வீடியோ நாவலடி முஸ்லிம்களின் உண்ணாரவிதம் : -


Ihzana Fareed

மட்டக்களப்பு மாவட்டம் கோறளைப்பற்று மத்தி, வாழைச்சேனை பிரதேச செயலகம், மற்றும் ஓட்டமாவடி பிரதேச சபை ஆகிய நிருவாக பிரிவுகளுக்கு உட்பட்ட தியாவட்டவான் கிராம சேவகர் பிரிவில் மட்டக்களப்பு கொழும்பு பிரதான வீதி நாவலடியில் இலங்கை இராணுவத்தினர் நிலை கொண்டுள்ள தமது குடியிருப்பு காணிகளை விடுவிக்க கோரி ஆறாவது நாளாக இன்றும் 09.08.2017 புதன் கிழமை காணிகளை இழந்த முஸ்லிம் மக்கள் உண்ணாவிரத  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த 04.08.2017 வெள்ளிக்கிழமை ஆரம்பமான குறித்த உண்ணாவிரத போராட்டம் எதுவித உறுதி மொழிகள் வழங்கப்படாமை, அரசியல்வாதிகள் உயர் அதிகாரிகள் வருகை தராத காரணத்தினால் தொடர்கின்றது. நாவலடி சந்தியில் அமைந்துள்ள இராணுவ முகாம் பகுதியில் இராணுவத்தினால் கையகபடுத்தப்பட்டு இருக்கும் 8ஏக்கர் தனியார் காணியினை விடுவித்து தருமாறு கோரியே குறித்த உண்ணாவிரத போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.
தற்போதைய நல்லாட்சியில் சுமூக சூழ் நிலையில் பழைய குடியிருப்பு இடங்களை படையினர் திருப்பி ஒப்படைக்க வேண்டும். தமது வீடுகள் கடைகள் உள்ளடங்களாக அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் படையினர் அழித்து விட்டே இராணுவ முகாம் அமைக்கப்பட்டதாக உண்ணாவிரதத்தில் ஈடுபடுகின்றவர்கள் தெரிவிக்கின்றனர். 
1968ம் ஆண்டு முதல் மேற்படி பிரதேசத்தில் முஸ்லிம் மக்கள் குடியேறி வாழ்ந்து வந்த நிலையில் 1990ம் ஆண்டு ஏற்பட்ட யுத்த சூழ் நிலை காரணமாக 1990ம் ஆண்டு குறித்த இருப்பிடங்களை விட்டு இடம் பெயர்ந்து உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளில் வசித்து வரலாயினர்.
1990ம் ஆண்டு முதல் இராணுவ முகாம் அமைந்துள்ள காணிகளை விடுவிக்க வேண்டும் என்பதுடன் நட்ட ஈட்டையும் பெற்று தந்து மீள குடியேற வேண்டும் என்று அரசாங்க அதிகாரிகளிடமும் அரசியல்வாதிகளிடமும் தெரியப்படுத்திய போதிலும் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. இதன் காரணமாகவே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடுவதற்கான நிலைமைக்கு எங்களை உருவாக்கியதாக தெரிவிக்கின்றனர்.
நாவலடிப்பகுதியில் தற்போதுள்ள இராணுவ முகாம் 18 பேரின் காணிகளை உள்ளடக்கியதாக அமைக்கப்பட்டுள்ளது. இராணுவ முகாம் அமைக்கபட்டதன் காரணமாக குறித்த 18 பேரும் வீடு வாசல்களை இழந்திருக்கின்ற போதிலும் இரண்டு பேருக்கு மாத்திரமே பிரதேச செயலகத்தினால் மாற்றுக்காணிகள் வழங்கப்பட்டுள்ளது. எனவே எஞ்சியுள்ள 16 பேரினதும் காணிகளை பெற்றுத்தர வேண்டும் என உண்ணாவிரத்தில் ஈடுப்பட்டப்வர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்த கருத்துக்களுடன், சமூக ஆர்வலர் சாட்டோ வை.எல்.மன்சூர் தெரிவித்த கருத்துக்கள் அடங்கிய காணொளி எமது வாசகர்களுக்காக இங்கே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 



Comments