மத்ஹப்கள் அடிப்படையிலான ஷரத்துகளை நீக்குக
தனியார் சட்ட திருத்த சிபாரிசில் தெளஹீத் ஜமாஅத்
இலங்கையில் தற்போது நடைமுறையிலுள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தின் சில ஷரத்துகள் மத்ஹபுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளன. இவை நீக்கப்பட வேண்டும். முஸ்லிம் தனியார் சட்டத்தில் மத்ஹபுகளுக்கும், தரீக்காக்களுக்கும் முக்கியத்துவம் வழங்காமல் புனித குர்ஆன் மற்றும் ஆதாரபூர்வமான நபிமொழிகளின் அடிப்படையில் முஸ்லிம் தனியார் சட்டம் திருத்தியமைக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருத்தங்களை சிபாரிசு செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற முன்னாள் உயர்நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சூபின் தலைமையிலான குழுவுக்கு அனுப்பிவைத்துள்ள பரிந்துரையில் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத்தின் தலைவர் எம்.எஸ்.எம்.ரஸ்மின் 13 பரிந்துரைகள் அடங்கிய 53 பக்கங்களிலான அறிக்கையை தனியார் சட்டத் திருத்த சிபாரிசுக் குழுவுக்கு அனுப்பிவைத்துள்ளார். திருத்தங்கள் மேற்கொள்வதற்கான குர்ஆன் மற்றும் நபிமொழிகளில் ஆதாரங்கள் குறிப்பிட்ட அறிக்கையில் விரிவாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளன.
முஸ்லிம் தனியார் சட்டம் ஏன் புனித குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் திருத்தப்பட வேண்டும் என்பதற்கு உதாரணங்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.
உதாரணமாக தற்போது அமுலிலுள்ள முஸ்லிம் தனியார் சட்டத்தில் திருமணம் (நிக்காஹ்) வின் போது 'வலி' பிரசன்னத்தில் வேறுபாடு காணப்படுகிறது. ஷாபி மத்ஹபைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 'வலி' யின் அனுமதி கட்டாயம் என தனியார் சட்டம் தெரிவிக்கும் அதேவேளை ஹனபி மத்ஹபைச் சேர்ந்த பெண்ணாக இருந்தால் 'வலி' யின் பிரசன்னம் தேவையற்றது என்கிறது. 'வலி'யின் பிரசன்னம் இல்லாத திருமணம் வலிதற்றது என்பதே எமது நிலைப்பாடாகும். பெண்கள் எந்த மத்ஹபைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ‘வலி’ அவசியம் என சட்டம் திருத்தப்பட வேண்டும்.
ஸ்ரீலங்கா தௌஹீத் ஜமாஅத் முன்வைத்துள்ள ஏனைய பரிந்துரைகளாவன;
* திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் அவர்கள் கன்னியர்களாக இருந்தாலும், விதவைகளாக இருந்தாலும் திருமணத்துக்கு கட்டாயமாக அவர்களது சம்மதம் பெற்றுக் கொள்ள வேண்டும். தற்போதைய முஸ்லிம் தனியார் சட்டத்தில் சம்மதம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்பது உறுதியாகக் குறிப்பிடப்படவில்லை. பெண்களின் சம்மதம் பெற்றுக்கொள்ளப்படாத ஒரு திருமணம் நடந்தால் அதனை செல்லுப்படியற்றதாக்கும் வகையில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
* சில முஸ்லிம் பெண்கள் அமைப்புகள் பெண்கள் காதி நீதிபதிகளாக நியமிக்கப்பட வேண்டும் எனக் குரல் எழுப்பி வருகின்றன. பெண்கள் காதி நீதிபதிகளாக கடமையாற்றலாம் என குர்ஆனில் குறிப்பிடப்படவில்லை. அதனால் பெண் காதி நியமனம் என்ற பேச்சுவார்த்தைக்கே இடமில்லை. அதனால் காதி நீதிபதி, விவாகப் பதிவாளர், காதிகள் சபை அங்கத்தவர்களாக பெண்கள் நியமிக்கப்படக்கூடாது.
* முஸ்லிம் தனியார் சட்டம் ஒரு விவாகப் பதிவின்போது இருவர் சாட்சிகளாக கையொப்பமிட வேண்டும் என்று தெரிவிக்கிறது. சாட்சிகளாக கையொப்பமிடுபவர்கள் இருவரும், முஸ்லிம்களாக திருமணம் பற்றிய அறிவுடையவராக, தகவல்கள் அறிந்தவர்களாக தம்பதிகளுக்கிடையில் பிரச்சினைகள் ஏற்பட்டால் தீர்த்து வைப்பவர்களாக இருக்க வேண்டும் என்ற வகையில் திருத்தம் அமைய வேண்டும்.
* முஸ்லிம் பெண்களின் திருமண வயதெல்லை என்ன என்பது விதிக்கப்படாதிருக்க வேண்டும். ஏனென்றால் வயதெல்லை 16,18 என்று விதிக்கப்பட்டாலும் பிரச்சினைகள் ஏற்படும். எனவே வயதெல்லை இருக்கக் கூடாது என்ற நிலைப்பாட்டையே நாம் ஆதரிக்கிறோம். இதேவேளை பெண் பருவ வயதையடைந்திருக்க வேண்டும். கண்டிப்பாக பெண்ணின் சம்மதம் இருக்க வேண்டும். ‘வலி’ இருக்க வேண்டும். இரண்டு சாட்சிகள் இருக்க வேண்டும். ‘வலி’ அனைத்தையும் உறுதிப்படுத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டையே நாம் வலியுறுத்துகிறோம். இதேவேளை சிறுவர் திருமணத்தை நாம் ஆதரிக்கவில்லை.
* தற்போது அமுலிலுள்ள சட்டத்தில் 12 வயதுக்கு குறைந்த ஒரு பெண்ணின் திருமணத்துக்கு காதி நீதிபதியின் அனுமதி பெறப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12 வயது திருமணம் எமது நாட்டில் குற்றவியல் சட்டத்தின் கீழ் வருகிறது. இது நாட்டின் குற்றவியல் சட்டத்துக்கு முரணாக அமைந்துள்ளது. எனவே இது தொடர்பாக கலந்துரையாடி தீர்மானமொன்றுக்கு வரவேண்டும். இல்லையேல் மாற்றங்களைச் செய்ய வேண்டும்.
* பலதார மணத்தின் போது ஒருவர் இரண்டாவது, மூன்றாவது, நான்காவது எனத் திருமணம் செய்து கொள்ளும்போது முன்னைய மனைவியர்களுக்கு அது அறிவிக்கப்பட வேண்டும்.
* மனைவியர்களுக்கு வாழ்வாதாரம், சொத்துரிமை, பாகப்பிரிவினை அனைத்தும் எழுத்து மூலம் வழங்கப்படவேண்டும். பிள்ளைகளுக்கான தாபரிப்பு முறையாக வழங்கப்படுவதற்கு சட்டத்தில் நடவடிக்கை இருக்க வேண்டும்.
* தற்போது விவாகரத்தில் பல முறைகள் பின்பற்றப்படுகின்றன. பஸகு, தலாக், குலா, முபாரத் என்று பலவகைகள் இருக்கின்றன. இந்த முறைகள் பற்றி மக்கள் தெளிவில்லாமல் இருக்கிறார்கள். எனவே விவாகரத்து முறைகள் பற்றி தெளிவுபடுத்துவதற்கு சட்டம் மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
* முத்தலாக் முறையில் மூன்று தலாக்கையும் ஒரே முறையில் கூறுவது தடுக்கப்பட்டு மூன்று சந்தர்ப்பங்கள் வழங்கப்பட வேண்டும்.
* 'கைக்கூலி' என்பது இஸ்லாத்தில் சொல்லப்படவில்லை. எனவே கைக்கூலி என்பது இல்லாமற் செய்யப்படுவதுடன் விவாகப் பதிவு புத்தகத்தில் 'கைக்கூலி' என்ற வசனம் இல்லாமற் செய்யப்பட வேண்டும்.
* காதி நீதிபதிகளாக நியமிக்கப்படுபவர்கள் குர்ஆன், ஹதீஸ் பற்றிய அறிவுடையவர்களாகவும் நாட்டின் பொதுச்சட்டம் தொடர்பான அறிவினைக் கொண்டவர்களாகவும் இருக்க வேண்டும். இஸ்லாமிய சட்டம் பற்றி நன்கு கற்றவர்களாக இருக்க வேண்டும். காதி நீதிபதிகள் பரீட்சை ஒன்றின் மூலம் தெரிவு செய்யப்பட வேண்டும்.
* விவாகரத்தின் போது சம்பந்தப்பட்ட குழந்தைகளின் பாதுகாவலைத் தீர்மானிக்கும் அதிகாரம் காதி நீதிமன்றங்களுக்கு வழங்கப்பட வேண்டும்.
* தலாக் கூறப்படும்போது பாதிக்கப்படும் பெண்ணுக்கு நஷ்டஈடு வழங்கப்பட வேண்டும் என்பனவாகும்.


Comments
Post a Comment