ரவியின் ‘விசேட உரை’ பொய்யானது – பந்துல


அன்னியச் செலாவணி மோசடி தொடர்பிலான வழக்கில் இருந்து முன்னாள் வெளிவிவகார அமைச்சர் விடுவிக்கப்பட்டதாக பாராளுமன்றில் கூறிய கூற்று பொய்யானது என்று கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
நேற்று (13) கொழும்பில் இடம் பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போது அவர் இதனை குறிப்பிட்டார்.
நிதி அமைச்சராக கடமை புரியும் காலத்தில் அவரது அதிகாரங்களுக்கு அப்பால் சட்டத்துக்கு புறம்பாக செயற்பட்டுள்ளதாகவும் அவர் தமது பதவியை இராஜினாமா செய்வது மாத்திரம் போதாது என்றும் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அத்தோடு கடந்த வியாழனன்று முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க ஆற்றிய உரையில் தாம் அந்நியச்செலாவணி தொடர்பிலான வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டதாகக் குறிப்பிட்டது போலியானது என்றும் அதனை நாட்டின் தற்போதைய சட்டதிட்டங்களுக்கு அமைவாக விசாரணை செய்யப்பட வேண்டும் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்தார்.
இதேவேளை, அவ்வழக்கின் தீர்ப்பில் சட்டமா அதிபருக்கு குற்றப்பத்திரத்தை திருத்தி மீண்டும் வழக்குத் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாகவும் குறிப்பிட்ட பாராளுமன்ற உறுப்பினர் அவ்வழக்கில் ரவி கருணாநாயக்க விடுவிக்கப்படவில்லை என்றும் அவ்வாறு விடுவிக்கப்படுவதாகக் கூறுபவர்கள் குற்றவியல் விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Comments