யாழ் முஸ்லிம் மக்களுக்கான வீட்டுத்திட்ட அமுலாக்கத்திற்கு ஒத்துழைப்பு நல்கப்படும்.  யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் உறுதி.

n.m. abdullah

இன்றைய தினம் (28-8-2017) யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அதிகாரிகளுக்கும், யாழ் முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளுக்கும் இடையில் யாழ் முஸ்லிம் மக்களின் வீட்டுத்திட்டம் தொடர்பிலான விஷேட சந்திப்பு யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. இச்சந்திப்பில் யாழ் முஸ்லிம் மக்களினால் பின்வரும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

·         மீள்குடியேற்ற அமைச்சின் “நீண்டகால அகதிகளை மீள்குடியேற்றுவதற்கான விஷேட செயலணி” ஊடாக யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 200 வீட்டுத்திட்டங்களையும் இவ்வாண்டுக்குள் முழுமையாக முஸ்லிம் மக்கள் பயனடையும் வகையில் அமுலாக்குவதனை தாங்களும், தங்களுடைய அதிகாரிகள் குலாமும் உறுதிசெய்தல் அவசியமாகும்.
·         யாழ்ப்பாணம் அராலிவீதி, பறச்சேறிவயல் காணிகளில் வீட்டுத்திட்டங்களை அமைப்பதற்காக விண்ணப்பித்திருக்கின்ற குடும்பங்களுக்கு குறித்த காணிகளில் வீட்டுத்திட்டங்களை அமைப்பதற்கான அனுமதியை வழங்குவதற்கு விவசாய அபிவிருத்தித் திணைக்களத்திற்கு பரிந்துரை செய்தல் அவசியமாகும்
·         யாழ்ப்பாணத்தில் காணிகளையுடைய மீள்குடியேற்றப் பதிவுகளை மேற்கொண்டுள்ள குடும்பங்கள் இங்கு நிரந்தரமாக மீள்குடியேறுகின்ற சந்தர்ப்பத்தில் அவர்களுக்கு துரிதமாக வீட்டுத்திட்டங்கள் வழங்கப்படுவதை உறுதிசெய்தல் அவசியமாகும்.
·         தற்போது தெரிவு செய்யப்பட்டிருக்கின்ற வீட்டுத்திட்டப் பயனாளிகளுக்கு வீட்டுத்திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்றவேளையில் அவற்றை துரிதமாக நிர்மானிப்பதற்கு ஏற்ற விதமாக உதவிகள் வழங்கப்படுதல் அவசியமாகும்.

ஆகிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன, இவற்றுக்கு பதிலளித்துப் பேசும்போதே யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.என்.வேதநாயகன் அவர்கள் யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கான வீட்டுத்திட்ட அமுலாக்கத்தில் முழுமையான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம். முன்னைய காலங்களிலும் இவ்வாறான ஒத்துழைப்புகளை நாம் நல்கியிருந்தோம். இதுவரைக்கும் 228 முஸ்லிம் குடும்பங்களுக்கு கடந்த 5 வருடகாலப் பகுதிக்குள் வீட்டுத்திட்டங்கள் அல்லது வீட்டுத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டிருக்கின்றது. இப்போது நீண்டகாலமாக இடம்பெயர்ந்தவர்களை மீள்குடியேற்றும் விஷேட மீள்குடியேற்ற செயலணியினால் 200 வீடுகள் முஸ்லிம் மக்களுக்கு வழங்குவதற்கென பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது சுமார் 30,000ற்கும் அதிகமான வீடுகள் யாழ்மாவட்டத்திற்கு அவசியப்படும் சூழலில் நாம் 200 வீடுகளையும் முழுமையாக அமுல்படுத்தவே விரும்புகின்றோம். அந்தவகையில் சொந்தக்காணியுள்ள மீள்குடியேற்றத்திற்கு பதிவு செய்தோர் 255 குடும்பங்களாகும். அதிலே 169 குடும்பங்கள் வீட்டுத்திட்டத்திற்கு விண்ணப்பித்துள்ளார்கள், ஏனைய 86 குடும்பங்கள் காணியிருந்தும் இதுவரை விண்ணப்பிக்கவில்லை. எனவே இவ்வாறு காணியுள்ள 255 குடும்பங்களையும் அடிப்படைப் பயனாளிகளாக வைத்து 200 வீட்டுத்திட்டத்தையும் முழுமையாக அமுலாக்கவே நாம் விரும்புகின்றோம்.

பறைச்சேறிவயல் காணிகள் தொடர்பில் ஏற்கெனவே கொள்கையளவில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அக்காணியில் குடியிருக்கும் ஒவ்வொருவரும் தனித்தனியாக விண்ணப்பங்களை விவசாய அபிவிருத்தித் திணைக்களத்திடம் வழங்கி அதற்கான அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும்.

எனவே மீள்குடியேறுகின்ற அனைத்துக் குடும்பங்களுக்கும்  வீட்டுத்திட்டத்தினை பெற்றுத்தர எம்மாலான முழுமையான நடவடிக்கைகளையும் நாம் முன்னெடுப்போம், சமூக ரீதியான சரியான பயனாளிகளைத் தெரிவு செய்வதில் நீங்களும் எம்முடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.  என்றும் குறிப்பிட்டார், மேற்படி சந்திப்பில் வடக்கு மாகாணசபை உறுப்பினரான கௌரவ இம்மானுவேல் ஆர்னோல்ட் மற்றும் கௌரவ அய்யூப் அஸ்மின் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

தகவல் எம். எல். லாபிர்

Comments