அளுத்கம நஷ்டயீடும் நீதிக்கான போராட்டமும்
அளுத்கம வன்முறைகளில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களுக்கு நஷ்டயீடு வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாவும் காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும் வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அளுத்கம வன்முறைச் சம்பவங்கள் நடந்து மூன்று வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலேயே இந்த நஷ்டயீடு வழங்கும் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு நஷ்டயீடு வழங்க வேண்டியதன் அவசியத்தை மீள்குடியேற்ற புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் பல்வேறு வழிகளில் வலியுறுத்தியிருந்தார்.
இவ்வருடம் மார்ச் மாதத்துடன் அளுத்கம வன்முறைகள் நடந்து 1000 நாட்கள் கடந்தும் துப்பாக்கிச் சூட்டு சூத்திரதாரிகள் எவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படாமையை கண்டித்து ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீனை மேற்கோள்காட்டி மார்ச் 10 ஆம் திகதிய 'விடிவெள்ளி' தலைப்புச் செய்தியொன்றை வெளியிட்டிருந்தது. குறித்த செய்தியை காண்பித்து இது தொடர்பில் கடந்த மார்ச் மாதம் 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரை நிகழ்த்திய இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ், நீதி நிலைநாட்டப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியிருந்தார்.
அதனைத் தொடர்ந்து சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் மூலமாக மரணமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 20 இலட்சம் ரூபாவும், காயமடைந்தவர்களுக்கு தலா 5 இலட்சம் ரூபாவும் நஷ்டயீடு வழங்குமாறு வலியுறுத்தும் அமைச்சரவை பத்திரம் ஒன்றை கடந்த ஜூலை 24 ஆம் திகதி தாக்கல் செய்ய ஹிஸ்புல்லாஹ் நடவடிக்கை எடுத்திருந்தார். இந் நிலையிலேயே மேற்படி அமைச்சரவைப் பத்திரத்திற்கு கடந்த வாரம் அனுமதி கிடைத்துள்ளது.
குறித்த அமைச்சரவைப் பத்திரம் அமைச்சரவையில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட சமயம் சில பெரும்பான்மை அமைச்சர்கள் நஷ்டயீட்டுத் தொகையை குறைக்குமாறு கருத்துக்களை முன்வைத்திருந்தனர். இந் நிலையில் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாட் பதியுதீன், ராஜித சேனரத்ன, தயாசிறி ஜயசேகர, அநுர பிரயதர்ஷன யாப்பா போன்றோர் குறிப்பிடப்பட்டுள்ள முழுத் தொகையும் வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தியிருந்தனர். அந்த வகையில் இது விடயத்தில் செயற்பட்ட, ஆதரித்து வாதாடிய அனைத்து அரசியல்வாதிகள், சிவில் சமூக பிரமுகர்கள் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.
எனினும் இந்த நஷ்டயீட்டுத் தொகை வழங்கப்படுவதன் மூலம் மாத்திரம் அளுத்கம விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட்டு விட்டதாக எம்மால் முடிவுக்கு வர முடியாது. தமது சொத்துக்களை முற்றாக இழந்த, வியாபாரத்தை இழந்த, கல்வி உள்ளிட்ட எதிர்காலத்தை இழந்த சகலருக்கும் அரசாங்கம் என்ன நஷ்டயீட்டை வழங்கப் போகிறது என்பதும் இங்கு எழும் கேள்வியாகும்.
அதற்கப்பால் இந்த சம்பவங்களின் சூத்திரதாரிகளைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்துகின்ற விடயத்தில் இந்த நல்லாட்சி அரசாங்கமும் தோல்வியையே கண்டுள்ளது.
அளுத்கம சம்பவம் தொடர்பான வழக்குகள் கடந்த மூன்று வருடங்களாக தொடர்கின்ற போதிலும் இதுவரை நியாயமான தீர்ப்புகள் கிடைக்கப் பெறவில்லை. குறிப்பாக இருவரைப் பலியெடுத்து பலரை காயப்படுத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பான வழக்கும் இழுத்தடிக்கப்பட்டே வருகிறது. குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடித் திரிகின்றனர்.
எனவேதான் அளுத்கம மக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட வேண்டும். இதில் அரசியல், கட்சி, கொள்கை பேதங்களை மறந்து அனைவரும் ஒன்றுபட வேண்டும். நாம் போராடாத வரை, முயற்சிக்காத வரை நமக்கு ஒருபோதும் நீதி கிடைக்கப் போவதில்லை என்பதை கவனத்தில் கொள்வோமாக.


Comments
Post a Comment