உள்ளூராட்சி சபைத் தேர்தலை இனியும் தாமதப்படுத்த முடியாது: ரணில் விக்ரமசிங்க
உள்ளூராட்சி சபைத் தேர்தலை இனியும் தாமதப்படுத்த முடியாது எனவும், புதிய முறையில் அதை விரைவில் நடத்தவேண்டியுள்ளது எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் குறித்து எதிரணி உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலேயே பிரதமர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
உள்ளூராட்சி சபைத் தேர்தல் திருத்தச் சட்டமூலம் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவால் 55 இற்கும் மேற்பட்ட திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. மேலும் பல திருத்தங்களும் இருக்கின்றன.
அவை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டதும் குழுநிலை விவாதத்தின் போது நாடாளுமன்ற நிலையியல் கட்டளைக்கேற்ப திருத்தங்களைச் செய்துகொள்ளலாம்.
நீண்ட பேச்சுகளுக்கு மத்தியில் புதிய முறைமைக்கு அனைத்து கட்சிகளும் ஆதரவு தெரிவித்துள்ளன. எனவே, அந்த முறைமைக்கு ஒத்துப்போன திருத்தங்கள் மாத்திரமே உள்வாங்கப்படும். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும். இனியும் அதை ஒத்திவைக்க முடியாது.
ஆகவே, சட்டமூலத்தை நிறைவேற்றுவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன். புதிய முறையில் வாக்களிப்பதற்கு இதன்மூலம் மக்களுக்கு பழக்கம் ஏற்படும். அது அடுத்துவரும் தேர்தல்களுக்குப் பயனுடையதாக இருக்கும்.
குறைகள் இருக்கும் பட்சத்தில் அவற்றை சீர்திருத்திக்கொள்ளலாம். புதிய அரசமைப்புக்கு முன்னர் அவற்றை சரிசெய்து கொள்ளலாம் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.


Comments
Post a Comment