அரசியலுக்காக மதத்தை கையில் எடுக்காதீர்கள் – பிரதமர்
அரசியலுக்காக மத விவகாரங்களை கையில் எடுக்காதீர்கள். மத விவகாரங்களை பூதாகரமாக்கி அதனை அரசியலாக்க வேண்டாம். உள்ளூராட்சி மன்ற தேர்தலை மையமாக வைத்து நாட்டில் குழப்பம் ஏற்படுத்தும் விளையாட்டை இத்துடன் நிறுத்திக்கொள்ளுங்கள் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
இதேவேளை, புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சிக்கும் பெளத்த மதத்திற்கும் முன்னுரிமை வழங்குவதற்கு இதுவரை எவரும் எதிர்ப்பினை வெளியிடவில்லை. ஆகையால் எக்காரணம் கொண்டும் ஒற்றையாட்சியையும் பெளத்த மதத்திற்குள்ள முன்னுரிமையையும் நாம் நீக்கமாட்டோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும் புதிய அரசியலமைப்பு தொடர்பான விடயதானங்கள் குறித்தும் இளைஞர் பிக்குகள் முன்னணி நேற்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை அலரி மாளிகையில் வைத்து சந்தித்து கலந்துரையாடியது. இதன்போது பெளத்த பிக்குகள் தற்போதைய நாட்டின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதமரிடம் மாறி மாறி கேள்விக் கணைகளை தொடுத்தனர்.
இந்த சந்தர்ப்பத்தில் பதிலளிக்கும் போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.இதன்போது இளைஞர் பிக்கு முன்னணியின் தலைவர் வெலிமடை சந்திரரத்ன தேரர் கேள்வி எழுப்பும் போது, தற்போது புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படுகின்றதா? உத்தேச அரசியலமைப்பில் ஒற்றையாட்சியையும் பெளத்த மதத்திற்கான முன்னுரிமையையும் நீக்கப்போவதாக பெளத்த மக்கள் மத்தியில் தகவல்கள் கிடைத்துள்ளன.
.இது உண்மையா? ஆகவே அரசாங்கம் இந்தக் காரியங்களை செய்ய போகின்றதா? அத்துடன் தம்புள்ளை விகாரை பிறிதொரு சர்ச்சை காரணமாக மூடப்பட்டுள்ளது. ஏன் பெளத்த விகாரைகளுக்கு பூட்டுப் போடுகின்றீர்கள்? எனறு தெடராக கேள்வி எழுப்பினார்.அத்துடன் அந்த பிக்குகள் முன்னணியின் செயலாளர் வெல்லம்பிட்டிய அமல ரத்ன தேரர் கேள்வி எழுப்பும் போது, வடக்கு கிழக்கில் தொல்பொருளியல் இடங்கள் அழிக்கப்படுவது உண்மையா? தம்புள்ளை விகாரையின் உண்டியல் பிரச்சினை விகாரை மூடப்படுவதாயின் கோயில் , பள்ளிவாசல்களில் இப்பிரச்சினை இல்லையா? என கேள்வி எழுப்பினார்.
இந்த கேள்விகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கல்வி மற்றும் தொல்பொருளியல் துறை அமைச்சர் அகில விராஜ் காரியவசம் ஆகிய இருவரும் பதில் வழங்கினர். இந்த சந்திப்பில் கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம்,இளைஞர் பிக்கு முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தும் பெளத்த பிக்குகளும் பிரதமரின் சிரேஷ்ட ஆலோசகர் சமன் அத்தாவுதஹெட்டியும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கையில்,புதிய அரசியலமைப்பு தற்போது தயாரிக்கப்பட்டு வருகின்றது. எனினும் புதிய அரசியலமைப்பு எப்படி வரும் என்பது யாருக்கும் தெரியாது. குறிப்பாக எனக்கே தெரியாது. எனினும் புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சியை நீக்கப்போவதாகவும் பெளத்த மதத்திற்கான முன்னுரிமையையும் இல்லாமல் ஆக்கப்போவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஆனால் ஒற்றையாட்சியையும் பெளத்த மதத்திற்கான முன்னுரிமையை புதிய அரசியலமைப்பில் நீக்குமாறு இதுவரை யாரும் கோரவில்லை. ஒற்றையாட்சிக்கும் பெளத்த மத முன்னுரிமைக்கும் இதுவரை எவரும் எதிர்ப்பு வெளியிடவுமில்லை. எக்காரணம் கொண்டும் பெளத்த மதத்திற்கான முன்னுரிமையை நாம் நீக்கமாட்டோம். அத்துடன் ஒற்றையாட்சியை நாம் இல்லாமல் ஆக்கவுமாட்டோம். எனவே பெளத்த மத முன்னுரிமைக்கும் ஒற்றையாட்சிக்கும் எவரும் எதிர்ப்பில்லை.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் நானும் பெளத்த மதத்திற்கான முன்னுரிமையை நீக்கமாட்டோம் என உறுதியான தீர்மானம் எடுத்துள்ளோம். மேலும் இந்த தீர்மானங்களுக்கு இரு பிரதான கட்சியும் பூரண இணக்கம் வழங்கியுள்ளன. மேலும் ஏனைய மதங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளையும் நாம் வழங்குவோம். அதில் எந்தவொரு பிரச்சினையும் கிடையாது.
அத்துடன் தற்போது தம்புள்ளை விகாரையை மையாக கொண்ட பிரச்சினை தொடர்பில் ஊடகங்கள் பல செய்திகளை வெளியிட்ட வண்ணமுள்ளன. எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ வின் ஆட்சியின் போது மல்வத்து மற்றும் அஸ்கிரிய மகாநாயக்க பீடத்திற்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. அதேபோன்று தலதா மாளிகைக்கு தாக்குதல் நடத்தப்படும் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது.
அரசாங்கத்தின் அனுசரணையுடன் சங்க பீடம் இரண்டாக பிளவுபடுத்தப்பட்டது. இது பெளத்த தர்மத்திற்கு இழைக்கப்பட்ட பெரும் குற்றமாகும். இந்த சந்தர்ப்பத்தில் பெளத்த மதத்தில் அக்கறை கொண்ட ஊடகங்கள் என்ன செய்தன? அனைத்து ஊடகங்களும் அமைதி காத்தன.
இந்த சந்தர்ப்பத்தில் நான் பல தரப்பினை சந்தித்து பேசினேன். இதன்போது தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தனை அப்போது கண்டு பேசி சங்கபீடத்தின் நிலைமை குறித்து என்ன செய்வது என்று அவரிடம் கேட்டேன்.


Comments
Post a Comment