மல்வத்து பௌத்த பீடத்தை பிளவுபடுத்த போவதாக மகிந்த கூறினார்: ரணில்


பௌத்த விகாரைகளை நிர்வாகம் செய்யும் எந்த அதிகாரமும் அரசாங்கத்திற்கு இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

விகாரைகளின் விவகாரங்களில் தலையிடவும் அரசாங்கத்திற்கு அதிகாரமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இளம் பிக்கு ஒன்றியத்தின் பிக்குமாருடன் அலரி மாளிகையில் இன்று நடந்த பேச்சுவார்த்தையில் பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நான் தேர்தல் காலத்தில் கூறியவற்றில் இன்னும் நிறைவேற்ற வேண்டியவை உள்ளன. கடன் சுமை காரணமாக எதனையும் சரியாக செய்ய முடியாத கடினமாக நிலைமை காணப்பட்டது.

தற்போது அந்த பிரச்சினைகள் முடிந்து விட்டது. இந்த நிலையில், பௌத்த மதத்திற்கு ஆபத்து கோஷத்திற்குள் இவர்கள் அனைவரும் சிக்கியுள்ளனர். 

மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மல்வத்து பௌத்த பீடத்தை இரண்டாக பிளவுப்படுத்த போவதாக கூறினர். தலதா மாளிகை மீது குண்டு தாக்குதல் நடத்த போவதாக கூறினர். இவற்றை விட பெரிய தவறுகள் இருக்க முடியாது.

மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பௌத்த பீடங்கள் இடையில் பேதங்களை ஏற்படுத்த முயற்சித்தது. 

நாட்டின் அரசாங்கம் ஒன்று மல்வத்து பௌத்த பீடத்தை இரண்டாக பிளவுபடுத்த போவதாக கூறும் போது அதனை வெளியிட ஊடகங்கள் பயந்தன. இதனை விட என்ன இருக்கின்றது.

விகாரைகளை நிர்வாகம் செய்ய எங்களுக்கு அதிகாரம் இல்லை. இந்த விளையாட்டை இப்போது நிறுத்துங்கள். நாங்களும் பௌத்தர்கள், மதத்தை இழுத்துக் கொள்ள வேண்டாம். எங்களாலும் அதனை செய்ய முடியும். 

இவை உள்ளூராட்சி சபைத் தேர்தல் நெருங்கும் போது செய்யும் விளையாட்டு எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Comments