மன்னார் கரிசலில் ஏற்பட்டுள்ள மத ரீதியான முரண்பாடுகளை வன்முறையால் தீர்க்க எவரும் முயற்சிக்கக் கூடாது. அ.அஸ்மின்


மன்னார் கரிசல் கிராமத்தில் கத்தோலிக்க வணக்கஸ்தலம் மற்றும் முஸ்லிம் மையவாடி ஆகிய இரு காணிகளின் எல்லைகள் தொடர்பில் தோன்றியுள்ள பிரச்சினையினை வன்முறையைக் கொண்டு தீர்க்க இரு சமூகத்தவரும் முயலக் கூடாது என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அ.அஸ்மின் அவர்கள் இது தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மன்னார் கரிசலில் முஸ்லிம் மக்களினதும் கிறிஸ்த்தவ மக்களினதும் மதரீதியான காணி விடயத்தில் நீண்டகாலமாக சர்ச்சைகள் நிலவி வருகின்றன; இதனை சுமூகமாகத் தீர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தமை குறிப்பிடத் தக்கது. இறுதியாக நீதிமன்றுக்கு குறித்த விடயம் கொண்டு செல்லப்பட்டது, அதன் பிரகாரம் குறித்த கிறிஸ்த்தவ வணக்கஸ்தலத்திற்கான எல்லைகளை நீதிமன்று வரையறை செய்திருந்தது. அந்த எல்லைகளை நீதிமன்ற அலுவலர்கள் அடையாளமிட்டும் இருந்தனர். அதன் பிரகாரம் எல்லை வேலிகள் அமைப்பதற்கான முயற்சிகள் இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் குறித்த எல்லை வேலிகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தன. அத்தோடு வீடொன்றின் அறைக்கும் தீ வைக்கப்பட்டிருந்தது. இவ்வாறான பதற்றமான சூழ்நிலையில் பல்வேறு கட்டுக்கதைகளும் வதந்திகளாக உலாவருகின்றன. இரண்டு சமூகங்களுக்கு மத்தியிலும் வன்முறையைத் தூண்டும் செயற்பாடுகளும் திரைமறைவில் இடம்பெறுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

இப்பிரச்சினையினை சுமூகமாகத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பிலும் விட்டுக்கொடுப்புகள் அவசியப்படுகின்றன, இவ்விடயத்தை அரசியல் ரீதியாக நோக்காது சமூகரீதியாக மத ரீதியாக மதத்தலைவர்களின் மத்தியஸ்த்தத்தோடு அணுகுவது சிறப்பானதாகும். நீதிமன்றத் தீர்ப்பில் திருப்தியில்லையென்றால் அதனை மேல்முறையீடு செய்து அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குச் செல்ல முடியும். நீதிமன்றத் தீர்ப்பிற்கமைய அமைக்கப்பட்ட சுற்றுவேலிகளை தகர்த்தமை குற்றமாகும்; அதற்கு உரிய சட்ட நடவடிக்கைகள் அவசியம். அவ்வாறு வன்முறையைத் தூண்டும் விதமாக செயற்பட்டவர்கள் சட்டத்தினால் தண்டிக்கப்படும்போது அதற்குக் குறுக்காக அரசியல் தலைவர்கள் செயற்படக்கூடாது என்பதே எனது நிலைப்பாடாகும். அதேபோன்று கிறிஸ்த்தவத் தேவாலய அமைப்புக்கு எதிராக குரல்கொடுக்கின்ற முஸ்லிம் மக்களின் நியாயமான கோரிக்கைகளை இனவாதமாக அல்லது மதவாதமாக நோக்கி அவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் செயற்பாடுகளையும் நாம் அனுமதிக்க முடியாது. முஸ்லிம் மக்களின் கருத்துக்களுக்கு மதிப்பளிக்கப்படல்வேண்டும்.

எது எவ்வாராயினும் தோன்றியுள்ள அசாதாரண சூழ்நிலையினை சுமூகமாகத் தீர்ப்பதற்கு அனைத்துத் தரப்பினரும் முன்வரவேண்டும் என்று இரண்டு சமூகத்தவர்களையும் அன்போடு கேடுக்கொள்கின்றேன். என்றும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்; என்.எம்.அப்துல்லாஹ்

Comments