வெள்ளத்தின் போது வழங்கிய 60 மில்லியன் ரூபாய் எங்கே? – பிரதமர் அறிக்கை கோரல்
60 மில்லியன் ரூபாய் நிதி வழங்கியிருந்தும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் அபிவிருத்தி நடவடிக்கைகள் தாமதமாக இடம்பெறுவது தொடர்பில் கண்டறிய பிரதமர் ரணில் விக்ரமசிங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணம் தொடர்பிலான முன்னேற்றத்தைக் கண்டறிய நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் போதே பிரதமர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்ய திறைசேரி மற்றும் ஏனைய பிரிவுகள் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பில் அவசரமாக அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு பிரதமர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.
வீட்டுக்கூலி, உளர் உணவு மற்றும் இழப்பீட்டுத் தொகை செலுத்துதல் என்பன துரிதமாக இடம்பெற்றாலும் வீதி அபிவிருத்தி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்கு இதுவரை மாவட்ட செயலாளர்களுக்கு நிதி வழங்கப்பட்டிருப்பதால் அவை நிர்வகிக்கப்பட்ட விதம் தொடர்பிலும் அந்த அறிக்கையில் குறிப்பிடுமாறும் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அமைச்சர் சாகல ரத்நாயக்கவின் தலைமையில் குழுவொன்றை நியமித்து, அரச அதிகாரிகளுடனும் கலந்துரையாடி இந்த அறிக்கையை இரு வாரங்களுக்குள் சமர்ப்பிக்குமாறும் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.


Comments
Post a Comment