வெளிநாட்டுவாழ் யாழ் முஸ்லிம் உறவுகளை வரவேற்போம்.
வெளிநாட்டுவாழ் யாழ் முஸ்லிம் உறவுகளை வரவேற்போம்.
அன்புடன் புலம்பெயர் யாழ் முஸ்லிம் உறவுகளே அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு.
புகழனைத்தும் வல்லவன் அல்லாஹ்வுக்கே
2017 ஆகஸ்ட் முதல்வாரத்தில் வெளிநாட்டுவாழ் யாழ் உறவுகளை யாழ்ப்பாணத்தில் ஒன்றுகூடுமாறு ஒரு அழைப்பு ஐக்கிய இராச்சியத்தைத் தளமாகக் கொண்டு இயங்கும் ஒரு அமைப்பினரால் முன்வைக்கப்பட்டிருக்கின்றது. இதனை யாழ்ப்பாணம் வாழ் முஸ்லிம்கள் அனைவரும் வரவேற்கின்றோம். அத்தோடு உங்களது ஒன்றுகூடல் சிறப்பாக அமைய எமது ஒத்துழைப்புக்களையும் பங்களிப்புகளையும் நாம் நிச்சயமாக உங்களுக்கு வழங்குவோம், வாருங்கள் 'புலம்பெயர் யாழ் முஸ்லிம் உறவுகளே'
யாழ்ப்பாணத்தை விட்டு வெகுதொலைவில் வாழ்ந்தாலும், யாழ்ப்பாணம் எமதும் பூர்வீகம் என்று எண்ணி யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து, எமது மீள்குடியேற்றப் பணிகளுக்கு உங்களதும் ஒத்துழைப்புகளை வழங்க எண்ணம் கொண்டிருப்பது வரவேற்கப்படவேண்டிய விடயமே, எனவே யாழ்ப்பாணம் வாழ் அனைத்து முஸ்லிம் உறவுகளும் உங்களை அன்போடு வரவேற்பதில் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம், இங்கு உங்களுக்கு முன்னால் பல்வேறு பணிகள் நிறைந்து கிடக்கின்றன, அவை பற்றி ஒரு சிறு விளக்கக் குறிப்பை வழங்குவதே இந்த பிரசுரத்தின் நோக்கமாகும்.
1990களுக்குப் பின்னர் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களிடையே எண்ணிப்பார்க்க முடியாத சமூக, பொருளாதார, அரசியல் ரீதியான மாற்றங்கள் நிகழ்ந்தேறியிருக்கின்றன. வடக்கிலே நிலைகொண்டிருந்த யுத்தமும், அதனைத் தொடர்ந்த பலவந்த இனச்சுதிகரிப்பு நடவடிக்கையும் இந்த மாற்றங்களுக்கான அடிப்படைக் காரணிகளாகும். எனவே அவை எமது சமூகத்தில் ஏற்படுத்திவிட்டிருக்கின்ற வடுக்களைக் களைந்து, எமது மக்களையும் ஒரு கௌரவமான வாழ்வை நோக்கி நகர்த்தவேண்டிய பொறுப்பு யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொரு ஆணுக்கும் பெண்ணுக்கும் கடமையான, வாஜிபான விடயமாகும். யாழ்ப்பாண முஸ்லிம் சமூக ஒழுங்கமைப்பிற்காக உழைப்பது, ஒத்துழைப்பது யாழ்ப்பாண முஸ்லிம்களின் மீது விதியான பர்ளாகும். இலங்கையின் முன்னணி உலமாக்கள் இதனை ஒரு பத்வாவாக வெளியிட்டிருக்கின்றார்கள், அந்த வகையில் நீங்கள் எல்லோரும் இங்கு வந்திருப்பது ஒரு பர்ளை நிறைவேற்றுவதற்காகும். அதாவது ஒரு இபாதத் புனிதக் கடமையை நிறைவேற்றுவதற்கே.
நாம் கடைப்பிடிக்கின்ற இஸ்லாமிய மார்க்கமே எம்மை இணைத்து வைத்திருக்கின்றது, மார்க்கத்தின் அடிப்படையிலேயே இந்த உறவு எமக்குள் ஏற்பட்டிருக்கின்றது, எனவே எமது மார்க்கத்தைப் பின்பற்றுகின்ற மனிதர்களாக நாம் எல்லோரும் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை எமது யாழ்ப்பாண உறவுகளுக்கு மத்தியில் எடுத்துச் சொல்லுங்கள்.
மிகவும் முதன்மையாக இங்கு குடியேறியிருக்கின்ற குடும்பங்களை தனித்தனியாக சந்தியுங்கள், அவர்களுடைய மீள்குடியேற்ற வாழ்க்கை பற்றியும், அவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் குறித்தும் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள், உங்களது அன்பையும், ஆதரவையும் அவர்களுக்கு நேரில் தெரிவியுங்கள், இது அவர்களை மீள்குடியேற்றத்தில் நம்பிக்கைகொள்ளச் செய்யும், அவர்களுக்கு மானசீகரீதியான ஒரு பலம் ஏற்படும்.
அடுத்து கல்வியின் முக்கியத்துவத்தை எமது மீள்குடியேறியுள்ள மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள், கல்வியால் சாதிக்கக் கூடிய விடயங்களை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள், சீரான கல்வியும், சீர்மிகு ஒழுக்கமும் மனிதனை உலகில் உயர்நிலைகளுக்கு இட்டுச் சென்றுள்ளது உங்களுடைய வாழ்க்கை அனுபவங்களினூடாக எடுத்துச் சொல்லுங்கள், அது எமது மக்களுக்கு வாழ்வின் நோக்கத்தை தெளிவுபடுத்தும் ஒரு அம்சமாக இருக்கும்.
யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம் தன்னுடைய சமூக அங்கத்தவர்களின் பலவீனங்களினாலும், குறுகிய எண்ணங்களினாலும் பல்வேறு கசப்பான நிகழ்வுகளை எதிர்நோக்கியிருக்கின்றது. இனியும் எமது தனிமனிதப் பலவீனங்களால் அத்தகைய கசப்பான நிகழ்வுகள் இடம்பெறுவதையும், அதன்மூலம் எமது சமூகம் தொடர்ந்தும் பிந்தங்கிய சமூகமாக மாறிப்போவதையும் ஒருபோதும் அனுமதிக்க முடியாது; இதுவிடயத்திலும் நீங்கள் எங்களோடு உடன்படுவீர்கள் என்ற நம்பிக்கை எமக்கிருக்கின்றது.
மீள்குடியேறுகின்ற யாழ்ப்பாண முஸ்லிம் சமூகம்; ஒரு முறையான பொதுத் திட்டமிடலுடன் செயற்படுவது மிக மிக அவசியமாகும். யாழ்ப்பாண முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்றத்திற்கு ஒரு பொதுவான திட்டமிடல் அவசியமாகும், யார் இங்கு வந்து அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுக்க விரும்பினாலும் அவர்களுக்கு குறித்த பொதுத் திட்டம் அடிப்படை வழிகாட்டியாக இருத்தல் அவசியமாகும், இவ்வாறான ஒரு பொதுத் திட்டமிடலை உருவாக்குவதற்கு நாம் பல வழிகளில் முயன்றும் அது இன்றுவரை கைகூடாத ஒன்றாகவே இருக்கின்றது, எனவே பொதுவான திட்டமிடலொன்றிற்கான முக்கியத்துவத்தை நீங்களும் வலியுறுத்துவீர்கள் என்று எதிர்பார்க்கின்றோம்.
எனவே உங்களது இந்த விஜயத்தின்போது யாழ்ப்பாண முஸ்லிம் உம்மத்தை அறிவியல் கண்கொண்டு நோக்குங்கள்; நீங்கள் வாழ்கின்ற நாடுகளின் சமூக அமைப்புகளோடு எமது சமூக அமைப்புகளையும் ஒப்பீடு செய்து, அங்கிருக்கும் முன்னேற்றமான நிலைமைகளுக்கும், இங்கிருக்கும் பிந்தங்கிய நிலைமைகளுக்கும் இடையிலான வித்தியாசங்களை, அல்லது காரணிகளை என்ன என்று தேடுங்கள்; அவற்றை உங்களது ஆய்வுகளாக, உங்களது ஆலோசனைகளாக, உங்களது அறிவார்ந்த பங்களிப்புகளாக எமக்குச் சொல்லித்தாருங்கள். தயவு செய்து எமது மக்கள் மத்தியில் இருக்கும் அரசியல் முரண்பாடுகளை, இஸ்லாமிய இயக்க முரண்பாடுகளை அடிப்படையாக வைத்து எவ்வித செயற்திட்டங்களையும் ஏற்படுத்தி விடாதீர்கள்.
உங்களது வரவு நல்வரவாகட்டும், உங்களைக் காண்பதிலும், உங்களோடு இணைந்து செயலாற்றுவதையும் நாம் பெரிதும் விரும்புகின்றோம், உங்களது முயற்சிகள் வெற்றிகரமாக அமைய எமது பிரார்த்தனைகளும், ஒத்துழைப்புகளும் இருக்கும் என யாழ்ப்பாணத்தில் வாழும் யாழ்ப்பாண முஸ்லிம்கள் என்றவகையில் நாம் மிகவும் திறந்த மனதோடு உங்களுக்குத் தெரிவித்து நிற்கின்றோம்.
அஹ்லன் வ ஸஹ்லன்
யாழ் முஸ்லிம் சிவில் சமூகம்
தகவல் என்.எம்.அப்துல்லாஹ்


Comments
Post a Comment