மஹிந்த, கோத்தாவை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளிவிடும் புதிய சட்டம்


பலவந்த காணாமல் போதல்களுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தின் அடிப்படையிலான புதிய சட்டம் மஹிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச மற்றும் படையதிகாரிகள் உள்ளிட்டோரை பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளிவிடும் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.

பலவந்த காணாமல் போதல்களிலிருந்து அனைவரையும் பாதுகாக்கும் சர்வதேச பிரகடனச் சட்டத்தை தற்காலிக அடிப்படையில் அன்றி முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.

இந்த பிரகடனம் குறித்த சட்டம் இலங்கை நாடாளுமன்றில் சமர்ப்பிக்க எவ்வித நியாயமும் கிடையாது.

வெளிவிவகார அமைச்சும் அதன் அதிகாரிகளும் இந்த சட்டத்தில் கையொப்பமிட்டு பாரிய தவறிழைத்துள்ளனர்.

இந்த சட்டத்தின் ஊடாக போரை முடிவுக்குக் கொண்டு வந்த படைவீரர்கள், அதற்கு தலைமை வழங்கிய முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உள்ளிட்டவர்கள் கடும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படுவர்.

எளிமையாகக் கூறினால் இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டால் வெளிநாடு ஒன்றுக்கு இந்த நாட்டின் பிரஜையை ஏதேனும் ஓர் குற்றச்சாட்டின் அடிப்படையில் அந்நாட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க முடியும்.

அவ்வாறான கோரிக்கை விடுக்கப்பட்டால் குறித்த நபரை அந்ந நாட்டிடம் இலங்கை ஒப்படைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும் எனவும் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

Comments