மகாநாயக்க தேரர்களின் அறிவிப்பால் நாடாளுமன்றில் சர்ச்சை: ஆவணங்களுடன் அவைக்குள் வந்தார் பிரதமர்



நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விகளால் சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நாடாளுமன்றம் நேற்று முற்பகல் 10.30 மணிக்கு கூடியது.

தினப்பணிகள் முடிவடைந்த பின்னர் மீன்பிடி அமைச்சு குறித்த விவாதம் ஆரம்பமானது. இதன்போதே தினேஷ் குணவர்தன எழுப்பிய கேள்விகளால் சபையில் கடும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.

மகாநாயக்க தேரர்களின் அறிவிப்புத் தொடர்பில் அமைச்சர் ராஜித சேனாரத்ன வெளியிட்ட கருத்துக் குறித்தும், புதிய அரசமைப்புக்கான வழிநடத்தல் குழுவின் அறிக்கை சம்பந்தமாகவும் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் ஆளும் - எதிரணி உறுப்பினர்களிடையே சூடான வாதப்பிரதிவாதங்கள் இடம்பெற்றுள்ளன.

விவாதத்தின் நடுவில் ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி சர்ச்சைக்கு துவக்கப்புள்ளியை தினேஷ் குணவர்தன வைத்துள்ளார்.

"ஒற்றையாட்சி என்ற சொற்பதத்தில் தொடர்ந்தும் சர்ச்சை நீடிக்கின்றது. தமிழில் ஒருமித்த நாடு என இருக்கின்றது.

அதன் ஆங்கில சொற்பதம் வழங்கப்படவில்லை. பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமை குறித்தும் மாற்று வழிகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அரசமைப்பு குறித்து பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நடத்தப்பட்ட கருத்தரங்கில் வழிநடத்தல் குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அது இரகசியமல்ல. அதில் பல விடயங்கள் உள்ளன. இதையடுத்தே மகாநாயக்க தேரர்கள் விசேட அறிவிப்பொன்றை விடுத்தனர். எனினும், "மகாநாயக்க தேரர்கள் அச்சப்படத் தேவையில்லை.

மக்கள் ஆணைப்படி பணி தொடரும்'' என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். இவர் நாட்டை தவறாக வழிநடத்தும் வகையில் சில கருத்துகளை வெளியிட்டுள்ளார்.

இதன்போது குறுக்கீடு செய்த ஜே.வி.பியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க,

"அரசமைப்புப் பணி இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை. அதனுடன் தொடர்புடைய எந்தவொரு அறிக்கையும் உத்தியோகப்பூர்வமாக வெளியிடப்படவில்லை.

வழிநடத்தல் குழுவில் தொடர்ச்சியாக பேச்சுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அறிக்கை அரசமைப்பு சபையான நாடாளுமன்றத்துக்கே வழிநடத்தல் குழுவால் சமர்ப்பிக்கப்படும்.

நிலைமை இப்படியிருக்கையில் தினேஷ் குணவர்தன கூறுவதுபோல் அறிக்கை வெளியாகிருக்குமானால் அது பாரதூரமான விடயமாகும்'' என்று சுட்டிக்காட்டினார்.

இதற்குப் பதிலளித்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க,

"வழிநடத்தல் குழுவின் அறிக்கை அரசமைப்பு சபைக்கே சமர்ப்பிக்கப்படும். அந்த அறிக்கை இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை.

எனினும், பலதரப்பினரிடமிருந்தும் பல்வேறு வகையான யோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளன. அவற்றின் சாராம்சம் தொகுக்கப்பட்டுள்ளது.

எந்தச் சந்தர்ப்பத்திலும் பௌத்த மதத்துக்குரிய முன்னுரிமை முக்கியத்துவம் நீக்கப்படாது. இதுபற்றி மகாநாயக்க தேரர்களுக்கும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது'' என்று குறிப்பிட்டார். இதன்போது முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் சபையில் இருந்தார்.

விளக்கமளித்த பின்னர் அவையிலிருந்து வெளியேறிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சிறிதுநேரத்தின் பின்னர் சில ஆவணங்களுடன் அவைக்குள் வந்தார்.

"பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்படத்தில் இந்த அறிக்கைகளே வழங்கப்பட்டுள்ளன. அரசமைப்பு இன்னும் இறுதிப்படுத்தப்படவில்லை'' எனக் குறிப்பிட்டு அவற்றை சபையில் ஆற்றல்படுத்தினார். அதன்பின்னர் சர்ச்சை ஓய்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

  1. போட் பார்க்காமல் ஏறி விடுகிறார்கள் என்பது இதன் மூலம் புரிகிறத.

    அன்றேல் என்ன பதிலைப் எப்படி கேள்வி கேட்க வேண்டும் என்பதை அறியாத நிலை.

    உள்ளத்தில் ஒன்று வாயில் ஒன்று என்ற வகையில் விவாதங்கள்.

    ஒருமித்த நாடு என்ற பதம் ஒற்றை ஆட்சி என்ற பதத்துக்கு சமானமாகாது.

    ReplyDelete

Post a Comment