முஸ்லிம் கூட்டமைப்பு உருவாக்க முஸ்தீபு
முன்னாள் மு.கா. செயலாளர் ஹசன் அலி மும்முரம்
வடக்கு, கிழக்கில் வாழும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு அவற்றுக்கான தீர்வுகளை வலியுறுத்தும் ஓர் அரசியல் கட்டமைப்பு முஸ்லிம் கூட்டமைப்பு என்ற பெயரில் உருவாக்கப்படவுள்ளதாகவும் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் முன்னாள் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹசன் அலி தெரிவித்தார்.
இதற்கென முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவின் தலைமையிலான தேசிய காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும்
நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஆகிய அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தைகள் நடத்தியுள்ளதாகவும் கொள்கையளவில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
இது தொடர்பில் எம்.ரி. ஹசன் அலி தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்;
அரசாங்கம் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இனப்பிரச்சினையினை தீர்ப்பதற்கான தீர்வுத் திட்டமொன்றினை முன்வைக்கவுள்ள நிலையில் முஸ்லிம் தரப்பு தமது அழுத்தங்களையும் பிரயோகிக்க வேண்டியுள்ளது. தமிழர்களின் உரிமைப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றதோ அவ்வாறு செயற்படுவதற்கு முஸ்லிம் தரப்பில் ஓர் அரசியல் கட்டமைப்பு தேவை. இதனை மையமாகக் கொண்டே முஸ்லிம் அரசியல் கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
உருவாக்கப்படவுள்ள முஸ்லிம் கூட்டமைப்பு உள்ளூராட்சி, மாகாண சபை மற்றும் பொதுத் தேர்தல்களில் வட கிழக்கை மையமாகக் கொண்டு போட்டியிடும்.
இக்கூட்டமைப்பை முஸ்லிம்கள் பிரதேசவாத அரசியல் அமைப்பாக நோக்கக் கூடாது. வட கிழக்கிலே முஸ்லிம்கள் காணிப் பிரச்சினை உட்பட பல பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கிறார்கள். கிழக்கில் மிகவும் செறிவான சனத் தொகைப் பரம்பலைக் கொண்டுள்ளார்கள்.
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளை முன்வைத்து தனியான ஓர் அரசியல் அலகு தேவை என அப்பகுதி புத்திஜீவிகள் அழுத்தங்களைப் பிரயோகித்ததன் காரணமாகவே இக்கூட்டமைப்பு உருவாக்கப்படவுள்ளது.
வடகிழக்கு மாகாண முஸ்லிம் பிரச்சினைகளுக்காக உருவாக்கப்படும் முஸ்லிம் கூட்டமைப்பு எதிர்காலத்தில் தேசிய ரீதியில் தம்மை விரிவுபடுத்தும் நிலையும் ஏற்படலாம். நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளுக்கு எதிராகவும் தீர்வுகளை நோக்கியும் முஸ்லிம் கூட்டமைப்பு குரல் கொடுக்கும் என்றார்.


Comments
Post a Comment