இன்றய அதிர்விலே.. உரிந்தது சாரம், அம்மனமானது முஸ்லிம் சமூகம்...!


20வது திருத்தச்சட்டத்துக்கு வாக்களித்து சமூகத்துக்கு துரோகம் செய்துவிட்டோம் அமைச்சர் ரிசாட் பதியுதீனும், பிரதியமைச்சர் ஹரீஸும் ஒதுக்கொண்டார்கள். ஆனால் அதனை நியாயப்படுத்துவதற்காக  இருவரும் பட்டபாடு இருக்கின்றதே அதற்காக அவர்களுக்கு நோபல் பரிசு வழங்கலாம்.

முஸ்லிம் காங்கிரஸ் சோரம் போனவிடயத்தில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை, ஏனென்றால் அவர்கள் சமூகத்துக்காக "நேர்ந்து விட்ட மாடுகள்" அவர்கள் தவறு செய்தால் மன்னித்து விட போராளிகள் தயாராகவே இருக்கின்றார்கள், ஆனால் முஸ்லிம் காங்கிரஸுக்கு மாற்றாக நாங்கள்தான் சமூகத்துக்காக சோரம் போகாமல் போராட வந்த உத்தமர்கள் என்று கூறி வந்த அ.இ.மக்கள் காங்கிரஸ் 20வது சட்டத்துக்கு ஆதரவளித்துவிட்டு, நாங்கள் தவறு செய்து விட்டோம் என்றுகூறி மக்களிடம் மன்னிப்பு கேட்டால் அதனை மன்னிப்பற்கு நாங்கள் வெட்டாரம் போரிளிகள் அல்ல.

காலையில் கொண்டுவந்த சட்டத்ததை அவசரஅவசரமாக மாலையில் நிறைவேற்ற அரசாங்கம் அவதிப்பட்டபோது, அதன் பாரதூரம் அறிந்து நாங்கள் வாக்களிக்கமாட்டோம் என்று அடம்பிடித்த போது, கடைசி நேரத்தில் யாரோ ஒரு சமூகத்துரோகி பிரதமரிடம் டீல் நடக்கிறது பார்த்துக்கொள்ளுங்கள் என்று சொன்னாராம்.

அதன் பின் ரிசாட் பதியுதீன் முன்னால் அமைச்சர் பசீல் ராஜபக்கஸவுடன் சேர்ந்து அரசாங்கத்தை கவிழ்க்க பார்க்கின்றார் என்று கதைவந்ததாம், அந்த கதையை பொய்யாக்கவே நாங்கள் வாக்களித்தோம் என்றும், அடுத்தது மு.காங்கிரஸ் போன்ற கட்சிகள் ஆதரித்து வாக்களிக்க முற்பட்டுவிட்டதால் 152 எம்பிக்களின் ஆதரவு அரசாங்கத்துக்கு கிடைத்துவிட்ட காரணத்தினாலும், நாங்கள் எதிர்த்து வாக்களித்தாலும் ஒன்றுதான் வாக்களிக்காது விட்டாலும் ஒன்றுதான் என்ற காரணத்தினால் நாங்களும் கடைசிநேரத்தில் ஆதரித்து வாக்களித்து விட்டோம் என்று கூறுவது, குளிக்கப் போய் சேற்றை அள்ளிப்பூசிய கதைக்கு ஒப்பானதாகும்.

ஆனால் நாங்கள் வாக்களித்தாலும் இந்த சட்டமூலம் சமூகத்துக்கு கேடானதுதான் என்று ரிசாட் அமைச்சரும், ஹரீஸ் அமைச்சரும் ஒத்துக்கொண்டவிடயமானது நகைச்சுவையிலும் நகைச்சுவையாக இருந்தது. உண்மையிலேயே நாங்கள் எதிர்த்து வாக்களித்தாலும் சட்டமூலம் வெற்றியடையும் என்றிருந்தாலும், அ.இ.ம.காங்கிரஸ் எதிர்த்து வாக்களித்திருந்தால் மு.காங்கிரஸின் முகத்திரை கிழிந்திருக்கும். 
அரசாங்கத்தின் பக்கம் மு.காங்கிரஸிக்கு நல்லபெயர் இருந்திருந்தாலும், மக்கள் மன்றத்திலே அவர்கள் கேள்விக்கு பதிலின்றி தவித்திருப்பார்கள். அதற்கு உதாரணம்தான் ஹரீஸ் எம்பி அவர்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லமுடியாமல் தவித்த விடயமாகும்.

அதே நேரம்,  ரிசாட்டின் கட்சியினர் சட்டமூலத்தை எதிர்த்து வாக்களித்தனால்  பல பழிச்சொற்களை அரசாங்கம் கூறியிருந்தாலும்,  ரிசாட்டின் கட்சியினர் எதிர்த்து வாக்களித்ததால் தங்களுடைய சட்டமூலம் தோல்வியடையவில்லை என்பதனால், அவர்களின் குற்றச்சாட்டு பொய்யாக மாறியிருக்கும்.  காரணம் நாங்கள் ஆதரித்து வாக்களிக்காது விட்டாலும் சட்டமூலம் நிறைவேறும் என்று தெறிந்து கொண்டும் நாங்கள் சமூகத்துக்காகவே எங்கள் எதிர்ப்பை காட்டினோம், மாறாக அரசாங்கத்தை வீழ்த்தவேண்டும் என்ற என்னம் எங்களுக்கு இல்லை என்று நிரூபித்திருக்க முடியும்.

அதன் பிற்பாடு மக்கள் மத்தியிலே தைரியமாக நீங்கள் கூறியிருக்கலாம், சட்டமூலம் வெற்றியடையுதோ அல்லது தோல்வியடையுதோ எங்களுக்கு அதைப்பற்றி கவலையில்லை, எங்களுக்கு அந்த சட்டமூலம் பிடிக்கவில்லை அதனால் எதிர்த்து வாக்களித்தோம் என்று கூறியிருந்தால், மக்கள் சிந்திப்பார்கள் இவர்களுக்குத்தான் இனிவரும் தேர்தல்களில் வாக்களித்து கூடுதலான உறுப்பினர்களைக் கொடுக்கவேண்டும், அப்போதுதான் இவர்களுக்கு அதிகாரபலம் கூடும் என்று சிந்தித்து அடுத்த தேர்தலில் ரிசாட்டின் கட்சிக்கு கூடுதலான மக்கள் வாக்களிக்க காரணமாக இருந்திருக்கும்.

ஆனால், இதனையெல்லாம் உணராது அரசாங்கத்தின் சட்டமூலத்தை விருப்பமின்றி ஆதரித்ததற்கு அ.இ.ம.காங்கிரஸின் தலைவர் ரிசாட் அவர்கள் மேலே கூறிய காரணம் பொய்யானது என்பது போலவே தெறிகின்றது.
மு.காங்கிரஸ் தங்களுக்குலுள்ள  ஏதோவொறு பயத்தின் காரணமாகவே அரசாங்கத்திடம் சரணடைந்து கிடக்கின்றார்கள்,  அதுபோல அ.இ.ம.காங்கிரஸுக்கும் ஏதோவொறு பயம் ஒன்று உள்ளதின் காரணமாகவே அரசாங்கத்தின் மிரட்டலுக்கு பயந்து வாக்களித்துள்ளது என்றுதான் என்னத்தோன்றுகிறது.
அந்த பயம் எந்தப் பயம் என்பது அவர்களுக்குத்தான் வெளிச்சம்.

ஆகவே இந்த சட்டமூலத்தை ஆதரித்ததனால் தவறு செய்து விட்டோம் என்று இரு முஸ்லிம் கட்சிகளும் ஒத்துக் கொண்டதனால் இவர்கள் குற்றத்தை ஒப்புக்கொண்டு தங்களது பதவிகளை ராஜினாமா செய்யவேண்டும் அதுதான் தார்மீகம், அப்படி நடந்தால் கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்கே உதிப்பதற்கு சமமாகும் என்பதே உண்மையாகும்.

குர்ஆன் ஹதீஸ் என்று கூறிக்கொண்டு சமூகத்தை மொத்தமாகவும், சில்ரையாகவும் விற்பனை செய்துவரும் மு.காங்கிரஸுக்கு மாற்றீடாக அ.இ.ம.காங்கிரசை நம்பியிருக்கும் மக்களுக்கு நாங்களும் வியாபாரிகள்தான் என்று நடந்து கொள்வது விடிவைத்தேடி அலையும் மக்களுக்கு சாட்டையடிதான் என்பதே கவலைக்குறிய விடயமாகும்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.

Comments