வெளியானது ஆறு மாத கால அறிக்கை! மைத்திரியாலும் முடியாமல் போய் விட்டதா?
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பில் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு மோசமான வினைத்திறன் கொண்ட அமைச்சாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், அரையாண்டு காலத்தில் 3.3 வீதத்தை மட்டுமே குறித்த அமைச்சு செலவிட்டுள்ளதாக அரசாங்கத்தின் அதிகாரபூர்வ புள்ளிவிபரங்களில் இருந்து தெரியவந்துள்ளது.
இந்நிலையில், அமைச்சுக்களின் மோசமான வினைத்திறன் கொண்ட அமைச்சாக, தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு அடையாளம் காணப்பட்டுள்ளது.
2017ஆம் ஆண்டில், அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் முதல் ஆறு மாத காலத்தில் அமைச்சுக்கள் செலவீடு செய்துள்ள நிதி பற்றிய தகவல்கள் நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்டன.
இதற்கமைய, அரசாங்கத்தில் உள்ள இரண்டு அமைச்சுக்கள் மாத்திரமே, ஒதுக்கப்பட்ட நிதியில் 50 வீதத்துக்கு மேல் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு, இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், 70.4 வீதத்தை முதல் ஆறு மாதங்களில் செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், அஞ்சல் மற்றும் அஞ்சல் சேவைகள் அமைச்சு, இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட நிதியில், 50.5 வீதத்தை செலவழித்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பொறுப்பில் உள்ள தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சு இந்த ஆண்டுக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், 3.3 வீதத்தை மட்டுமே செலவிட்டுள்ளது.
மேலும், டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சு, 3.9 வீதமும், சுற்றுலா அமைச்சு 6.8 வீதமும், பொதுத்துறை நிறுவனங்கள் அபிவிருத்தி அமைச்சு 5.9 வீதமும், தமக்கான ஒதுக்கீடுகளை செலவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த ஆண்டில், 3, 628,110.4 மில்லியன் ரூபா அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அதில், 1,792,165.1 மில்லியன் ரூபா மாத்திரம், முதல் அரையாண்டு காலத்தில் செலவிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.


Comments
Post a Comment