மகிந்தவுக்கு யோசனை முன்வைத்த இந்திய புலனாய்வுப் பிரிவு


ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிராக யோசனை கொண்டு வரப்படும் முன்னர், இந்திய புலனாய்வுப் பிரிவு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் யோசனை ஒன்றை முன்வைத்ததாகவும் அதனை ஏற்றுக்கொண்டிருந்தால், மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களை தவிர்த்திருக்கலாம் என அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச அந்த யோசனையை ஏற்றுக்கொள்ளாதது அவரதும் நாட்டினதும் துரதிஷ்டம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

வடக்கு மாகாண சபைத் தேர்தலை துரிதமாக நடத்துவது, வடக்கு, கிழக்கிற்கான ஆளுநர்களாக இராணுவத்தினரை நியமிப்பதில்லை, பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் தொடர்பான பிரச்சினை மீளாய்வு செய்ய ஆணைக்குழுவை நியமிப்பது போன்ற அறிவிப்புகளை வெளியிடுமாறு இந்திய புலனாய்வுப் பிரிவு யோசனைகளை முன்வைத்திருந்தது.

இந்த யோசனைகளை ஏற்றுக்கொள்ளாதது தவறு என்பதை மகிந்த ராஜபக்ச பின்னர் உணர்ந்து கொண்டதாகவும் எஸ்.பி. திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, இலங்கையுடன் இருந்தால், ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு எதிராக எந்த யோசனைகளையும் கொண்டு வந்திருக்காது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments