மோசடியாக சம்பாதித்த பணத்தை பல நிறுவனங்களில் முதலீடு செய்த நாமல்
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச சட்டவிரோதமாக சம்பாதித்த 191 மில்லியன் ரூபா பணத்தை முதலீடு செய்து கவர்ஸ் கோபரேட் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை சம்பந்தமாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த பணத்தில் 30 மில்லியன் ரூபா பணத்தை சம்பாதித்த விதத்தை வெளியிட தவறினார் என்ற குற்றச்சாட்டில் தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் நாமல் ராஜபக்ச உட்பட இரண்டு பேர் தலா 10 லட்சம் ரூபா சரீரப் பிணையில் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பியசேன ரணசிங்கவினால் விடுவிக்கப்பட்டனர்.
30 மில்லியன் சம்பந்தமான குற்றச்சாட்டு தொடர்பில் சட்டமா அதிபர் தாக்கல் செய்த குற்றப் பத்திரிகை பிரதிவாதிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட இந்திக பிரபாத் கருணாஜீவ மற்றும் இரேஷா டி சில்வா ஆகியார் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
இவர்கள் தற்போது அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் வசித்து வருவதாக அரச சட்டத்தரணி நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவு 191 மில்லியன் மோசடி தொடர்பாக கண்டறிந்த தகவல்களின் படி நாமல் ராஜபக்ச ஹம்பந்தோட்டை தங்காலை உட்பட பல பிரதேசங்களி்ல் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்து பல காணிகளை கொள்வனவு செய்துள்ளார்.
அத்துடன் கடந்த 2013 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் கொள்ளுப்பிட்டியில் உள்ள பான் ஏசிய வங்கியில் 16 மில்லியன் ரூபா வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
இந்த இரண்டு ஆண்டுகளில் சம்பத் வங்கியில் 24 மில்லியன் ரூபா முதலீடு செய்யப்பட்டுள்ளது.
வெலிபல் ஃபினேன்ஸ் நிறுவனத்தில் 6 மில்லியன் முதலீடு, பேவோச் லிமிட்டட் நிறுவனத்தில் 3 மில்லியன் ரூபா முதலீடு, பங்குச் சந்தையில் 14 மில்லியன் முதலீடு, கடந்த 2013 ஆம் ஆண்டு 100 மில்லியன் ரூபாவை முதலீடு செய்து ஹேலோகோப்ஸ் நிறுவனத்தை கொள்வனவு செய்தமை ஆகியவை 191 மில்லியன் ரூபா மோசடியில் அடங்கும் என நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.


Comments
Post a Comment