திருமலை முஸ்லிம்களின் காணிப் பிரச்சினை தீர்க்கப்படுமா
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களின் காணிகள் பல்வேறு பிரச்சினைகளுக்கு உள்ளாகியிருக்கின்றன. முஸ்லிம்களின் காணிப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு முஸ்லிம் அரசியல்வாதிகள், புத்திஜீவிகள், முஸ்லிம் அமைப்புகள், துறைசார் நிபுணர்கள் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடக்கு, கிழக்கில் முஸ்லிம் சமூகம் தமது சொந்தக்காணிகளை இழந்து, பலாத்காரமாக அல்லது சட்டரீதியாக அபகரிக்கப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் இவ்வாறான கோரிக்கைகள் நிச்சயம் விடுக்கப்பட வேண்டும்.
ஆய்வுக்கும் அபிவிருத்திக்குமான செரண்டிப் நிறுவனம் கொழும்பில் ஜமா அத்தே இஸ்லாமியின் தலைமையகத்தில் நடத்திய "திருகோணமலை மாவட்டத்தின் காணிப்பிரச்சினைகளும் தீர்வுகளும்" எனும் தலைப்பிலான கலந்துரையாடலிலேயே இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டது.
முசலி முஸ்லிம் மீள்குடியேற்றம்
திருகோணமலை மாவட்ட முஸ்லிம்கள் எதிர்நோக்கும் காணிப்பிரச்சினைகள் இம்மாநாட்டில் ஆராயப்பட்ட அதேவேளை, முசலி முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்கு எதிராக இரு சூழலியல் அமைப்புகளினால் உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு உயர்நீதிமன்றினால் தள்ளுபடி செய்யப்பட்டமை சுட்டிக்காட்டப்பட்டது. அதேவேளை, முசலி முஸ்லிம் மீள்குடியேற்றத்துக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முஸ்லிம் சமூகம் வெற்றியடைந்ததைப் போல் திருகோணமலை மாவட்ட முஸ்லிம்களின் காணிப் பிரச்சினைகளிலும் சமூகம் வெற்றிகொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இந்த வெற்றிக்கு சமூகத்தின் பல அமைப்புகள், அரசியல்வாதிகள், சட்ட வல்லுனர்கள் ஒன்றிணைந்து செயற்பட்டமையே காரணம் என சுட்டிக்காட்டப்பட்டது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அரசியலமைப்பு சட்ட விவகார பணிப்பாளர் சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் இங்கு கலந்து கொண்டு உயர்நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை வெற்றிகொள்வதற்கு அனைத்து தரப்பினரும் எவ்வாறு ஒன்றிணைந்து செயற்பட்டனர் என்பதை விளக்கினார்.
முசலிப் பிரதேசத்தில் நடைபெற்றுவரும் அனைத்து செயற்பாடுகளும், அனைத்து குடியேற்றங்களும் சட்டவிரோதமானவையெனவும் காணிகள் வழங்கப்பட்டிருப்பது சட்டத்துக்கு முரணானதெனவும் அவற்றுக்குத் தடை உத்தரவு பிறப்பிக்கும் படியும் இம்மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
மனுவினை இலங்கை வனஜீவராசிகள் மற்றும் இயற்கை பாதுகாப்பு அமைப்பு, சூழலியல் பவுண்டேசன் ஆகிய இரு அமைப்புகளும் தாக்கல் செய்திருந்தன.
திருகோணமலை மாவட்டம்
திருகோணமலை மாவட்டம் 11 பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கி 2630.8 சதுர கிலோ மீட்டர் பரப்பளவினைக் கொண்டதாகும். 2015 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின் படி திருகோணமலை மாவட்டத்தின் மொத்த சனத்தொகை 431,780 ஆகும். இச்சனத்தொகையில் முஸ்லிம்கள் 184,084 பேர், தமிழர்கள் 132,663 பேர், சிங்களவர் 113,104 பேர் ஆகும். இன விகிதாசாரத்தை நோக்கினால் முஸ்லிம்கள் 42.63 வீதம், தமிழர்கள் 30.72 வீதம், சிங்களவர்கள் 26.19 வீதமாகும்.
திருகோணமலை மாவட்டம் திருகோணமலை, குச்சவெளி, பதவிஸ்ரீபுர, கோமரங்கடவெல, மொரவெவ, தம்பலகாமம், கந்தளாய், கிண்ணியா, சேருவில, மூதூர், வெருகல் ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளை உள்ளடக்கியுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் சில செயலாளர் பிரிவுகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பிரிவுகள் குறைந்த நிலப்பரப்பைக் கொண்டனவாக இருப்பதை அவதானிக்க முடிகிறது. இதேவேளை, பெரும்பான்மை இனத்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரிவுகள் சில அதிக நிலப்பரப்பினைக் கொண்டதாகவும், அங்கு முஸ்லிம்களும் தமிழர்களும் சிறுபான்மையாக வாழ்வதை அவதானிக்க முடிகிறது.
கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவை உதாரணமாக நோக்கினால் 2015 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களின்படி அங்கு 73,656 பேர் வாழ்கிறார்கள். இவர்களில் 71,650 பேர் அதாவது 96.46 வீதத்தினர் முஸ்லிம்கள் 2,572 பேர் அதாவது 3.49 வீதத்தினர் தமிழர்கள் ஆவர். இதேவேளை சிங்களவர் இருவரே வாழ்கின்றனர். கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவு 146.9 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்டதாகும். அதாவது குறைந்த நிலப்பரப்பில் அதிகமான முஸ்லிம்கள் வாழ்கின்றனர். அவர்களுக்கு காணி, நிலங்கள் மிகவும் குறைவாகவே இருக்கின்றன என்பது இதிலிருந்து தெளிவாகிறது.
சிங்களவர் பெரும்பான்மையாகவும் முஸ்லிம்களும் தமிழர்களும் சிறுபான்மையாகவும் வாழும் சேருவில பிரதேச செயலகப்பிரிவு கூடிய பரப்பளவைக் கொண்டதாக இருக்கிறது. மொத்தம் 15,183 பேரே இங்கு வாழ்கின்றனர். இதில் 9,565 பேர் சிங்களவர். அவர்களின் விகிதாசாரம் 63. இங்கு முஸ்லிம்கள் 2,759 பேரும், தமிழர்கள் 2858 பேரும் வாழ்கின்றனர். முஸ்லிம்கள் இங்கு 18.17 வீதத்தினர். தமிழர்கள் 18.82 வீதத்தின் ஆவர்.
பதவிஸ்ரீபுர பிரதேச செயலகப் பிரிவின் தரவுகளை நோக்கினால், அங்கு ஒரு முஸ்லிமும் 2 தமிழர்களும் வாழ்கிறார்கள். அப்பிரதேசத்தின் பரப்பளவு 279 சதுர கிலோ மீற்றர்களாகும். இங்கு 13,245 பேர் வாழ்கின்றனர். சனத்தொகையில் 99.98 வீதத்தினர் சிங்களவராவர். இவர்கள் 279 சதுர கிலோ மீற்றர்கள் பரப்பளவில் வாழ்கின்றனர். இதிலிருந்து இவர்கள் ஒவ்வொருவரும் அதிகளவிலான காணிகளைக் கொண்டுள்ளனர். ஆனால் குச்சவெளி, கிண்ணியா, மூதூர் ஆகிய பகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தாலும் குறைந்த பரப்பிலான காணிகளையே கொண்டுள்ளனர்.
கிண்ணியா மஜ்லிஷ் அஷ்ஷூராவின் செயலாளரும் திருமலை மேல் நீதிமன்ற பதிவாளருமான எம்.எஸ்.எம்.நியாஸ் திருகோணமலை மாவட்டத்தின் காணிப்பிரச்சினைகள் மற்றும் தீர்வுகள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டு பல ஆலோசனைகளை முன்வைத்தார். காணிப் பிரச்சினைகள் தொடர்பில் பின்வரும் விபரங்களை அவர் முன்வைத்தார்.
காணி உரித்தாவணம்
திருகோணமலை மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கான காணி உறுதிகள், உரியகாலத்தில், உரிய முறையில் வழங்கப்படவில்லை. நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக உரித்தாவணங்கள் உரிய காலத்தில் வழங்கப்படவில்லை.
தொல்பொருள் திணைக்களம்
திருகோணமலை மாவட்டத்தில் தொல்பொருள் திணைக்களத்தினால் காணிகள் திடீரென எல்லைப்படுத்தப்படுகின்றன. மக்கள் வாழும் குடியிருப்புப் பகுதிகள் இவ்வாறு எல்லையிடப்பட்டு அறிவித்தல் பலகைகள் காட்சிப்படுத்தப்படுவதால் மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். அவர்களது காணிக்கு சவால் ஏற்பட்டுள்ளதாக நினைக்கிறார்கள்.
வனஜீவராசிகள் திணைக்களம்
வனஜீவராசிகள் திணைக்களத்தினாலும் காணிகள் எல்லையிடப்படுகின்றன. எல்லையிடப்பட்டு அப்பிரதேசம் வனஜீவராசிகள் திணைக்களத்துக்குட்பட்டது என அறிவிக்கப்படுகிறது. இதனாலும் முஸ்லிம்களின் காணிகள் பிரச்சினைக்குள்ளாகியுள்ளன.
இராணுவ தேவைகள்
முஸ்லிம்களின் காணிகள் இராணுவ தேவைகளுக்காக அபகரிக்கப்படுகின்றமையை குறிப்பிட்டுக் கூறலாம். முஸ்லிம்களின் காணிகளில் இராணுவ முகாம்கள், கடற்படை முகாம்கள் அமைக்கப்பட்டுள்னன. திருகோணமலை மாவட்டத்தில் இவ்வாறு 27 முஸ்லிம் தனியார் காணிகளில் முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அரசாங்கம் இராணுவம் கையேற்ற காணிகளில் சிலவற்றை விடுவித்து வந்தாலும் முஸ்லிம்களின் எந்தக் காணியும் விடுவிக்கப்படவில்லை. முஸ்லிம்களின் காணிகளுக்கு அருகிலுள்ள காணிகள் விடுவிக்கப்படும் அதேவேளை முஸ்லிம்களுக்குச் சொந்தமான காணிகள் விடுவிக்கப்படவில்லை.
கரையோர பாதுகாப்பு திணைக்களம்
கரையோர பாதுகாப்புத் திணைக்களத்தினால் திருகோணமலை மாவட்டத்தில் காணிகள் அபகரிக்கப்படுகின்றன. அதிகாரிகள் வேற்று இனத்தவர்களாக இருப்பதால் முஸ்லிம்களுக்கே சட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு அவர்களது காணிகள் கையேற்கப்படுகின்றன.
அபிவிருத்தி நோக்கங்கள்
அபிவிருத்தி நோக்கங்களுக்காக காணிகள் கையேற்கப்படுகின்றன. கடந்தகால அரசாங்கத்தில் ஒரு நிறுவனத்துக்கு 1,400 ஏக்கர் காணி வழங்கப்பட்டது. அபிவிருத்திக்காக காணிகள் கையேற்கப்படும் சந்தர்ப்பங்களில் அப்பகுதியில் குடியேற்றங்கள் உருவாகின்றன. அபிவிருத்தித் திட்டங்களிலும் தொழிற்சாலைகளிலும் வெளிப்பிரதேசங்களைச் சேர்ந்த மக்களுக்கே வாய்ப்பளிக்கப்படுகின்றது. தென்பகுதி மக்கள் தொழில் வாய்ப்புகளைப் பெற்று வருகின்றனர். இதனால் அவ்வாறு வந்து குடியேறும் மக்களுக்கான பாடசாலைகளும் உருவாகின்றன. மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படுகின்றன. எனவே அபிவிருத்தியைக்கூட நாம் சந்தேகத்துடனே நோக்க வேண்டியுள்ளது.
பள்ளிவாசல், மத்ரஸா காணிகள்
பள்ளிவாசல் காணிகள் மற்றும் மத்ரஸா காணிகள் இராணுவ நோக்கங்களுக்காக அபகரிக்கப்படுகின்றமையும் பிரச்சினையாக உள்ளது. உதாரணமாக கருமலையூற்று பள்ளிவாசலை குறிப்பிடலாம். இப்பள்ளிவாசல் வரலாற்றுப்புகழ் மிக்கதாகும். இந்த பள்ளிவாசல் காணிக்கான ஆவணங்கள் எம்மிடம் இருக்கின்றன. நாங்கள் எமது காணி உறுதியில் உள்ளவாறு பள்ளிவாசலுக்கு 139.4 பேர்ச்சஸ் கேட்கிறோம். ஆனால் இராணுவம் மறுத்து வருகிறது. பள்ளிவாசலுக்கு 20 பேர்ச்சஸ் காணியே வழங்க முடியும் எனத் தெரிவிக்கிறது.
வேறு விடயங்கள்
யானையிலிருந்தும் பொது மக்களை பாதுகாப்பதற்காக அமைக்கப்படும் யானை வேலியும் பிரச்சினையாக மாறிவிடுகிறது. இந்த வேலிகள் நிரந்தர வேலிகளாக மாறி விடுகின்றன. இதனால் மக்கள் யானை வந்தாலும் பரவாயில்லை வேலியே வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் இருக்கிறார்கள்.
ஏ.தௌபீக் பிரதேச சபை முன்னாள் தலைவர்
புல்மோட்டை பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஏ.தௌபீக் திருகோணமலை மாவட்டத்தில் ஒவ்வோரு பிரதேச செயலகப் பிரிவிலும் பிரச்சினைகள் நிலவுவதாகத் தெரிவித்தார். திருகோணமலை மாவட்டத்தில் நிர்வாக அதிகாரிகளாக முஸ்லிம்கள் இல்லாமை பிரச்சினையாக உள்ளது. ஜயபூமி, சுவர்ணபூமி காணி உறுதிகள் தமிழர்களுக்கு வழங்கப்படுகின்றன. முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவதில்லை என்றும் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; முஸ்லிம் நிர்வாக அதிகாரிகள் இங்கு வந்து கடமையாற்றுவதற்கு ஆர்வமில்லாமல் இருக்கிறார்கள். சமூக உணர்வுடன் வேறு பிரதேசங்களிலிருந்து முஸ்லிம் அதிகாரிகள் வந்து இப்பகுதியிகளில் கடமையாற்ற வேண்டும்.
புல்மோட்டை பிரதேசத்தில் 5 பௌத்த விகாரைகள் இருந்ததாகவும், ஒவ்வொரு விகாரைக்கும் 500 ஏக்கர் காணி இருந்ததாகவும் கூறுகிறார்கள். விகாரைகள் இருந்ததாகக் கூறுவதில் எமக்கு பிரச்சினை இல்லை ஆனால் காணிகள் இருந்ததற்கான ஆதாரங்கள் எதுவுமில்லை. அவர்கள் கோரும் நிலம் வழங்கப்பட்டால், நாம் எமது வாழ்விடங்கள், பள்ளிவாசல்கள், பாடசாலைகள் அனைத்தையும் இழக்க வேண்டியேற்படலாம். நாம் வெளியேற வேண்டி ஏற்படலாம்.
நிர்வாகக்கட்டமைப்பு எமக்கு பாதகமாக இருக்கிறது. இதனால் முதலமைச்சர் முஸ்லிம் ஒருவராக இருந்தாலும் அவராலும் அமைச்சர்களாலும் நகர்வுகளை முன்னெடுக்க முடியாதுள்ளது என்றார்.
தீர்வுகள்
திருகோணமலை மாவட்டத்தில் எமது மக்கள் காணி உரித்தாவணம் தொடர்பில் அக்கறையில்லாமல் இருக்கிறார்கள். எனவே மக்கள் இது விடயத்தில் தெளிவுப்படுத்தப்பட வேண்டும். மக்கள் தமது காணிகளுக்கான ஆவணங்களைக் கொண்டிருந்தாலே பிரச்சினைகளுக்கு இலகுவாக தீர்வுகளை எட்டலாம்.
2009 ஆம் ஆண்டுக்குப் பின்பே அநேக காணிகள் பறிபோயுள்ளன. 2013 ஆம் ஆண்டில் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டு காணிகள் கையேற்கப்பட்டுள்ளன. எனவே எமது காணிப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு சமூகமாகச் சேர்ந்து நாம் குரல் கொடுக்க வேண்டும். முஸ்லிம் அரசியல்வாதிகளும் தமது கவனத்தை இதன்பால் செலுத்த வேண்டும்.
காணிப்பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முறையாக கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். சில விடயங்கள் நிர்வாக ரீதியாக தீர்க்கப்படலாம். மாவட்ட ரீதியிலும், கச்சேரி மட்டத்திலும் சில பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம். தேசிய மட்டத்தில், கொள்கை ரீதியாகவும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்ளலாம் என எம்.எஸ்.எம்.நியாஸ் தெரிவித்தார்.
பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவை உடனடித்தீர்வு, மத்தியகால தீர்வு மற்றும் நீண்ட கால தீர்வு என அடையாளப்படுத்தப்பட்டு செயலில் இறங்க வேண்டும் எனவும் மாநாட்டில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இதனடிப்படையில் பிரச்சினைகள் வகைப்படுத்தப்பட வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டது.
அரசியல் தலைமைத்துவங்களின் பங்களிப்பு
திருகோணமலை மாவட்டம் உட்பட வட, கிழக்கில் வாழும் முஸ்லிம்களின் காணிப்பிரச்சினைகள் இன்று பூதாகரமாகியுள்ளன. தமது பூர்வீக காணிகளைப் பறிகொடுத்து மக்கள் அவற்றை மீளப் பெற்றுக் கொள்ள முடியாது வேதனையில் மூழ்கியுள்ளார்கள். 1990 களில் வெளியேறிய ஒரு முஸ்லிம் குடும்பம் பல குடும்பங்களாக விரிவடைந்துள்ளன. அவர்களது பரம்பரை அதிகரித்துள்ளது. இதனால் அவர்களுக்கு மேலதிக காணிகள் தேவைப்படுகின்றன. 1990 இல் பத்து வயது சிறுவனாக வெளியேறிய ஒருவர், இன்று 37 வயதை அடைந்திருக்கிறார். அவரும் திருமணம் செய்து அவருக்கென்று ஓர் குடும்பம் உருவாகியிருக்கும் இவையனைத்தும் இயற்கையின் மாற்றம்.
மீள் குடியேற்றம் இன்று பிரச்சினையாக உள்ளது. மீள் குடியேற்றம் விதவிதமாக கையாளப்படுகிறது. மீள் குடியேற்றத்தில் முஸ்லிம்கள் பல சவால்களை எதிர்கொண்டுள்ளார்கள். பெரும்பான்மை சமூகத்தின் மீள் குடியேற்றத்திற்கும் எமது மீள் குடியேற்றத்திற்குமிடையில் பாரிய வேறுபாடுகள் காணப்படுகின்றன. எமக்கு தகரமும், கம்பும் தந்து மீள் குடியேறுமாறு கூறப்படுகிறது.
நல்லாட்சியில் நல்லது நடக்க வேண்டுமென்று வாக்களித்த மக்களின் துயர் துடைப்பதும் அவர்களுக்கு அவர்களது பூர்வீக காணிகளை தாமதியாது வழங்குவதும் அரசாங்கத்தின் பொறுப்பாகும்.


Comments
Post a Comment