லட்சக்கணக்கான உயிர்களை காவு கொண்ட போருக்கு பொறுப்புக்கூற வேண்டியவர்கள் அரசியல்வாதிகளே!
லட்சக்கணக்கான உயிர்களை காவு கொண்ட போருக்கு முதலில் பொறுப்புக் கூற வேண்டியவர்கள் அரசியல்வாதிகள் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
புதிய அரசியலமைப்பு சட்டம் ஒன்று கொண்டு வருவதற்காக உருவாக்கப்பட்டு வருகிறதே தவிர வெறுமனே பார்த்து கொண்டிருப்பதற்காக அல்ல எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய அரசாங்கத்திற்கு 62 லட்சம் மக்கள் ஆணையை வழங்கியுள்ளனர். இந்த மக்கள் ஆணைக்கு அமையவே அரசாங்கம் செயற்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அஸ்கிரிய மஹா விகாரையில் கூடிய மாநாயக்க தேரர்கள் யோசனையை ஒன்றை நிறைவேற்றியுள்ளதுடன் அதற்கு அமைய புதிய அரசியலமைப்புச் சட்டம் தேவையில்லை எனக் கூறுகின்றனர்.
மாநாயக்க தேரர்களின் இந்த நிலைப்பாடு குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன என்று ஊடகவியலாளர் ஒருவர் கேள்வி எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 62 லட்சம் என்ற மக்கள் ஆணைக்குள், பௌத்த பிக்குகள், ஏனைய மதத் தலைவர்களும் அடங்குகின்றனர்.
நாடாளுமன்றத்தின் புதிய அரசியலமைப்புச் சட்டவாக்க சபையின் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இறுதி முடிவை நாடாளுமன்றம் எடுக்கும்.
ஜே.ஆர் ஜயவர்தன அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றிய நாளில் இருந்து அதனை ரத்துச் செய்யுமாறு அழுத்தம் கொடுத்து எதிர்ப்புகளை நடத்தி அந்த அரசியலமைப்புச் சட்டத்தை விமர்சித்தவர்கள் தற்போது அந்த அரசியலமைப்புச் சட்டமே இருக்க வேண்டும் என்று ஏன் யோசனை முன்வைக்கின்றனர்.
உலகில் நடைமுறையில் உள்ள அனைத்து அரசியலமைப்புச் சட்டங்களும் மாற்றப்படுகிறது.
அரசியலமைப்புச் சட்டவரைவு உருவாக்கப்பட்ட பின்னர் அது நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்டு, மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தில் நிறைவேற்றிய பின்னர், சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும்.
அரசியலமைப்பு மற்றும் சட்ட ரீதியாக இந்த நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும்.
1972ம் ஆண்டு குடியரசு அரசியலமைப்புச்சட்டம், 1978ம் ஆண்டு ஜே.ஆர். ஜயவர்தன கொண்டு வந்த அரசியலமைப்புச் சட்டம் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 18வது அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றிய போது அந்த நடவடிக்கைகள் ஜனநாயக ரீதியாக நடைபெறவில்லை.
இந்த மூன்று சந்தர்ப்பங்களிலும் ஆட்சியாளர்கள் தமது அதிகாரத்தை வலுப்படுத்திக்கொண்டனர்.
எனினும் வரலாற்றில் முதல் முறையாக ஜனாதிபதி ஒருவர் தனது சுயவிருப்பத்தின் பேரில் ஜனநாயக முறையில் அதிகாரத்தை மக்களுடன் பகிர்ந்து கொள்ள இருக்கும் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்ட ரீதியான நிலைமையை மதித்து செயற்படும் சந்தர்ப்பத்தில் அதற்கு ஏன் எதிர்ப்பை வெளியிடுகின்றனர் என்பது எனக்கு புரியவில்லை.
இதில் இருப்பது தத்தமது அரசியல் அதிகார மோகமே அன்றி வேறு எதுவுமில்லை.
நாட்டில் லட்சக்கணக்கான உயிர்களை காவு கொண்ட போருக்கு முதலில் பொறுப்புக் கூறவேண்டியவர்கள் இப்படியான அரசியல்வாதிகள் என்பதுடன் இரண்டாவதாக பொறுப்புக் கூறவேண்டியவர்கள் ஊடகவியலாளர்கள் எனவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.


Comments
Post a Comment