எனக்கு மன்னிப்பு தேவையில்லை! கோத்தபாய
ராஜபக்சவினருக்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என சிலர் கூறுவதாகவும் எனினும் தனக்கு அப்படியான மன்னிப்பு அவசியமற்றது என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மிகப் பெரிய ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் இன்று ஆஜராகிய பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
எனக்கு மன்னிப்பு அவசியமில்லை. நியாயமே வேண்டும். தென்னந்தோட்டம், தேயிலை தோட்டம், இறப்பர் தோட்டம் மற்றும் வீடுகளை கைப்பற்றிக்கொள்ளவில்லை. எந்த நிறுவனத்திலும் பங்குகளை கொள்வனவு செய்யவில்லை.
இவ்வாறு ஊழல், மோசடிகளை செய்யாத என்னை ஏன் இப்படி தொந்தரவு செய்கின்றனர் என கோத்தபாய ராஜபக்ச கேள்வி எழுப்பியுள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச பாதுகாப்புச் செயலாளராக பதவி வகித்த போது, கடந்த 2014ம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சு, காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையின் இயந்திரங்களை பழைய இரும்புகளாக வெட்டி விற்பனை செய்ய இராணுவத்திற்கு அனுமதி வழங்கியிருந்தது.
இதன் மூலம் இலங்கை சீமெந்து கூட்டுத்தாபனம் மற்றும் சீமெந்து நிறுவனத்திற்கு பல கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வாக்குமூலம் ஒன்றை பெறவே கோத்தபாய ராஜபக்ச இன்று ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டிருந்தார்.


Comments
Post a Comment