கொலை செய்ததாக மகன் பொலிஸில் சரண்! தந்தை உயிருடன் வந்ததால் குழப்பம்
அரலங்வில பிரதேசத்தில் மகன் ஒருவர் மண்வெட்டியால் தாக்கி தந்தையை கொலை செய்ய முயற்சித்துள்ளார்.
தினமும் குடிபோதையில் வீட்டிற்கு வந்து தாய் மற்றும் சகோதரியை தாக்குவதனை பொறுத்துக் கொள்ள முடியாமல் தந்தையை மண் வெட்டியால் மகன் தாக்கியுள்ளார். தனது தாக்குதலில் தந்தை உயிரிழந்துள்ளதாக எண்ணிய மகன் கொலை செய்து விட்டதாக கூறி பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸ் அதிகாரிகள், தாக்குதலுக்குள்ளான நபர் உயிரிழக்கவில்லை என்பதை கண்டறிந்துள்ளனர். உடனடியாக அவர் அரலங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று முன் தினம் இரவு தாக்குதலுக்குள்ளான நபர் குடிபோதையில் வருகைத்தந்து தனது மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார். தாக்குதல்களை பொறுத்துக் கொள்ள முடியாத மனைவி, பெண் பிள்ளைகளுடன் வீட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளார். பின்னர் நேற்று அதிகாலை வீட்டிற்கு வந்த 19 வயதுடைய மகன் மண் வெட்டியால் தந்தை மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
தாக்குதலினால் தந்தை உயிரிழந்துள்ளதாக எண்ணிய மகன் பொலிஸ் நிலையத்திற்கு சென்று “சார்.. நான் தந்தையை கொலை செய்து விட்டேன்... என கூறி கண்ணீர் விட்டழுதுள்ளார்.
தாக்குதல் மேற்கொண்ட நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


Comments
Post a Comment