம். ஏதும் ஆபத்துக்களின் போது யாரை தொடர்பு கொள்ள வேண்டும். அரச ஹஜ் குழு சவூதியில் வழங்கும் மருத்துவ சேவை என்பவை பற்றி தெளிவூட்டப்படவுள்ளன.
ஹஜ் கடமையை நிறைவேற்றவுள்ள யாத்திரிகர்கள் தவறாது இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள வேண்டுமென அரச ஹஜ் குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதேவேளை ஒவ்வோர் ஹஜ் யாத்திரிகர்களும் தடுப்பு ஊசி கட்டாயம் ஏற்றிக் கொள்ள வேண்டுமெனவும் ஹஜ் குழு ஹஜ் யாத்திரிகர்களை அறிவுறுத்தியுள்ளது.
யாத்திரிகர்கள் தடுப்பூசியை தனியார் வைத்தியர்களிடம் ஏற்றிக்கொள்ளாது, அரசாங்க வைத்தியசாலைகளில் ஏற்றிக்கொள்வதே சிறந்தது என அரச ஹஜ் குழுவின் தலைவர் கலாநிதி மொஹமட் தாஹா சியாத் தெரிவித்தார்.
இவ்வருடம் இலங்கைக்கு 2800 ஹஜ் கோட்டா வழங்கப்பட்டுள்ளது. ஹஜ் கடமைக்காக விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து வரிசைக்கிரமப்படி தெரிவு செய்யப்பட்ட 2650 பயணிகளும் மற்றும் ஹஜ் வழிகாட்டிகள், சமையற்காரர்கள் 150 பேரும், இவ்வருடம் சவூதி அரேபியாவுக்குப் பயணிக்கவுள்ளனர்.
ஹஜ் முகவர்கள் ஹஜ் கட்டணத்தை ஆகக் குறைந்தது 3 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாவாகவும் ஆகக் கூடியது 6 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாவாகவும் நிர்ணயித்துள்ளார்கள். முகவர்களால் வழங்கப்படும் சேவைகள், வசதிகள், ஹோட்டல் ஒதுக்கீடு என்பவற்றை கருத்திற் கொண்டு கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. இலங்கையிலிருந்து முதலாவது தொகுதி யாத்திரிகர்களுடன் எதிர்வரும் ஆகஸ்ட் 6 ஆம் திகதி சவூதி அரேபிய விமானம் புறப்படவுள்ளது. அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகாரங்கள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் முதலாவது தொகுதி ஹஜ்ஜாஜிகளை விமான நிலையத்திலிருந்து வழியனுப்பி வைக்கவுள்ளார்.


Comments
Post a Comment