கூட்டரசின் ஆயுளை நீடிக்க ஜனாதிபதி பச்சைக்கொடி
தேசிய அரசுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கை எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவுக்கு வருகின்ற நிலையில், அதை புதுப்பித்து 2020 வரை கூட்டரசை தொடர்வதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இணக்கம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்றுமுன்தினம் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இதன்போது சமகால அரசியல் நிலைவரங்கள் குறித்து விரிவாகப் பேசப்பட்டுள்ளது.
தேசிய அரசை அமைப்பதற்காக ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குமிடையே ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையின் ஆயுட்காலம் எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் நிறைவுக்குவருகின்றது.
அதன்பின்னர் தேசிய அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறவேண்டும் என்று சில உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
எதிர்வரும் டிசம்பர் 31ஆம் திகதிவரை பொறுமைகாக்குமாறு அதிருப்தி நிலையில் இருக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களுக்கு ஜனாதிபதி ஆலோசனையும் வழங்கியிருந்தார்.
எனவே, டிசம்பர் 31இற்கு பிறகு தேசிய அரசிலிருந்து சுதந்திரக் கட்சி வெளியேறும் எனக் கூறப்படும் நிலையிலேயே 2020வரை ஆட்சியைத் தொடர ஒத்துழைக்குமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் சிலர் தேசிய அரசின் செயற்பாடுகளை விமர்சித்துவருகின்றனர் என்றும், இதனால் மக்கள் மத்தியில் விரக்தி ஏற்பட்டுள்ளது என்றும் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ளனர்.
இது பற்றி தான் கவனம் செலுத்துவார் என ஜனாதிபதி உறுதியளித்ததுடன், ஐக்கிய தேசியக் கட்சியும் சில விட்டுக்கொடுப்புகளை செய்யவேண்டுமென சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், கடந்த ஆட்சியின்போது இடம்பெற்ற ஊழல்,மோசடிகள், உள்ளூராட்சி சபைத் தேர்தல் உட்பட மேலும் சில விடயங்கள் சம்பந்தமாகவும் இதன்போது விரிவாகப் பேசப்பட்டுள்ளன.


Comments
Post a Comment