உள்ளூராட்சி எல்லை நிர்ணயத்தில் முஸ்லிம்களுக்கு அநீதி
சு.க.முஸ்லிம் பிரிவு ஜனாதிபதியிடம் முறைப்பாடு
உள்ளூராட்சி மன்றங்களின் எல்லை நிர்ணயங்களில் முஸ்லிம் சமூகத்துக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனவும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாமற் செய்வதற்கு திட்டுமிட்டு எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் சம்மேளனம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் முறைப்பாடு செய்யவுள்ளது.
இத் தீர்மானம் நேற்று முன்தினம் மாலை கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உப தலைவரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் சம்மேளனத்தின் தலைவரும் தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க இராஜாங்க அமைச்சருமான ஏ.எச்.எம். பௌஸியின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலுமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். கூட்டத்தில் உள்ளூராட்சி மன்றங்களின் புதிய எல்லைகள் நிர்ணயம், புதிய தேர்தல் முறைமைபற்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் சம்மேளன பிரதிநிதிகள் தமது எதிர்ப்புகளை வெளியிட்டனர். கண்டிப் பகுதியிலிருந்து சமுகமளித்திருந்த உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகள் புதிய தேர்தல் முறைமை மற்றும் புதிய எல்லைகள் நிர்ணயம் பற்றி விமர்சித்தார்கள். முஸ்லிம்களின் பிரதிநிதித்துவத்தை இல்லாமற் செய்யும் வகையில் எல்லைகள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபாவிடம் முறையிட்ட போது அவர் வழக்கு தாக்கல் செய்யுமாறு தெரிவித்துள்ளதாகவும் முறையிட்டனர்.
கடந்த காலங்களில் உள்ளூராட்சி மன்றங்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சார்பில் 125 பேர் பிரநிதிதித்துவம் பெற்றிருந்தனர். ஆனால் எதிர்வரும் தேர்தல்களில் இந்த எண்ணிக்கை 60 ஆக குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.
கூட்டத்துக்கு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் துமிந்த திசா நாயக்காவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தும் அவர் சமுகமளிக்காமைக்கு கூட்டத்தில் பலத்த எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. உள்ளூராட்சி மன்றங்களின் சு.க. முன்னாள் உறுப்பினர்கள் கட்சியின் செயலாளரிடம் கையளிப்பதற்கு மகஜர்கள் கொண்டு வந்த போதிலும் அவர் வருகை தராமையால் ஏமாற்றமடைந்தனர்.
கூட்டத்துக்கு தலைமைவகித்த இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌஸி ஜனாதிபதியுடானான சந்திப்புக்கு ஏற்பாடு செய்வதாக உறுதியளித்தார். இதனடிப்படையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் சம்மேளனத்தின் பிரதிநிதிகள் சம்மேளனத்தின் தலைவர் அமைச்சர் பௌஸியின் தலைமையில் விரைவில் ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளனர்.
இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் சம்மேளனம் அனைத்து மாவட்டங்களுக்கும் புதிதாக அமைப்பாளர்களை நியமிக்கவுள்ளது. அதன்பின்பு, கொழும்பில் மாநாடு ஒன்றினையும் நடத்தவுள்ளது.
நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மஸ்தான் காதர், வடமாகாண அளுநர் ரெஜினோல்ட் குரே, முன்னாள் அமைச்சர் அதாவுத செனவிரத்ன, கிழக்கு மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சர் நஜீப் ஏ.மஜீத் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.


Comments
Post a Comment