உரிமைகளைப் பெறும் இலக்கிலிருந்து ஓயமாட்டோம்: முதலமைச்சர் உறுதி


மாகாணசபை கலைக்கப்பட்டாலும் சிறுபான்மைச் சமூகங்களுக்கான அரசியல் உரிமைகளையும் அபிவிருத்திகளையும் அடைந்து கொள்ளும் எமது பயணத்திலிருந்து ஒருபோதும் ஒதுங்க மாட்டோம் என கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட் உறுதிபடத் தெரிவித்தார்.

மாகாண சபை கலைப்பு பற்றி இன்று கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில்,

சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சில அரசியல்வாதிகள் மாகாண சபை கலைக்கப்படப்போகிறது என பீரங்கிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரசியலமைப்பின்படி எப்போதாயினும் மாகாண சபையும், நாடாளுமன்றமும், உள்ளூராட்சி மன்றங்களும் கலைக்கப்படத்தான் வேண்டும்.

இதுபற்றி சிலர் பாமர மக்களிடத்தில் போய் நின்று ஆர்ப்பரிப்பது வெட்கக்கேடாக இருக்கின்றது.

சின்னத்தனமான அரசியல்வாதிகள் சிலர் எதை, எங்கு, எப்படிப் பேசுவது என்று தெரியாமல் உளறுகிறார்கள்.

உணர்ச்சிவசப்படும் படி வாய்க்கு வந்ததை எல்லாம் பேசி மக்களை உசுப்பேற்றி விடுகிறார்கள். அதன் விளைவுகளைக் கொண்டு எதிர்கால தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்பது அவர்களது ஆசை.

மக்களுக்கு சிறந்த அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டியதன் அவசியம்பற்றி வலியுறுத்த வேண்டியுள்ளது.

யாரோ இருட்டில் வெட்டிப் போட்ட படுகுழியில் இவர்கள் பகலில் வெட்ட வெளிச்சத்தில் போய் விழுகின்றார்கள்.

மாகாண ஆட்சி நீடித்தாலும், கலைக்கப்பட்டாலும் நாம், பாதிக்கப்பட்டுப் போயுள்ள சிறுபான்மைச் சமூகங்கள் சார்பாக அவர்களது அரசியல் அதிகார உரிமைகளுக்காகவும்,

அபிவிருத்திக்காகவும் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் பாடுபடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

Comments