நல்லாட்சி அரசு நடத்தும் தர்ம யுத்தம்! தர்மம் வெல்லும்!
நாட்டை நேரான பாதையில் இட்டுச் செல்லவேண்டுமானால் ஜனநாயகமும், நல்லிணக்கமும் இன்றியமையாதவையாகக் காணப்படுவதாக ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர சுட்டிக்காட்டியிருக்கின்றார்.
தேச விடுதலைக்காக சிங்கள மக்களோடு தமிழ், முஸ்லிம் சமூகங்களும் இணைந்து செயற்பட்டதை நினைவு கூர்ந்திருக்கும் அமைச்சர், சிங்கள மக்களில் பலர் அதனை மறந்து தமிழ், முஸ்லிம் மக்களை விரோதிகளாகவும், துரோகிகளாகவும் பார்ப்பதாக வேதனையுடன் தெரிவித்திருக்கின்றார்.
அமைச்சர் மங்களவின் இந்தக் கருத்துகளை நாம் வெறுமனே அரசியல் மேடைப் பேச்சாக எடுத்துக் கொள்ள முடியாது.
1948ல் எமது நாடு சுதந்திரம் பெறுவதற்காக சிங்கள, தமிழ், முஸ்லிம் தலைவர்கள் அன்று ஒரு குடையின் கீழ் அணிதிரண்டு போராடியதை மறந்து விட்டோம்.
அன்று முஸ்லிம்களும், தமிழர்களும் சிங்கள மக்களுடன் ஒன்றுபட்டிரா விட்டால் இன்றளவும் நாடு அந்நியர்களுக்கு அடிமைப்பட்டே இருக்கும் நிலைதான் தொடரும்.
சுதந்திரத்துக்குப் பின்னர் நாட்டில் இன, மத, மொழி பேதங்கள் வளர்ச்சியடைந்து அவை கட்சி அரசியலாக மாற்றம் பெற்று நாட்டை பொருளாதார ரீதியிலும் பின்னடைவு காணச் செய்து பாதாளத்துக்கு இட்டுச் சென்று கொண்டிருப்பதை வெளிப்படையாகவே காணக் கூடியதாக உள்ளது.
இந்தப் பேராபத்திலிருந்து நாட்டை மீட்டெடுக்க வேண்டுமானால் ஜனநாயகமும் நல்லிணக்கமும், இனங்களுக்கிடையேயான புரிந்துணர்வும் ஏற்பட வேண்டியது மிக அவசியம்.
இத்தகைய நல்லிணக்கம், ஜனநாயகம், புரிந்துணர்வு ஒருசேர ஏற்படாத வரை தேசத்தை அழிவிலிருந்து மீட்டெடுக்க முடியாது.இதனை ஒவ்வொருவரும் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இது தொடர்பில் சகல மட்டத்திலும் புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டியது மிக அவசியமானதாகும். எமது எதிர்காலச் சந்ததியினரின் நலனுக்காகவேனும் நாட்டில் நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட வேண்டும்.
இனவாதமும், மதவாதமும் எதிர்காலப் பரம்பரையினரின் வாழ்க்கையைப் பாதிக்க இடமளிக்கப்படக் கூடாது.
எம்மால் அடைய முடியாத முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் எதிர்காலச் சந்ததியினர் பெற்றுக் கொள்வதற்காகவேனும் நாம் இன, மத, மொழி பேதம் கடந்து ஒன்றுபட வேண்டியுள்ளது.
நாட்டில் இனவாதச் செயற்பாடுகள் தலைதூக்கி வருகின்ற நிலையில், அரசு அவற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்த போதிலும் இனவாதச் சக்திகளால் எமது மக்கள் தவறாக வழிநடத்தப்பட்டுக் கொண்டிருப்பதையே காண முடிகிறது.
இந்த இனவாதிகளின் செயற்பாடுகளை முடக்க முடியாததொரு நிலை உருவாகி இருக்கின்றது. சில சக்திகள் தமது சுயநல அரசியலுக்காக இந்த இனவாதம் என்ற ஆயுதத்தை கையிலெடுத்துள்ளமை வேதனை தரக் கூடியதாகும்.
இனவாதச் சக்திகள் முறியடிக்கப்பட வேண்டுமென்பதில் எவருக்கும் மாறுபட்ட கருத்துக் கிடையாது. ஆனால் அதனை கட்டுப்படுத்த முயற்சிக்கின்ற போது அரசுக்கு சிலவேளை பாதகமான அனுபவமாக அமைத்து விடலாம்.
ஏனெனில் உணர்வு சார்ந்த விடயங்கள் வெளிப்படுத்தப்படலாம். மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி அதில் அரசியல் குளிர்காய்வதில் இவர்கள் வல்லவர்களாகத்தான் காணப்படுகின்றனர்.
எனவே இந்த விடயத்தை அரசு நிதானமாகவே கையாள வேண்டிய அவசியம் இருக்கின்றது. பொறுமையுடன்தான் காய்நகர்த்த வேண்டியுள்ளது.
நல்லிணக்கத்தை உத்தரவாதப்படுத்துவதோடு ஜனநாயகத்தையும் பாதுகாக்க வேண்டிய தேவை இன்று ஏற்பட்டுள்ளது. இனங்கள் பிளவுபடுத்தப்படுவதால் யாருக்கு பாதகம்? நாட்டுக்குத்தானே!
மக்களை இனரீதியாக பிளவுபடுத்தி, அதன் மூலம் அரசியல் இலாபம் தேடும் சக்திகளுடன் துணை போகும் பிரகிருதிகள் விடயத்திலும் நாம் விழிப்புடன் செயற்பட வேண்டியுள்ளது.
இனவாதத்தீ கொழுந்து விட்டெரியுமானால் அதன் பின்விளைவுகளை ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
மக்களிடையே ஒற்றுமையும், நல்லிணக்கமும் துளிர்விடத் தொடங்கிய வேளையிலேயே இனவாதத்தீ மூட்டப்பட்டது.
இதன் பின்னணியில் இருந்தவர்கள் யாரென்பதை அரசு தெரிந்திருக்கும் நிலையிலும் அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கத் தவறி வருகின்றது. அதற்கான காரணமும் நன்கு தெரிந்ததே.
அது பெரும்பான்மையை பகைக்க முடியாததென்பதேயாகும். காவியுடைக்குள் இருந்தே இந்த பயங்கரவாதம் வெளிப்பட்டுக் கொண்டிருப்பது மற்றொரு காரணமாகும்.
நல்லிணக்கத்தை உருவாக்கும் முயற்சியின் போது தடைகள் வருமானால் அவற்றை உடைத்தெறிந்து முறியடித்து பயணத்தைத் தொடர்வோம் என கடந்த வாரத்தில் பிரதமர் மட்டக்களப்பில் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.
இந்த உறுதிமொழியை நிறைவேற்றுவதில் அரசு பின்வாங்கக் கூடாது. சவால்களை முறியடிக்கும் போது சில்லறை சலசலப்பு வரலாம். அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை.
யதார்த்தத்தை மக்கள் நிச்சயம் புரிந்து கொள்வார்கள்.நல்லிணக்கப் பயணத்தில் அரசு சரியான பாதையிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றது.
ஆனால் சுயநல அரசியல் சக்திகள் பயணப் பாதையை இனவாதத்தின் பக்கம் திசைதிருப்ப முயற்சிக்கின்றன.
இந்த நிலையில் பார்க்கின்ற போது நல்லாட்சி அரசு தர்மயுத்தம் நடத்திக் கொண்டிருக்கின்றது. நிச்சயமாக தர்மம் வெல்லும் என்று உறுதியாக நம்பலாம்.


Comments
Post a Comment