உள்ளூராட்சித் தேர்தல் திருத்தச் சட்டமூலம் மீது நாடாளுமன்றில் விவாதம்


உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் அடுத்த மாதம் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று சபை முதல்வரும் அமைச்சருமான லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அத்தியாவசிய பொதுச்சேவைகள் சட்டத்தின் கீழ் எரிபொருள் வழங்கல் மற்றும் விநியோகம் ஆகியவற்றை அத்தியாவசிய சேவையாக அறிவிக்கும் பிரகடனம் மீதான விவாதம் நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் நடைபெற்றது.

அது தொடர்பிலான வாக்கெடுப்பு நேற்று மாலையே நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், மேலும் சில உறுப்பினர்கள் இதுபற்றி பேசவிருப்பதால் இன்று வெள்ளிக்கிழமை வாக்கெடுப்பு நடத்தப்படும் என சபை முதல்வர் அவைக்கு அறிவித்துள்ளார்.

இதன்போது, உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்கள் (திருத்தச்) சட்டமூலம் எப்போது விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்குப் பதிலளிக்கையிலேயே சபை முதல்வர் மேற்கண்ட தகவலை வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, அம்பாந்தோட்டை துறைமுகம் விவகாரம் குறித்த ஒப்பந்தம் தொடர்பில் நாடாளுமன்றத்தில் இன்று விவாதம் நடத்தப்படவுள்ளது.

Comments