அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்க்கும் மகிந்த


அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் ஒன்றை சபாநாயகரின் அலுவலகத்தில் கையளித்துள்ள நிலையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அதற்கு எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அமைச்சர் ரவி கருணாநாயக்கவை, முன்னாள் ஜனாதிபதி தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியதாகவும் அப்போது கூட்டு எதிர்க்கட்சியினர் தனக்கு எதிராக முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து அமைச்சர் ரவி கருணாநாயக்க, மகிந்தவிடம் வினவியுள்ளதாகவும் தெரியவருகிறது.

இதற்கு பதிலளித்துள்ள முன்னாள் ஜனாதிபதி, இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை தான் எதிர்ப்பதாகவும் பந்துல குணவர்தனவின் தேவைக்கு அமைய அதனை கொண்டு வருவதாகவும் கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் அதில் கையெழுத்திட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

கூட்டு எதிர்க்கட்சியை சேர்ந்த மேலும் சிலர் அதில் கையெழுத்திடவில்லை எனவும் மகிந்த ராஜபக்ச இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக அல்லாமல் முழு அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் கூறியுள்ளார்.

Comments