தந்துரை முஸ்லிம் இளைஞனின் பிணை கோரிக்கை நிராகரிப்பு
முகப்புத்தகம் மூலம் புத்தரை அவமதித்தார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தந்துரை பகுதியை சேர்ந்த இளைஞனுக்கு பிணை வழங்குமாறு விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 9 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு கண்டி நீதிவான் நீதிமன்றில் நேற்றுமுன்தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதிவான் குறித்த இளைஞனுக்கான பிணை கோரிக்கையை வழங்க மறுத்தார்.
தந்துரை கிராமத்தைச் சேர்ந்த 21 வயது முஸ்லிம் இளைஞர் ஒருவர் புத்தபெருமானை அவமதிக்கும் வகையில் தனது முகநூலில் கருத்துகள் வெளியிட்டதையடுத்து அக்கிராமத்தில் அசம்பாவிதங்கள் ஏற்பட்டன. பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் முஸ்லிம்களின் 9 வீடுகளை தாக்கி சேதப்படுத்தினார்கள்.
இச்சம்பவம் தொடர்பில் மூன்று இளைஞர்கள் கடுகண்ணாவைப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு கண்டி நீதிவான் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்டனர். புத்தரை அவமதித்து தனது முகநூலில் பதிவுகளை பதிவேற்றிய முஸ்லிம் இளைஞரும் முஸ்லிம்களின் வீடுகளைத் தாக்கி சேதப்படுத்திய பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
எனினும், விளக்கமறியலில் வைக்கப்பட்ட மூன்று இளைஞர்களில் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த இரண்டு இளைஞர்களும் 14 நாட்களின் பின்பு பிணையில் விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் முஸ்லிம் இளைஞருக்கு பிணை மறுக்கப்பட்டது அவர் தொடர்ந்தும் பிணையில் வைக்கப்பட்டுள்ளார்.


Comments
Post a Comment