பிறக்காத குழந்தைக்கு எதற்காகச் சோதிடம்? கோத்தபாயவை கடிந்தார் மல்வத்தை பீடாதிபதி
பிறக்காத குழந்தைக்கு ஏன் சோதிடம் பார்க்கிறீர்கள் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ கண்டியில் மல்வத்த, அஸ்கிரிய பீடாதிபதிகளை நேற்றுமுன்தினம் சந்தித்தார். தம்மைக் கைதுசெய்வதற்கு அரசு முற்படுவதாக அவர் மகாநாயக்க தேரர்களிடம் முறையிட்டுள்ளார்.
அத்துடன், அரசமைப்புத் தொடர்பிலும் பேசியுள்ளார். இதன்போது பதிலளித்த மல்வத்தை பீடத்தின் அனுநாயக்க தேரர், அரசமைப்பு தொடர்பாக மஹிந்த அணியினரான பொது எதிரணியினர்a வெளியிடும் எதிர்ப்புக்குக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
"உத்தேச அரசமைப்புக்கு எதிர்ப்புத் தெரிவிப்பது எந்த அடிப்படையும் அற்றது. இது பிறக்காத குழந்தைக்குச் சோதிடம் பார்ப்பது போன்றது. அரசமைப்பு வரைபு உருவாக்கப்படாத நிலையில் அதற்கு எதிர்ப்பை வெளியிடுவது அர்த்தமற்றது.
நாடாளுமன்றத்தில் தினேஷ் குணவர்தன ஆவேசமாக ஆற்றும் உரைகளை நான் கவனித்து வருகின்றேன். அதில் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை.
நாங்கள் ஜனாதிபதியைச் சந்தித்து சாதாரண மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்குமாறு வலியுறுத்தியிருக்கின்றோம்.
விலைவாசி அதிகரித்து மக்கள் சாப்பிடமுடியாத நிலையில் இருக்கின்றனர் என்பதைத் தெரியப்படுத்தியிருக்கின்றோம்'' என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை, சில தினங்களுக்கு முன்னர் பௌத்த மதத்தின் முக்கிய தேரர்கள் ஒன்றுகூடி, புதிய அரசமைப்புத் தேவையில்லை என்று கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


Comments
Post a Comment