ரோஹிங்ய அகதிகளை வெளியேற்றக்கோரி பிக்குகள் அட்டகாசம்
கல்கிசை பொலிஸ் பிரிவில் ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகத்தின் பாதுகாப்பின் கீழ், மூன்று மாடி வீடொன்றில் தங்க வைக்கப்பட்டிருந்த மியன்மாரில் இருந்து வந்த ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளை அங்கிருந்து உடனடியாக வெளியேற்றி நாடு கடத்துமாறு பிக்குகள் தலைமையிலான குழுவினர் நேற்று அவ்வீட்டை சுற்றிவளைத்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் அப்பகுதி எங்கும் பெரும் அச்ச சூழ்நிலை உருவானதுடன் ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பொலிஸார் அகதிகளை தமது பொறுப்பில் எடுத்தனர்.
இந் நிலையில் ரோஹிங்ய முஸ்லிம் அகதிகளின் பாதுகாப்பை உறுதிசெய்ய அவர்களை பொலிஸ் பொறுப்பில் எடுத்து பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளனர். இதனிடையே, நேற்றைய இந்த சம்பவம் தொடர்பில் கல்கிசை நீதிவானுக்கு அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் சம்பவம் தொடர்பில் விஷேட பொலிஸ் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.
நேற்றுக் காலையும், மாலையும் குறித்த வீட்டை தேரர்கள் தலைமையிலான குழுவினர் சுற்றிவளைத்து கலகம் விளைவிக்கும் வண்ணம் நடந்துகொண்ட நிலையில் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் கல்கிசை - இரத்மலானை வீதியில் அதிக வாகன நெரிசலும் ஏற்பட்டதுடன் பிரதேசத்தில் பதற்றமும் அதிகரித்தது.
ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் தொடர்பான ஆணையகத்தின் பாதுகாப்பிலேயே இவர்கள் இங்கு தங்கவைக்கப்பட்டுள்ளார்கள் என்று குறித்த விடுதியின் பொறுப்பாளர் எடுத்துக் கூறிய போதிலும் பிக்குகள் அதனை மறுத்து இவர்கள் சட்டவிரோதமாகவே தங்க வைக்கப்பட்டுள்ளார்கள் என்று கடும் தொனியில் தம் எதிர்ப்பை வெளியிட்டனர்.
இந் நிலையில் ஸ்தலத்துக்கு உடனடியாக கல்கிசை பொலிஸார் அழைக்கப்பட்டு நிலைமைமையைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றுக் காலை 10.15 மணியளவில் பிக்குகள் தலைமையிலான குழுவினர் குறித்த ரோஹிங்ய முஸ்லிம்கள் தங்கவைக்கப்பட்டிருந்த வீட்டுக்கு வந்து, வீட்டின் முன்பாக, அவர்களை வெளியேற்றுமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது, அவர்கள் வீட்டுக்குள் நுழையவும் முற்பட்ட நிலையில் ஸ்தலத்துக்கு கல்கிசை பொலிஸார் வரவழைக்கப்பட்டனர். இதனையடுத்து அப்போதும் பாடசாலைக்கு சென்றிருந்த அகதிச் சிறுவர்கள் ஓரிருவர் தவிர ஏனையோரை பொலிஸ் ட்ரக் வண்டி ஊடாக கல்கிசை பொலிஸ் நிலையத்துக்கு பொலிஸார் அழைத்து சென்றனர். அகதிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய இவ்வாறு அவர்களை பொலிஸார் பொறுப்பேற்றதாக கல்கிசை பிராந்திய பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந் நிலையில் பாடசாலையில் இருந்த சிறுவர்களும் பின்னர் பாதுகாப்பு கருதி பொலிஸ் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
அதன்பின்னர் நிலைமையை ஆராய்ந்த பொலிஸார் அகதிகளை மீளவும் அவர்கள் வசித்த வீட்டில் பிற்பகல் வேளையில் மீள குடியமர்த்தினர்.
எனினும் மீளவும் மாலை 5.30 மணியளவில் அப்பகுதியில் கூடிய சுமார் 70 பேர் வரையிலான பிக்குகள் உள்ளிட்ட கடும்போக்கு பெரும்பான்மை இனத்தவர்கள் கலகத்தை ஏற்படுத்தும் வண்ணம் அங்கு குழுமியதுடன் குறித்த வீட்டினுள் அத்துமீற முயற்சித்துள்ளதுடன் வீட்டின் மீது கல் வீசித் தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதன்போது இரு பொலிஸாருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. இதனால் மாலை வேளையில் மீளவும் அகதிகளை பாதுகாக்க பொலிஸார் கடும் பிரயத்தனத்தை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இதற்கு மேலதிகமாக அவர்கள் பிரதான பாதையில் வாகன போக்குவரத்துக்கு தடை ஏற்படும் வண்ணமும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இந் நிலையில், நிலைமை மோசமடைவதை உணர்ந்த பொலிஸார் ரோஹிங்ய அகதிகளை தமது பொறுப்பில் எடுத்து, ட்ரக் வண்டியில் மீண்டும் பொலிஸ் பாதுகாப்புடன் கல்கிசை பொலிஸ் நிலையம் அழைத்து சென்றனர்.
இந் நிலையில் நேற்று இரவு முழுவதும் அந்த அகதிகள் பொலிஸ் பாதுகாப்பின் கீழ் கல்கிசை பொலிஸ் நிலையத்தில் தங்கவைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. அத்துடன் இவர்களை மீண்டும் பாதுகாப்பான இடமொன்றில் தங்கவைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
கடந்த ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி 30 ரோஹிங்ய முஸ்லிம்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் கடற்படையினரால் காப்பாற்றப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தனர். இந் நிலையில் குறித்த ரோஹிங்ய முஸ்லிம்கள் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர். இதனையடுத்து அவர்களை மிரிஹான தடுப்பு முகாமில் தடுத்து வைக்க உத்தரவிடப்பட்டது.
அதன் பின்னரான வழக்கு விசாரணைகளின் போது, ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகம் (யு.என்.எச்.ஆர்.சி) , குறித்த ரோஹிங்ய முஸ்லிம்களை பொறுப்பேற்றது. மல்லாகம் நீதிவான் நீதிமன்றில், ஐ.நா. அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகம் சார்பில் அவர்களை வேறு நாடொன்றில் அகதிகளாக குடியேற்றும் வரை மிரிஹான தடுப்பு முகாமுக்கு வெளியே வைத்து பராமரிக்க அனுமதி பெறப்பட்டிருந்தது.
இதனையடுத்து முஸ்லிம் எயிட் என்ற அரச சார்பற்ற நிறுவனத்தின் அனுசரணையில் குறித்த 30 பேரும் இரத்மலானை பகுதியில் மூன்று மாடி வீடொன்று பெறப்பட்டு அங்கு தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றனர். இந்த 30 பேரில் இலங்கைக்கு வந்த பின்னர் புதிதாக ஒரு குழந்தை பிறந்துள்ள நிலையில் தற்போது மொத்தமாக 31 பேர் அங்கு தங்கவைக்கப்பட்டிருந்தனர். இவர்களில் 7 பெண்களும் 16 சிறுவர்களும் அடங்குவர். சிறார்களில் சிலர் பிரதேசத்தின் பாடசாலை ஒன்றிலும் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அறிய முடிகின்றது.
இந் நிலையில் மியன்மாரில் இருந்து தீவிரவாதிகள், அகதிகள் எனும் பேரில் நாட்டுக்குள் வந்துள்ளதாகவும் அவர்கள் சட்ட விரோதமாக தங்கியுள்ளதாகவும் தெரிவித்தே கல்கிசை பகுதியில் உள்ள குறித்த மூன்று மாடி வீடு பிக்குகள் தலைமையிலான குழுவினரால் சுற்றிவளைக்கப்பட்டது.
எனினும் அங்கு தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் அகதி அந்தஸ்து கோரிய ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகத்தின் பாதுகாப்பின் கீழ் இருந்துள்ளமை பொலிஸார் ஊடாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந் நிலையில் அவர்களின் பாதுகாப்பை பொலிஸார் உறுதி செய்ய நடவடிக்கை முன்னெடுத்துள்ளனர்.
இது தொடர்பில் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான மனிதாபிமான முகவரகம் அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடாத்தவுள்ளதுடன், இந்த பிக்குகளின் நடவடிக்கை தொடர்பில் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
இதன்போது பிக்குகள் குழுவுக்கு தலைமை தாங்கிய அக்மீமன தாயரத்ன தேரர் கூறுகையில், “இந்த மியன்மார் கைதிகள் உடனடியாக நாடு கடத்த வேண்டும். இவர்கள் ரோஹிங்ய முஸ்லிம் அடிப்படைவாதிகள். இவர்களைத் தவிர மேலும் பெருந்தோகையாக அடிப்படைவாதிகள் இங்கு கொண்டுவரப்பட்டிருக்கிறார்கள். அது குறித்த காணொலிக் காட்சிகள் அடங்கிய பதிவுகள் முகநூல், சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. இவர்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்காக அரசாங்கத்தின் மூலம் ஒழுங்குகள் செய்து கொடுக்கப்பட்டதாகவும் அறிகிறேன்” என்று கூறியுள்ளார்.
எனினும் இவரது குற்றச்சாட்டை இலங்கை கடற்படை பேச்சாளர் கொமாண்டர் லங்கானாத்த திஸாநாயக்க மறுத்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், இறுதியாக கடந்த ஏப்ரல் 30 ஆம் திகதியே 30 பேர் அடங்கிய ரோஹிங்ய அகதிகளை கடற்படையினர் பெறுப்பேற்றனர். பொதுவாக இலங்கையின் கடல் எல்லைக்குள் சட்டபூர்வமற்ற முறையில் பிரவேசிக்கும் எவரையும் கடற்படை கண்காணித்து வருகிறது. எவரும் பிரவேசிக்காதவாறு கடற்படையினர் அமர்த்தப்பட்டிருக்கிறார்கள் என்றார்.
இதேவேளை இந்த அகதிகள் விவகாரத்தில் நீதிமன்ற நடவடிக்கைகளை கையாண்டு வரும் ஆர்.ஆர்.ரி. அமைப்பின் தலைவர் சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் விடிவெ ள்ளிக்கு கருத்து தெரிவிக்கையில், இந்த அகதிகள் யு.என்.எச்.ஆர்.சி. இன் அனுசரணையுடன் பொலிசாருக்கு முறையாக எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டே கல்கிசை பகுதியில் தங்க வைக்கப்பட்டனர். அனைத்து நடவடிக்கைகளும் நீதிமன்ற உத்தரவிற்கிணங்க சட்டபூர்மவாகவே முன்னெடுக்கப்பட்டன. இந் நிலையில் இதனை எவராலும் எதிர்க்க முடியாது. இவர்களில் 16 சிறுவர்களும் 7 பெண்களும் இருக்கிறார்கள். இந்த அகதிகளைப் பாதுகாப்பது பொலிசாரின் கடமையாகும். இந்த அகதிகளைப் பாதுகாப்பதற்குத் தேவையான சட்ட ரீதியான நடவடிக்கைகளை நாம் விரைவில் முன்னெடுக்கவுள்ளோம்'' என்றார்.
மியன்மாரில் கடந்த ஆகஸ்ட் 25 ஆம் திகதி முதல் தொடர்ந்த வன்முறைகள் காரணமாக இலட்சக் கணக்கான அகதிகள் பங்களாதேஷுக்கு சென்றுள்ளனர். எனினும் இவர்களில் கணிசமானோர் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்துள்ளதாக கூறி கடும்போக்கு பௌத்த பிக்குகள் பொய்ப்பிரசாரங்களை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிந்திக் கிடைத்த தகவலுக்கமைய குறித்த அகதிகளின் பாதுகாப்புக் கருதி அவர்களை பொலிஸார் பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு சென்றுள்ளனர்.


Comments
Post a Comment