முஸ்லிம் காங்கிரசை நாங்கள் ஏன் விமர்சிக்கவேண்டும்..?


முஸ்லிம் காங்கிரசை பெரும்பாண்மையான மக்கள் முஸ்லிம்களின் உரிமையை பெற்றுத்தறும் கட்சியாகவே பார்க்கின்றனர். அதனால்தான் பெரும்பாண்மையான முஸ்லிம் மக்கள் அந்த கட்சியை ஆதரித்தும் வருகின்றார்கள்.

ஆனால் முஸ்லிம்களின் என்னங்களை இந்தக்கட்சியினால் திருப்திபடுத்த முடிகின்றதா என்ற கேள்வி எழுந்தால்,  அதற்கு இல்லையென்றே பதில் கூறவேண்டியுள்ளது. இந்த கட்சி என்ன நோக்கத்துக்காக ஆரம்பிக்கப்பட்டதோ அந்த நோக்கத்தை நிறைவேற்ற தவறிவருகின்றது என்ற காரணத்தை வைத்தே ஒருசில மக்கள் அதனை ஆதரிக்க தயங்கி வருகின்றார்கள் எனலாம்.

அதன் காரணமாகவே இதற்கு பதிலாக வேறு முஸ்லிம் கட்சிகளை முஸ்லிம்களில்  சிலர் ஆதரித்து வருவதையும் நாம் காணலாம். அந்த கட்சிக்காரர்களும்  இவர்களைப்போல் பதவிக்கும் பட்டத்துக்கும்  ஆளும் கட்சிகளிடம் சோரம் போய் கிடக்கின்றார்கள் என்பதையும் மறைப்பதற்கு இல்லை.
இருந்தாலும் அபிவிருத்தி விடயத்தில் மு.காங்கிரசை விட மற்ற கட்சிக்காரர்கள் திறம்பட செயல்படுகின்றார்கள் என்பதிலும் மாற்றுக்கருத்து இருக்கமுடியாது.

உரிமை விடயத்தில் எந்த முஸ்லிம்கட்சிகளும் எதையும் இதுவரை சாதித்ததாக காணமுடியவில்லை. இவர்கள் தங்களுடைய கட்சியையும் ஆதரவாளர்களையும் திருப்தி படுத்துவதற்காக பதவி பட்டங்கள் அவர்களுக்கு தேவைபடுகின்றது. இவர்களுடைய இந்த பலவீனங்களை தங்களுக்கு சாதகமாக ஆளும்வர்க்கமான பெரும்பாண்மை கட்சிகள் நன்றாகவே பயன்படுத்தி வருகின்றனர்.

அதன் காரணமாகவே  தங்களுக்கு பதவி பட்டங்களை அள்ளித்தறும் ஆட்சியாளர்களிடம் தலை குனிந்து கூனிக்குறுகி நிற்கின்றார்கள் இந்த முஸ்லிம் பெயர்தாங்கி முஸ்லிம் தலைவர்கள். அவர்களுக்கு பதவி பட்டங்களை அள்ளிக்கொடுத்த எஜமானர்களான அரச தலைவர்களின் மனம் நோகாமல் பார்த்துக் கொள்வதே, அவர்களுக்கு பெரும்பாடாக இருந்து வருகின்றது. அதற்குள் சமூகம் சார்ந்த விடயங்களில் ஏதாவது நஸ்டங்கள் ஏற்படும்போது அதனை எதிர்த்து நிற்பதற்கும் பலம் இல்லாதவர்களாகவே அவர்கள் இருந்து வருகின்றனர்.

மு.காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்து ஏதாவது செய்துவிட்டால், அதனை அ.இ.ம.காங்கிரஸ் தனக்கு சார்பாக பயன்படுத்திக் கொள்கின்றது. அதே போன்று அ.இ.ம.காங்கிரஸ் அரசாங்கத்தை எதிர்த்து ஏதாவது நடவடிக்கையில் இறங்கினால் அதனை மு.காங்கிரஸ் தங்களுக்கு சார்பாக அதனை பயன்படுத்திக் கொள்கின்றது என்ற அச்சம் இந்த இரு கட்சிகளுக்குள்ளும் இருந்து வருகின்றது.
இதன் காரணமாகவே  முஸ்லிம் சமூகம் பல விடயங்களில் அவர்களுக்கு கிடைக்கவேண்டிய உரிமைகளை இழந்து வருகின்றார்கள் என்பதே உண்மையாகும்.

இந்த நல்லரசாங்கம் இந்த விடயத்தை நன்றாகவே பயன்படுத்தி வருகின்றது. உள்ளுராட்சி மன்ற தேர்தல் சட்டம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், அது நிறைவேற்றப்பட்டால் முஸ்லிம்களுக்கு பாரிய நஷ்டத்தை உண்டாக்கிவிடும் என்றும்  முஸ்லிம் தலைவர்களான ரஹுப்ஹக்கீம் அதேபோன்று ரிசாட் பதியுதீன் போன்றோர்கள் பாராளுமன்றத்திலே கூக்குரலிட்டார்கள். ஆனால் அவர்களே அந்த திட்டத்துக்கு ஆதரித்து வாக்களித்தார்கள் என்ற போது மிகவும் ஆச்சரியமாக இருந்தது. காரணம் கேட்டால் பிரதமர் ரணில் அவர்கள் சில திருத்தங்களை செய்வதற்கு உத்தரவாதம் தந்துள்ளார் என்றும் அதனால் அதனை ஆதரித்தோம் என்று கூறுகின்றார்கள்.
ஆனால் ரணிலின் உத்தரவாதம் எந்தளவு தங்களுக்கும், தாங்கள் சார்ந்த சமூகத்துக்கும் உதவும் என்று அவர்களினால் இதுவரை உறுதிப்படுத்த முடியாத நிலையில் தலைகுனிந்து நிற்கின்றார்கள்.

அதேபோன்றுதான் 20வது திருத்தச்சட்டம் வந்தபோதும் அவர்கள்  நடந்துகொண்டார்கள். 
இந்த சட்டம் மாகாணசபைகளின் அதிகாரங்களை பறிக்கின்றது இதனை நாங்கள் ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று இவர்களே கூறினார்கள். பிறகு என்ன நடந்ததோ தெறியாது, அதில் சில திருத்தங்களை செய்து தறுவதாக வாக்குறுதி தந்துள்ளார்கள் என்ற காரணத்தைக்கூறி அந்த தீர்மானத்தை கிழக்கு மாகாணசபையில் ஆதரித்து வாக்களித்தார்கள். இந்த செயல்பாடு பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருந்தது மட்டுமல்ல பல விமர்சனங்களையும் ஏற்படுத்தியிருந்தது. (பின்னால் அந்த தீர்மானம் பிழையானது என்று உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.)

அதன் பிறகு எப்படியாவது மாகணசபை தேர்தல்களை நடத்தக்கூடாது என்ற உறுதிப்பாட்டில் இருந்த நல்லாட்சி அரசாங்கம் 20ஏ என்ற மாகாணசபை தேர்தல்  சட்டதிருத்தம் ஒன்றை கொண்டுவந்தது. அதிலே மாகாணசபை தேர்தலினூடாக பெண்களின் தெறிவை உறுதிப்படுத்தவேண்டியும், அதேநேரம் தொகுதி வாரியாகத்தான் உறுப்பினர்களை தெறிவு செய்யப்படவேண்டும் என்ற காரணத்தையும் கூறி அந்த சட்ட திருத்தத்திற்கு 2/3 பெரும்பாண்மையை பெற்று நிறைவேற்ற அரசாங்கம் முனைந்தபோது, முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களான ஹக்கீம், ரிசாட் அதேபோன்று மனோ கணேசன் போன்றோர் இது சிறுபாண்மை மக்களுக்கு பாரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் என்றும், இதனை நாங்கள் ஆதரிக்கமாட்டோம் என்றும் கூறியிருந்தார்கள்.

அப்படி கூறியவர்கள் கடைசிநேரத்தில் அந்த சட்டமூலத்திற்கு ஆதரித்து வாக்களித்தார்கள். அதற்கு அவர்கள் கூறிய காரணம் என்னவென்றால்,  கடைசிநேரத்தில் பிரதமர் ரணில் அவர்கள் தந்த வாக்குறுதிதான் என்று கூறினார்கள். இது எந்தளவு உண்மையென்று கூறமுடியாதுள்ளது என்றாலும் இதற்கான பல காரணங்களை பின்னால் அறியக்கூடியதாகவும்  இருந்தது.

இந்த சட்டமூலத்தை ஆதரிக்கமுடியாது என்று ரிசாட் போன்றோர் எதிர்த்து நின்றபோது ராஜித சேனாரத்ன அவர்கள் அடிப்பதற்கு முற்பட்டதாகவும் ஒரு கதை கூறப்பட்டது. அதே நேரம் மு.காங்கிரஸ் தலைவர் இந்த சட்டமூலத்தை பிரதமர் ரணிலின் வாக்கை நம்பி ஆதரிக்க தயாராகி விட்டதாகவும், அதன் பின் நாம் எதிர்ப்பதில் பயனில்லை என்ற நிலை வந்தபோதுதான் ரிசாட் போன்றோரும் இந்த சட்ட மூலத்தை ஆதரிக்கும் நிலைக்கு வந்ததாகும் கூறப்பட்டது.

இவர்களுக்குள் ஒற்றுமையில்லாததன் காரணத்தினால்தான் இந்த சட்டமூலத்தை ஆதரிக்கவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்ற உண்மையை நாம் அவதானிக்க்கூடியதாக இருக்கின்றது.  இந்த நேரத்தில் முஸ்லிம்களின் குரல் நாங்கள்தான் என்று கூக்குரலிடும் மு.காங்கிரஸ் அதனை எதிர்ப்பதற்கு முன்வந்திருந்தால் ரிசாட் கட்சியினரும் அதனை பின்பற்றி எதிர்த்து வாக்களித்திருப்பார்கள் என்றே கூறப்பட்டது.  ஆனால் முஸ்லிம்களுக்கு வழிகாட்டியாக இருக்கவேண்டிய மு.காங்கிரஸ் அந்த இடத்தில் மாற்றமாக நடந்து கொண்ட விடயம் முஸ்லிம் சமூகத்துக்கு ஏற்பட்ட பெரிய நஷ்டமாகும்.

இவர்களின் ஒற்றுமையிண்மையை அரசாங்கத்தில் உள்ளவர்கள் நன்றாகவே பயன்படுத்துகின்றனர் என்பதே உண்மையாகும்.  இதனால் முஸ்லிம் சமூகம் பாரிய நஸ்டத்தை பிற்காலத்தில் சந்திக்கப்போகின்றது என்ற உண்மையறிந்துதான் சில புத்திஜீவிகள் பேசிக்கொண்டிருக்கின்றார்கள். இப்படியான நிலையில்தான்  இதற்கு காரணமான முஸ்லிம்களின் குரலான மு.காங்கிரசை விமர்சிக்கவேண்டிய நிலைக்கு  நாங்கள் தள்ளப்படுகின்றோம் என்பதே உண்மையாகும்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.

Comments