நிம்மதியான எதிர்காலத்திற்கான அரசியல் யாப்பை உருவாக்க கூட்டமைப்பும் மு.கவும் முயற்சி
நிம்மதியான எதிர்காலத்திற்கான அரசியல் யாப்பை உருவாக்க கூட்டமைப்பும் நாமும் முயற்சித்து வருகின்றோம் என நகர திட்டமிடல் மற்றும் நீர்வழங்கல் வடிகால அமைப்பு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
வவுனியா முஸ்லீம் மகாவித்தியாலயத்தில் நீர் சுத்திகரிப்பு தொகுதியை கையளித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
இந்த அரசின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காணுதலாகும். அதில் வட மாகாணம் சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்குவதில் ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடும் போது மிக பின்தங்கிய நிலையில் இருந்ததை அவதானித்து நான் பதவியேற்றதில் இருந்து இவ்வாறான வேலைத்திட்டத்தினை ஆரம்பித்துள்ளோம்.
யாழ். மாவட்டத்திற்கும் புதிய நீர் விநியோகத் திட்டங்களை அறிமுகப்படுத்தும் அதேநேரம் நாட்டில் முதன்முதலாக கடல் நீரை சுத்திகரித்து வழங்குகின்ற செயற்றிட்டத்தினை சுமார் 250 மில்லியன் டொலர் செலவு செய்து அமுல்படுத்த தயாராகிக் கொண்டிருக்கின்றோம்.
அதேபோல் தீவுப் பகுதிகளுக்கும் வேறு வேறான திட்டங்களை அறிமுகப்படுத்தும் செயற்பாடுகளும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆனையிறவு கடல்நீர் ஏரியில் இருந்தும் கடல் நீரை சுத்திகரித்து வழங்கும் செயற்றிட்ட அறிக்கையும் தற்போது தயாரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.
இவ்வாறு பல செயற்பாடுகளை முன்னெடுத்து வடமாகாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை காண்பதிலே நாம் மிக முனைப்புடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.
அத்துடன் ஏனைய அபிவிருத்தி வேலைத்திட்டங்களில் எனது அமைச்சு செயற்பட்டு வருகின்றது. பாதை அபிவிருத்தி நகர அபிவிருத்தி திட்டங்களிலும் எங்களால் இயன்றளவு செயற்படுத்தி வருகின்றோம்.
அதற்கு ஒத்துழைப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் உட்பட வட மாகாண சபையும் ஒத்துழைப்பை வழங்கி வருகின்றது.
முதலமைச்சர் செயலகமும் சில செயற்றிட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகின்றது.
கேள்விப்பத்திரம் கோரி ஒரு வருடத்திற்குள் செய்து முடிக்க வேண்டிய நெருக்கடிகளை எல்லாம் தீர்த்து வைக்கும் முயற்சியில் வடமாகாண முதலமைச்சரின் செயலகத்தின் அனுசரணை தேவைப்படுகின்றது. ஆகவே அதற்கான செயற்பாடுகளையும் நாம் சேர்த்து செய்து கொண்டு போகின்றோம்.
இந்த அரசாங்கத்தின் பங்காளிகள் என்ற அடிப்படையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும் நாங்களும் இந்த நாட்டிற்கு நிரந்தரமான நிம்மதியான எதிர்காலத்தை நாடிய அரசியல் யாப்பு எங்களுடைய அபிலாசைகளையும் தீர்த்து வைக்கும் வகையில் அமைப்பதற்கான முயற்சிகளில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றோம்.
இந்நிலையில் வழமை போல் சில தீவிரவாத இயக்கங்கள் முட்டுக்கட்டைகளை போடும் நிலவரம் தென்பட்டாலும் அவற்றையெல்லாம் எங்களுடைய அரசியல் தலைமைகள் சாதுரியமாக சாணக்கியமாக சமாளித்து அனைத்து சமூகங்களுக்கும் கண்ணியம் கௌரவம் சமத்துவம் கிடைக்கும் வகையில் இந்த நாட்டிற்கு என புதிய அரசியல் யாப்பை உருவாக்குவதற்கு பிரார்த்தனை செய்கின்றேன் என்றார்.


Comments
Post a Comment