முஸ்லிம் மாணவிகளுக்கெதிரான போலிக் குற்றச்சாட்டு
தற்போது நடைபெற்று வரும் க.பொ.த . உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் முஸ்லிம் மாணவிகள் சிலர் தமது ஆடைகளைப் பயன்படுத்தி பரீட்சை மோசடியில் ஈடுபடுவதாக இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூலமாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை என நிரூபிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறைப் பிரதேசத்தில் பிரபல பாடசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை உயர்தரப் பரீட்சை நிலையத்தில் பரீட்சைக்குத் தோற்றிய முஸ்லிம் மாணவி ஒருவர் தனது ஆடைக்குள் புளு டூத் கருவியை மறைத்து வைத்து பரீட்சை எழுதிய நிலையில் கையும் மெய்யுமாகப் பிடிக்கப்பட்டு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக கடந்த திங்கட்கிழமை தமிழ் இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இதனையடுத்து மேற்படி விவகாரம் சமூக வலைத்தளங்களில் கடும் வாதப் பிரதிவாதங்களுக்கு இட்டுச் சென்றதை அவதானிக்க முடிந்தது.
எனினும் இந்த செய்தி இட்டுக்கட்டப்பட்டது என்பதை அப் பகுதியைச் சேர்ந்த கல்வி அதிகாரிகளும் பல்வேறு சமூக அமைப்புகளும் முக்கியஸ்தர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாக இந்த விவகாரம் தொடர்பில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். அகமட் நியாஸ், இலங்கை பரீட்சை திணைக்களத்தின் ஆணையாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,
நடைபெற்றுக்கொண்டிருக்கிற க.பொ.த. (உ/த) பரீட்சையில் சம்மாந்துறை வலயத்தைச் சேர்ந்த பிரபல்யமான பாடசாலை ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (11.08.2017) பரீட்சை மண்டபத்தில் மாணவி ஒருவர் பரீட்சையின் போது புளூடுத் (Bluetooth), ஹெட்செட் (Headset) உதவியுடன் பரீட்சை எழுதியதாகவும், அவரை மேற்பார்வையாளர் கையும் மெய்யுமாகப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகவும், மாணவி பரீட்சை செயற்பாட்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டு பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும் கடந்த 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் இணையத்தளங்கள் மூலமாக செய்திகள் வேகமாகப் பரவி சம்மாந்துறை மாணவர் மத்தியிலே பாரியதொரு பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
சம்மாந்துறை வலயத்தில் மொத்தமாக 13 நிலையங்களில் பின்வருமாறு உயர்தரப் பரீட்சை நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. கமு / சது/ சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் 5 நிலையங்கள், கமு/ சது/ அல்– மர்ஜான் மகளிர் கல்லூரியில் 4 நிலையங்கள், கமு/ சது/ வீரமுனை RKM மகா வித்தியாலயத்தில் 1 நிலையமும், கமு/சது/அஷ்ரப் மத்திய கல்லூரியில் 1 நிலையமும், கமு/ சது/ நாவிதன்வெளி அண்ணாமலை மகா வித்தியாலத்தில் 2 நிலையங்களும் ஆகும்.
மேற்படி நிலைய மேற்பார்வையாளர்களிடமும், இணைப்பாளர்களுடனும் இச்செய்தி பற்றிக் கேட்டபோது அவ்வாறானதொரு நிகழ்வு நடக்கவில்லை என்பதை உறுதியுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மற்றும் கல்முனை கல்வி மாவட்டப் பரீட்சைக்கு பொறுப்பான பிராந்திய சேகரிப்பு நிலைய அதிகாரி, பிராந்திய மேற்பார்வையாளர்கள் ஆகியோரிடம் இதுபற்றி வினவிய போது இவ்விடயம் சம்பந்தமாக எவ்வித முறைப்பாடும் இதுவரை எமக்குக் கிடைக்கவில்லை என்பதையும் தெளிவாகத் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறான போலியான செய்திகள் எமது மாணவ மாணவிகளின் எதிர்காலத்தை வெகுவாகப் பாதிக்குமென நம்புகிறோம். பாடசாலை அதிபர்கள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் இச்செய்தி பற்றி தமது விசனத்தைத் தெரிவித்துள்ளனர்.
இஸ்லாமிய மாணவி தனது ஹபாயாவுக்குள் புளூடுத்தை (Bluetooth) மறைத்து வைத்துள்ளதாகவும், அதனை சிங்கள மேலதிக மேற்பார்வையாளர் கண்டுபிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததாகக் கூறப்படும் செய்தியானது இன முறுகலை ஏற்படுத்தி இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தைப் பாதிப்பதாக அமைகின்றது. ஊடகங்கள் போலியாக இன முறுகலை ஏற்படுத்துவதற்கு ஹபாயாவை கருவியாகப் பாவிக்கின்ற காலகட்டத்தில் இச்செய்தி நிரந்தர அமைதியை சீர்குலைக்கும் என்று அச்சமடைகின்றோம்.
நேர்மையாகவும் நியாயமாகவும் இலங்கை நாடு முழுவதும் பரீட்சையை ஒழுங்குபடுத்தி நடாத்திக் கொண்டிருக்கும் தங்களுக்கும் இச்செய்தி அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்பதனால் மேற்படி இணையதளங்களுக்கு எதிராகவும் இச் செய்தியை ஒலிபரப்பிய வானொலிக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறேன் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த விடயம் தொடர்பில் சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபை, ஜம்இய்யதுல் உலமா சபை மற்றும் மஜ்லிஸ் அஷ்ஷூறா ஆகியன இணைந்து நேற்று முன்தினம் ஊடக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளன.
'' சம்மாந்துறையின் கல்வி வளர்ச்சியினை ஏற்றக் கொள்ள முடியாத காழ்ப்புணர்சி கொண்டவர்களும், முஸ்லிம் சமூகத்தை இழிநிலைப்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டும் சதிகாரர்களினதும் முயற்சியே இந்த செய்தியாகும்.
இவ்வாறான எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லாத பொறுப்புணர்ச்சியற்ற செய்தியினை வெளியிட்ட இணையதளங்களுக்கும், ஊடக நிறுவனங்களுக்கும் வன்மையான கண்டனத்தையும் எதிர்ப்பினையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
இவ்வாறான போலியான செய்திகள் எமது மாணவர்களின் எதிர்காலத்தை வெகுவாகப் பாதிப்பதுடன், முஸ்லிம் சமூகத்தையும், கலாசாரத்தினையும், முஸ்லிம் பெண்கள் அணியும் ஹபாயாவினையும் இழி நிலைப்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டும் சதிகாரர்களினதும் முயற்சியாகும்.
இந்த விடயம் தொடர்பாக சம்மாந்துறை வலயக்கல்வி அலுவலகம், சம்மாந்துறை பொலிஸ் நிலையம் என்பன இவ்வாறான ஒரு நிகழ்வு இடம்பெறவில்லை என்று ஊர்ஜிதப்படுத்தும் நிலையில் இவ்வாறான பொய்யான செய்திகளை வெளியிட்ட ஊடக நிறுவனங்களுக்கு எதிராக இலங்கை தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணையத்திடம் முறைப்பாடு செய்து சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் அந்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உண்மையில் இந்த செய்தியானது இரண்டு நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. ஒன்று, முஸ்லிம் மாணவிகள் அணியும் பர்தா ஆடையைப் பயன்படுத்தி மோசடியில் ஈடுபடுகின்றனர் எனக் கூறுவது. அடுத்தது, இவ்வாறான மோசடிகள் மூலமாகவே முஸ்லிம் மாணவிகள் பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக்கழகம் நுழைகிறார்கள் எனும் அபிப்பிராயத்தை தோற்றுவிப்பது.
முஸ்லிம் சமூகத்தின் கலாசாரம் மீதும் கல்வி எழுச்சியின் மீதும் காழ்ப்புணர்ச்சி கொண்ட சக்திகளே இவ்வாறான திட்டமிட்ட உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு வருகின்றன என்பதில் சந்தேகமில்லை. புற்றீசல் போல புறப்பட்டுள்ள வகைதொகையற்ற செய்தி இணையத்தளங்களை கட்டுப்படுத்துவது அவ்வளவு இலகுவான காரியமல்ல. எனினும் இது தொடர்பில் முறைப்பாடுகள் முன்வைக்கப்படும் போது தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவும் இணையக் குற்றங்கள் தொடர்பான பொலிஸ் பிரிவும் இணைந்து துரித கெதியில் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.
நாட்டில் இன்று இனங்களிடையேயும் மதங்களிடையேயும் இணையதளங்களையும் சமூக வலைத்தளங்களையும் பயன்படுத்தியே அதிகம் வெறுப்பு விதைக்கப்படுகிறது. ஒருவரையொருவர் தப்பபிப்பிராயம் கொள்ளவும் அதன் மூலம் வன்முறைகளைத் தூண்டவும் இவ்வாறான இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் காரணமாக அமைந்துவிடுகின்றன.
எனவேதான், அரசாங்கம் இவ்வாறான வதந்திகளைக் கிளப்பிவிடுகின்ற நபர்களுக்கு எதிராகவும் இணையதளங்களுக்கு எதிராகவும் விரைந்து நடவடிக்கை எடுக்கக் கூடிய பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்.


Comments
Post a Comment