பௌத்த முன்னுரிமை; ஏனைய சமயங்களுக்கு பாதகமில்லாமல் இருந்தால் சரி: ஹக்கீம்
தமிழ் தேசியக் கூட்டமைப்போ அல்லது வெறெந்தச் சிறுபான்மை கட்சிகளோ அரசியலமைப்பில் பௌத்த சமயத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமையை இல்லாமலாக்குமாறு கோரவில்லை என பொறுப்புணர்ச்சியுடன் குறிப்பிடுவதாக கூறிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம், ஏனைய சமயங்களை பின்பற்றுவதற்கு பாதகமான அம்சங்கள் அதில் இடம்பெறக்கூடாது; அநீதி இழைக்கப்பட கூடாது எனவும் வலியுறுத்தப்படுவதாகவும் , அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் ஒர் உப சரத்தை உள்ளடக்குமாறு ஒருசாரார் முன்மொழிவதில் எந்தத் தவறையும் காணமுடியாது என்றும் சொன்னார்.
இப்பொழுது இந்த நாட்டின் சங்கைக்குரிய மகாநாயக்க தேரர்கள் நால்வரும் புதிய அரசியலமைப்பொன்று அவசியமில்லையென அரசாங்கத்திற்கு ஓர் அறிவித்தலை விடுத்துள்ளார்கள். அதில் பௌத்த மதத்திற்குரிய உயரிய முக்கியத்துவத்தை குறைப்பதற்கு எத்தனிக்கப்படுவதாக முக்கியமாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இது அறவே அடிப்படையில்லாத குற்றச்சாட்டாகும். அவ்வாறான எந்த முன்னெடுப்பும் அரசியல் வழிகாட்டல் குழுவில் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
கல்விமானும், பாராளுமன்றத்தின் முன்னாள் முதுநிலை சமகால உரை பெயர்ப்பாளருமான எம்.எம். ராஸிக் எழுதிய “ஹெம்மாதகம முஸ்லிம்களின் வரலாறு: சமூகவியல் நோக்கு” நூல் வெளியீட்டு விழா சனிக்கிழமை (08) ஹெம்மாதகம அல்-அஸ்ஹர் கல்லூரியில் நடைபெற்றபோது . அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு உரையாற்றும் போது அமைச்சர் ரவூப் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,
கூட்டு எதிர்க்கட்சியினர் அரசியலயலமைப்பை தொடர்புபடுத்தி நிலைமையை சிக்கலாக்க முயற்சிக்கிறார்கள்.இவ்வாறான நிலைமையில் நாங்கள் உண்மையை தெளிவுபடுத்த வேண்டும். உண்மையை சரிவர கூறாவிட்டால் பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற சர்ச்சைகளும், குழப்ப நிலைமையும் தோன்றலாம்.
அத்துடன், முஸ்லிம் தலைமைகள் சுய தணிக்கையுடன் பேச வேண்டிய இக்கட்டான காலமிது, நாங்களே எங்களுக்குள் இந்த கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறோம்.
ஏனென்றால், எங்களது வாய்களிலிருந்து தப்பித்தவறி ஏதாவது வெளியாகினால் அதனை திரிபுபடுத்தி அதற்க்கு வெவ்வேறு அர்த்தங்களை கற்பித்து குழப்பத்தை ஏற்படுத்த சிலகுழுக்கள் தயாராக இருக்கின்றன எனவும் தெரிவித்தார்.
-நாச்சியாதீவு பர்வீன்


Comments
Post a Comment