கவனிப்பாரற்ற நிலையில் பானகமுவ முஸ்லிம் வித்தியாலயம்!
கட்டுகஸ்தோட்டை கல்வி வலயத்திற்குட்பட்ட அக்குறணை பானகமுவ முஸ்லிம் வித்தியாலயம் கவனிப்பாரற்ற நிலையில் காணப்படுவதாக அப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.
அக்குறணை பிரதேசத்தில் வசதி குறைந்த ஒரு பாடசாலையாக கருதப்படும் பானகமுவ முஸ்லிம் வித்தியாலயத்தில் தற்போது சுமார் 70 மாணவர்கள் ஆரம்ப பிரிவில் கல்வி கற்று வருவதாகவும் கட்டிடங்கள் அனைத்தும் பழுதடைந்த நிலையில் காணப்படுவதாகவும் இப் பாடசாலையின் அபிவிருத்திக்காக பல வருடங்களாக முயற்சி செய்து வரும் அப் பிரதேசத்தை சேர்ந்த ஜே.சஹாப்தீன் தெரிவித்தார்.
இப் பாடசாலையின் தற்போதைய நிலை தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில் சில வருடங்களுக்கு முன் இங்கு நூற்றுக்கணக்கான மாணவர் கல்வி பயின்று வந்த போதிலும் தற்போது அவ்வெண்ணிக்கை எழுபதாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் பாடசாலையின் கட்டிடங்கள் அனைததும் பழுதடைந்துள்ளதோடு கூரைகளும் உடைந்து விழுகின்ற நிலையில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்.
பாடசாலைக்கு எவ்வித அடிப்படை வசதியும் இல்லை என்றும் தெரிவித்த அவர் பாடசாலைக்கு சொந்தமான காணிக்கு பாதுகாப்பு வேலி ஒன்று அவசியம் என்றும் தெரிவித்தார்.
1983 ம் ஆண்டிற்கு பின் அரசாங்கம் எந்தவொரு புதுக் கட்டிடத்தையும் கட்டித்தரவில்லையெனவும் விளையாட்டு மைதான வசதி கூட இல்லாத நிலையிலிருப்பதாகவும் பிரதேச மக்கள் விசனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
– மொஹொமட் ஆஸிக்





Comments
Post a Comment