சமஷ்டி அரசியலமைப்பை கொண்டு வந்து நாட்டை பிரிக்க முயற்சி! மகிந்த ராஜபக்ச


உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்தாவிட்டால், அரசியலமைப்புத் திருத்ததிற்கு கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் ஆதரவளிக்க மாட்டார்கள் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பதுளை நன்னபுரா பிரதேசத்தில் நேற்று அவர் இதனை கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கூடிய இது குறித்து கலந்துரையாட உள்ளதாகவும் அரசியலமைப்பு சட்டவாக்க துணைக்குழுக்களில் இருக்கும் கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த சகல நாடாளுமன்ற உறுப்பினர்களும் ராஜினாமா செய்ய உள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசாங்கம் தோல்வியடைந்து கூட்டு எதிர்க்கட்சி அமோக வெற்றியை பெறும் என்பதை அறிந்து பல்வேறு காரணங்களை கூறி உள்ளூராட்சி சபைத் தேர்தலை அரசாங்கம் ஒத்திவைத்து வருகிறது.

மேலும் தற்போதைய அரசாங்கத்திற்கு அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தக் கூடிய மக்கள் ஆணைக்கிடைக்கவில்லை.

சமஷ்டி அரசியலமைப்புச் சட்டம் ஒன்றை உருவாக்கி நாட்டை பிரிக்க முயற்சித்து வருகின்றனர். கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட நாட்டு மக்களின் இணக்கம் இதற்கு கிடைக்காது என்றும் முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Comments