முஸ்லிம் கூட்டமைப்பு மு.கா.வை எதிர்க்கவா?
இலங்கையின் அரசியல் வரலாற்றில் முஸ்லிம்கள் 1985 கள் வரைக்கும் இரு பெரும் தேசிய கட்சிகளுக்கே வாக்களித்து வந்திருக்கிறார்கள்.
அந்த வகையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியுமே முஸ்லிம் சமூகத்தினதும் தெரிவாக இருந்து வந்தன.
இருந்தபோதிலும் நாட்டில் இனப் பிரச்சினையொன்று தோற்றம் பெற்றத்தைத் தொடர்ந்து முஸ்லிம் சமூகத்தின் தனித்துவமான அபிலாஷைகளுக்காக குரல் கொடுக்கக் கூடிய தனித்துவக் கட்சியின் அவசியம் உணரப்பட்டது. இத் தருணத்தில்தான் மர்ஹூம் அஷ்ரப் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் கட்சியை ஸ்தாபித்து அதனை பதிவு செய்யப்பட்ட தேசிய அரசியல் இயக்கமாகவும் வளர்த்தெடுத்தார்.
எனினும் அவரது மறைவுக்குப் பிற்பாடு முஸ்லிம் காங்கிரஸினுள் ஏற்பட்ட தலைமைத்துவ, பதவிப் போட்டிகள் காரணமாக அதாவுல்லாஹ் தலைமையில் தேசிய காங்கிரஸும் ரிஷாத் பதியுதீன் தலைமையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் தோற்றம் பெற்றன.
இதற்கப்பால் இந்த வருடம் புதிதாக பதிவு செய்யப்பட்ட ஆறு அரசியல் கட்சிகளுக்குள் முஸ்லிம்களால் நிர்வகிக்கப்படும் இரு கட்சிகளும் அடங்குகின்றன. அவை பொறியியலாளர் அப்துர் ரஹ்மானைத் தவிசாளராகக் கொண்ட நல்லாட்சிக்கான தேசிய முன்னணியும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அஸாத் சாலியை செயலாளராகக் கொண்ட தேசிய ஐக்கிய முன்னணியும் ஆகும். இவற்றுக்கு அப்பால் செயற்பாட்டுக் களத்தில் இல்லாத, ஆனால் முஸ்லிம்களின் பெயர்களில் பதிவு செய்யப்பட்டுள்ள மேலும் சில அரசியல் கட்சிகளும் உள்ளன.
ஆக மொத்தத்தில் இந்த நாட்டில் மொத்தமாக பதிவு செய்யப்பட்டுள்ள 70 அரசியல் கட்சிகளில் ஐந்து கட்சிகள் தற்போது முஸ்லிம் சமூகத்தின் நலன்களை முன்னுரிமைப்படுத்தி அரசியலை முன்கொண்டு செல்வதற்காக செயற்பாட்டுக் களத்தில் உள்ளன. அந்த வகையில் இதனை முஸ்லிம் சமூகத்தின் பலமாக ஒருபுறம் கருத முடியும்.
ஆனால் துரதிஷ்டவசமாக இதுவே முஸ்லிம் சமூகத்தின் பலவீனமாகவும் இன்று மாறியுள்ளது. மேற்படி அரசியல் கட்சிகள் வெவ்வேறுபட்ட கொள்கைகளுக்காகவும் நலன்களுக்காகவும் பிரிந்து நின்று செயற்பட்டு வருவதன் காரணமாக முஸ்லிம் சமூகம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளின் போது ஒற்றுமைப்பட்டு நின்று அவற்றை எதிர்கொள்ள முடியாத நிலை தோற்றம் பெற்றுள்ளது.
மேற்படி கட்சிகள் சமூகத்தின் நலன்சார்ந்த விவகாரங்களில் பொது உடன்பாடுகளுக்கு வந்து செயற்பட வேண்டும் என பல தரப்புகளினாலும் வலியுறுத்தப்பட்டு வருகின்ற போதிலும் அது நடைமுறைச்சாத்தியமற்றதாகவே தொடர்ந்து வருகிறது.
இந் நிலையில்தான் தற்போது 'முஸ்லிம் கூட்டமைப்பு' எனும் பெயரில் முஸ்லிம் அரசியல் கட்சிகளை ஓரணியில் கொண்டு வருவதற்கான முஸ்தீபுகளும் கலந்துரையாடல்களும் இடம்பெற்று வருகின்றன. முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் ஹஸன் அலி மற்றும் அக் கட்சியின் முன்னாள் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் இந்த முஸ்லிம் கூட்டமைப்புக்கான கதையாடல்களை தொடர்ந்து வருகின்றனர்.
அத்துடன் ஏனைய கட்சிகளான தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகியவற்றுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளதாகவும் கூறுகின்றனர். இருப்பினும் இது விடயத்தில் இன்னமும் தெளிவான பேச்சுவார்த்தைகள் இடம்பெறவில்லை என்பதே யதார்த்தமாகும்.
இதற்கிடையில் பிரதான முஸ்லிம் கட்சியாகக் கருதப்படும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இந்த முஸ்லிம் கூட்டமைப்பில் இணைவதற்கான எந்தவித சாத்தியப்பாடுகளுமில்லை. அதனை அக் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீமின் வவுனியா உரை உறுதிப்படுத்துகிறது. தமது கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் மு.கா.வுடன் மோதுவதற்கு எடுக்கும் முயற்சியே இந்தக் கூட்டமைப்பு என விமர்சித்திருக்கிறார்.
அதேபோன்றுதான் முஸ்லிம் கூட்டமைப்புகளுக்கான முயற்சிகளை முன்னெடுப்போரும் மு.கா.வை அதில் இணைத்துக் கொள்ள ஒருபோதும் விரும்பப் போவதில்லை என்பதே யதார்த்தமாகும்.
அந்தவகையில் முஸ்லிம் கூட்டமைப்பு என்பதற்கு முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியாளர்களின் கூட்டமைப்பாகவோ அல்லது மு.கா. எதிரிகளின் அணியாகவோ அமையுமாயின் அது முஸ்லிம் சமூகத்தில் இன்னுமின்னும் அரசியல் அனர்த்தங்களுக்கே வழிவகுப்பதாக அமையும்.
முஸ்லிம் கூட்டமைப்பு என்பது தமிழ் தேசியக் கூட்டமைப்பு போன்று சகல பிரதான முஸ்லிம் கட்சிகளையும் உள்ளடக்கிய ஒன்றாக அமையும் பட்சத்திலேயே அது சமூகத்திற்குப் பலமாகவும் வெற்றிகரமானதாகவும் அமையும்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் கவனம் செலுத்துவார்கள் என நம்புகிறோம்.


Comments
Post a Comment