முஸ்லிம் கூட்டமைப்பில் முஸ்லிம் காங்கிரஸ் பெரும் அங்கமாக உள்வாங்கப்படல் வேண்டும்!

எம்.என்.எம்.யஸீர் அறபாத்-ஓட்டமாவடி(கல்குடா)

நமது நாட்டின் இன்றைய சூழ்நிலையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்களை வெற்றி கொள்வதற்கு முஸ்லிம்களுக்கு மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தப்பட வேண்டியிருக்கிறது.

முஸ்லிம்கள் தமக்கிடையே அரசியல் ரீதியாகவும் பிரிந்திருப்பதனால் சவால்களை வெற்றி கொள்வது கடினமாக இருக்கிறது. சமூகம் சார்ந்து ஒரு பிரச்சனை தேசிய ரீதியாக வரும் போது, யார் முகம் கொடுப்பது? தனித்தனிக் கட்சியாகப் பிரிந்துள்ள அரசியல் தலைமைகள், கட்சிகளிலிருந்து பிரிந்துள்ள அரசியல்வாதிகள் இப்படி ஒவ்வொருவராக பிரச்சனைகளை அணுகுவது வெற்றியளிக்காது.

எனவே தான் முஸ்லிம் அரசியல் கட்சிகளும், தனி நபர் அரசியல்வாதிகளும் ஒன்றிணைந்து முஸ்லிம் கூட்டமைப்பாகச் செயற்படும் போது, முஸ்லிம் சமூகத்தை நோக்கி வரும் சவால்களை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதனூடாக வெற்றி கொள்ளக்கூடியதாக இருக்குமென்ற எதிர்பார்ப்பு முஸ்லிம் சமூகத்திடம் இல்லாமலில்லை.

இவ்வாறு சமூக நோக்கை மாத்திரம் இலக்காகக் கொண்டு தூய்மையான முறையில் முஸ்லிம் கட்சிகளையும், முஸ்லிம் அரசியல்வாதிகளையும் ஒன்றிணைக்கும் போது, முஸ்லிம் மக்களின் அதிகப்படியான ஆதரவையும் கிழக்கின் மாகாண ஆட்சியையும் தன்னகத்தே கொண்டுள்ள கட்சியான முஸ்லிம் காங்கிரஸ் பெரும் அங்கமாக உள்வாங்கப்பட வேண்டும். அப்போது தான் கூட்டமைப்பு சாத்தியப்படும்.

எவ்வாறெனில், தமிழர்கள் தங்களுடைய பிரச்சனைகளுக்கு தீர்வைப்பெற்றுக் கொள்வதற்காக தமிழரசுக்கட்சியையும் அதன் இன்றைய தலைவர் இரா.சம்பந்தன் ஐயா அவர்களையும் பெரும் அங்கமாக உள்வாங்கியே தமிழ் தேசிய கூட்டமைப்பை உருவாக்கினார்கள்.

இதன் காரணமாகவே இன்று தங்களின் பிரச்சனைகளை சர்வேதேசத்திடமும் நாட்டுத்தலைவர்களிடமும் முன்வைத்து தீர்வைப்பெற அழுத்தம் கொடுக்கிறார்கள். தமிழரசுக்கட்சியின் மக்கள் செல்வாக்கு தமிழ் தேசிய கூட்டமைப்ப்பின் வெற்றியில் பெரும்பங்காகவும் இருக்கிறது.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸை நோக்கும் போது, முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியாக சர்வதேசமும், தேசியமும் முஸ்லிம் காங்கிரஸைப் பார்க்கிறது இதனால் தான் அடிக்கடி வெளிநாட்டு ராஜதந்திரிகளும் உள்நாட்டு தேசியத்தலைவர்களும் முஸ்லிம்களின் விடயங்கள் தொடர்பாகவும் நாட்டின் நிலைப்பாடு தொடர்பாகவும் சந்தித்துப் பேசுகிறார்கள்.

அது மாத்திரமில்லை. தனது சொந்தக்கட்சி சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெறக்கூடிய மக்கள் செல்வாக்கும் இந்தக்கட்சிக்குண்டு என்பதை கடந்த காலங்களில் நிரூபித்தும் இருக்கிறது. குறைவான ஆசனங்களை கிழக்கு மாகாண சபைத்தேர்தலில் பெற்றாலும், தனது பேரம் பேசும் சக்தியால் கிழக்கு மாகாண ஆட்சியை தன்னகத்தே கொண்டுள்ளது.

முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்களை ஒன்றிணைந்து தீர்வைப்பெற்றுக் கொள்வதற்கு திறந்த அழைப்பையும் முஸ்லிம் காங்கிரஸ் தலைமை அண்மையில் வெளியிட்டும் இருந்தது. அது மாத்திரமின்றி, முஸ்லிம் காங்கிரஸ் உயர்பீடமும் இவ்வாறு முஸ்லிம் கூட்டமைப்பு முஸ்லிம்களின் நலனை முன்னிறுத்தி இதய சுத்தியுடன் ஆரம்பிக்கப்பட்டால், அதில் முஸ்லிம் காங்கிரஸுக்கு உரிய இடம் கிடைக்கும் பட்சத்தில் கூட்டமைப்பின் வெற்றிக்கு பாடுபடத்தயாராக இருப்பதாகவே அவர்களின் கூற்றுக்கள் மூலம் விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கிறது.

இதற்கு எடுத்துக்காட்டாக அண்மையில் முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், சர்வ தேச வணிக ஆலோசகரும்.கணக்கறிஞருமான எச்.எம்.எம்.றியாழ் அவர்கள் தனது முகநூலில்  "முஸ்லிம் கூட்டமைப்பு ஓர் அருமையான யோசனை. ஸ்ரீ.ல.மு.கா. பெரும் அங்கமாக உள்வாங்கப்பட வேண்டும். முஸ்லிம்களின் அரசியல் பலம் பன்மடங்காகும். நான் பதவி மோகமில்லாமல், பாடுபடத்தயார்." எனப்பதிவிட்டிருந்தார்.

எனவே, இவ்வாறான சமூக உணர்வோடு செயற்படுவதற்கு முஸ்லிம் காங்கிரஸும் அதன் உறுப்பினர்களும் தயாராகவே இருக்கிறார்கள்.

ஆனால், முஸ்லிம் கூட்டமைப்பில் முஸ்லிம் காங்கிரஸைப் புறக்கணித்து விட்டு முஸ்லிம் காங்கிரஸிலிருந்து தங்களின் நலன்களுக்காக வெளியேறி கட்சிகள் உருவாக்கியவர்களும் தங்களுக்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என்பதால், கட்சித்தலைமைக்கெதிராகச் செயற்படுபவர்களும் முஸ்லிம் கூட்டமைப்பு எனும் பெயரில் சமூகத்திற்காக ஒன்றிணைவதாகக்காட்டி மறைமுகமாக தங்களுக்கு சவாலாக இருக்கும் முஸ்லிம் கங்கிரஸையும் அதன் தலைமையையும் அழிப்பதற்கான கூட்டமைப்பாக இந்த கூட்டைப் பயன்படுத்த முயற்சிப்பார்களாக இருந்தால், இச்செயற்பாடு சமூகத்திற்கு செய்யும் மிகப்பெரிய துரோகமாகுமென்பதில் ஐயமில்லை.

Comments