அமைச்சரவையில் சூடுபிடித்த கிரிக்கெட் !
ஜனாதிபதி மைத்திரி தலைமையில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இலங்கை கிரிக்கெட் அணி தொடர்பில் கடும் அமளி ஏற்பட்டுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர மற்றும் முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரும், பெற்றோலிய வளத்துறை அமைச்சருமான அர்ஜூன ரணதுங்க ஆகிய இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக அமைச்சரவை தகவல்கள் தெரிவிக்கின்றன.
நேற்றைய அமைச்சரவை கூட்டத்தின் போது, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர சுகததாச விளையாட்டரங்கு தொடர்பான அமைச்சரவை பத்திரமொன்றை முன்வைத்துள்ளார். இதற்கு பெற்றோலிய வளத்துறை அமைச்சர் அர்ஜூன ரணதுங்க கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளார். அத்தோடு, இலங்கை கிரிக்கெட் தற்போது சூதாட்டக்காரர்களின் கைகளில் சிக்கியுள்ளதென்றும் குறிப்பிட்டுள்ளார். இதனால் சீற்றமடைந்த அமைச்சர் தயாசிறி, விளையாட்டுத்துறை அமைச்சு தொடர்பில் பிரச்சினை இருந்தால் அந்த அமைச்சையும் பொறுப்பெடுத்து நடத்திச் செல்லுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இறுதியில் ஜனாதிபதி மைத்திரி தலையிட்டு இருவரையும் சமரசப்படுத்தியுள்ளார்.
இந்தியாவுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் இலங்கை கிரிக்கெட் அணி தொடர் தோல்விகளைச் சந்தித்து வரும் நிலையில், இலங்கை கிரிக்கெட் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் தமது இராஜினாமாக் கடிதத்தை நேற்று விளையாட்டுத்துறை அமைச்சருக்குக் கையளித்துள்ளனர்.


Comments
Post a Comment