யாழில் விசேட அதிரடி படையினர் குவிப்பு ; தேடுதல் நடவடிக்கை தீவிரம்


யாழில் விசேட அதிரடி படையினர் பல்வேறு பகுதிகளில் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதுடன், பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரிகளான குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஆர்.எம்.டி.கே தர்மிக்க ரத்நாயக்கா(வயது-34) மற்றும் மன்னார் பகுதியை சேர்ந்த ஏ.கே சுரேந்திரன் (வயது-26) ஆகிய இருவர் மீதும் பட்டப்பகலில் நேற்று ஒரு குழுவினரால் வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இந்தத் தாக்குதல் மேற்கொண்டது யாரென இதுவரையில் தகவல் வெளியாகவில்லை. சம்பவம் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக 4 பொலிஸ் குழுக்கள் இணைக்கப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட இரு பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
4 மோட்டார் சைக்கிள்களில்10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் வந்து இத்தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். வாள் மற்றும் பாரிய கூர்மையான ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்நிலையில் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர யாழ்ப்பாணத்திற்கு இன்று (31) திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

– பாறுக் ஷிஹான் –

Comments