ஏ.ரி.எம். பஸ்லி அவர்களின் மரணச் செய்தி என் காதுகளில் எட்டியதும் மிகுந்த கவலையடைந்தேன்


சகோதரர் ஏ.ரி.எம். பஸ்லி அவர்களின் மரணச் செய்தி என் காதுகளில் எட்டியதும் மிகுந்த கவலையடைந்தேன். 42 வயதிலேயே அவர் இறையடி சேரந்துவிட்டார். குருநாகல் மடிகே மதியால பிரதேசத்தைச் சேர்ந்த சகோதரர் பஸ்லி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தீவிர ஆதரவாளர்களில் ஒருவர். அது மாத்திரமின்றி கட்சி சார்பாக தேர்தலிலும் போட்டியிட்டிருந்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சி சார்ந்த பொதுக் கூட்டங்கள் நடைபெறும்போது, பஸ்லி அவற்றை சிறப்பான முறையில் தொகுத்து வழங்கி மேடைகளை அலங்கரித்திருக்கிறார். வானொலி ஒன்றிலும் அறிவிப்பாளராக கடமையாற்றிய இவர், சிறந்ததொரு அறிவிப்பாளராக மக்கள் மத்தியில் வலம்வந்தார்.

அண்மையில் மடிகே மிதியால வீதிகளை காபட் இட்டு செப்பனிடும் பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்ட பின்னர், நடைபெற்ற பொதுக்­கூட்­டத்துக்கு பஸ்லி வருகை தந்திருந்தார். சுகயீனம் காரணமாக அவரால் அறிவிப்பு செய்யமுடியாவிட்டாலும், மேடையில் எங்களுடன் ஒன்றாக அமர்ந்திருந்தார். அப்போது அவருடைய சுகநலன்கள் குறித்தும் விசாரித்து அறிந்துகொண்டேன்.
இந்நிலையில், இன்று வந்த பஸ்லியின் மரணச் செய்தி எனக்கு மிகுந்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஜனாஸா நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, தற்போது கண்டியிலிருந்து மடிகே மதியால நோக்கி சென்றுகொண்டிருக்கிறேன்.

பஸ்லியின் மரணத்தினால் துயருறும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதோடு, அன்னாரின் பாவங்களை மன்னித்து மறுமைநாளில் ஜன்னத்துல் பிர்தெளஸ் எனும் சுவர்க்கம் கிடைக்கவேண்டும் எனவும் பிரார்த்திக்கிறேன்.

ஆமீன்!

ரவூப் ஹக்கீம் எம்.பி.
தலைவர் – ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ்
நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர்

Comments