மக்களை நெருக்கடியில் தள்ளும் வேலைநிறுத்தப் போராட்டங்கள்
நாட்டில் அண்மைக்காலமாக வேலை நிறுத்தப் போராட்டங்களும் பணிப் பகிஷ்கரிப்புகளும் அதிகரித்து வருவதானது பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையை பெரிதும் பாதிப்பதாக அமைந்துள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்து பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தொழிற்சங்கங்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டன. இதன் காரணமாக நாடு முழுவதிலுமுள்ள பெற்றோலிய கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நேற்று முன்தினம் இரவு பாரிய நெரிசல் ஏற்பட்டது. மக்கள் தமது வாகனங்களுக்கு எரிபொருளை நிரப்பிக் கொள்ள நீண்ட வரிசையில் காத்து நின்றனர். இதனால் கொழும்பு உள்ளிட்ட நகரங்களில் வாகன நெரிசல் ஏற்பட்டது.
அதேபோன்று நேற்றுக் காலை முதல் மாலை வரை அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேலைநிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டதால் நாடளாவிய ரீதியில் நோயாளிகள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர்.
மருத்துவ பீட மாணவ செயற்பாட்டுக் குழுவின் ஒருங்கிணைப்பாளரை கடத்த முயற்சித்தமை, மருத்துவ சங்கத் தலைவரை நியமிப்பதில் ஏற்பட்டுள்ள ஒழுங்கீனங்கள், சைட்டம் விவகாரத்தில் அரசாங்கம் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்தே வைத்தியர்கள் இந்த வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மருத்துவ சங்கத்துக்கும் அரசாங்கத்துக்குமிடையில் தொடரும் இழுபறிகள் காரணமாக மிகக் குறுகிய காலத்திற்குள் பலமுறை வைத்தியர்கள் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோன்று துறைமுக தொழிற்சங்கமும் இன்றைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளது.
அண்மையில் தபால் தொழிற்சங்கங்கள் நடத்திய வேலைநிறுத்தம் காரணமாக நாடளாவிய ரீதியில் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்கொண்டனர். மாணவர்கள் பரீட்சைக்கும் பல்கலைக்கழகங்களுக்கும் உரிய காலத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை இதனால் ஏற்பட்டது. இதேபோன்றுதான் ரயில் போக்குவரத்து துறையினரும் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
இவ்வாறு பொதுச் சேவையுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரும் நினைத்தமாத்திரத்தில் வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவது மக்களையே பெரும் கஷ்டத்தில் ஆழ்த்துகிறது.
இந்த நிகழ்வுகளின் பின்னால் அரசியல் மறைகரங்களும் இல்லாமலில்லை. நாட்டு மக்கள் மத்தியில் அரசாங்கம் தொடர்பான அதிருப்தியை தோற்றுவிப்பதற்கான முயற்சிகளாகவும் இவை நோக்கப்படுகின்றன.
எனவேதான், அரசாங்கம் இவ்வாறான தொழிற்சங்கங்களின் நியாயமான கோரிக்கைகளை கருத்திற் கொண்டு அவற்றைத் தீர்த்து வைக்க முன்வர வேண்டும். அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அதேபோன்றுதான் மக்களை சிரமத்தில் ஆழ்த்துகின்ற இவ்வாறான வேலைநிறுத்தங்களை தவிர்த்து வேறு போராட்ட வழிமுறைகள் குறித்து தொழிற்சங்கங்கள் சிந்திக்க வேண்டும்.


Comments
Post a Comment