ரோஹிங்யா முஸ்லிம் பிரச்சினை : ஐ.நா. சபை கூட்டத்தில் சூ கி பங்கேற்பு இல்லை


ரோஹிங்யா முஸ்லிம் பிரச்சினை குறித்து விவாதிக்க உள்ள ஐ.நா. சபை கூட்டத்தில் மியான்மர் தலைவி சூ கி பங்கேற்கப்போவதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மியான்மர் நாட்டில் ராக்கின் மாகாணத்தில் கடந்த மாதம் 25–ந் தேதி அர்சா என்னும் ரோஹிங்யா முஸ்லிம் கிளர்ச்சியாளர்கள், போலீசாரை தாக்கிய விவகாரம் பூதாகரமாகி விட்டது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து ஒட்டுமொத்த ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மீதும் அந்த நாட்டின் ராணுவமும், புத்த மதத்தினரும் வன்முறையை கட்டவிழ்த்து விட்டு கொண்டிருப்பதாக சர்வதேச அளவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் வசிக்கக்கூடிய கிராமங்களில் தீ வைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

3 லட்சத்து 70 ஆயிரம் பேர் ஓட்டம்

பல்வேறு இன்னல்களுக்கு இடையே தத்தளித்து வருகிற ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் உயிர் பிழைப்பதற்காக வங்காளதேசத்துக்கு சென்று தஞ்சம் அடைந்து வருகின்றனர். ஆனால் ராணுவமோ, தாங்கள் ரோஹிங்யா பயங்கரவாதிகள் மீதுதான் நடவடிக்கை எடுப்பதாகவும், அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை எனவும் கூறி வருகிறது.

ஆனால் ரோஹிங்யா முஸ்லிம் மக்களை மியான்மர் ராணுவம் கூண்டோடு காலி செய்யும் நிலையை உருவாக்கி உள்ளதாக ஐ.நா. சபையும் குற்றம் சாட்டுகிறது. இதையும் மியான்மர் நிராகரித்துள்ளது.

இருப்பினும் இதுவரையில் 3 லட்சத்து 70 ஆயிரம் ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மியான்மரை விட்டு வெளியேறி உள்ளனர்.

ஐ.நா. பொதுச்சபை கூட்டம்

இந்த பிரச்சினையை மியான்மர் நாட்டின் நடைமுறைத் தலைவியான சூ கி கையாளும் விதம், சர்வதேச அளவில் கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தி உள்ளது. அவருக்கு வழங்கப்பட்ட அமைதிக்கான நோபல் பரிசை பறிக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.

இந்த நிலையில், நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபை கூட்டம், 19–ந் தேதி தொடங்கி 25–ந் தேதி வரை நடக்கிறது. இந்த கூட்டத்தின்போது ரோஹிங்யா முஸ்லிம் மக்களின் விவகாரம், விவாதிக்கப்பட உள்ளது.

இந்த கூட்டத்தில் சூ கி பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது அவர் கலந்துகொள்ளவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றிய அறிவிப்பை மியான்மர் அரசு செய்தி தொடர்பாளர் ஆங் ஷின் வெளியிட்டார். அதே நேரத்தில் சூ கி விமர்சனங்களை எதிர்கொள்ள ஒருபோதும் அஞ்சியது இல்லை, பிரச்சினைகளை சந்திக்கவும் பயப்பட்டது கிடையாது என அவர் கூறினார்.

பல முக்கிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டியதிருப்பதால் அவர் கலந்துகொள்ளாமல் இருக்கலாம் எனவும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில் அவர் கலந்து கொள்ளாததற்கான உறுதியான காரணம் எதையும் அவர் தெரிவிக்கவில்லை.

ஷேக் ஹசினா வேண்டுகோள்

இதற்கிடையே ரோஹிங்யா முஸ்லிம் மக்களை மியான்மர் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும் என்று வங்காளதேசத்தின் பிரதமர் ஷேக் ஹசினா கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ‘‘ரோஹிங்யா முஸ்லிம் மக்கள் மியான்மரை சேர்ந்தவர்கள். அவர்கள் அங்கு 100 ஆண்டுகள் அல்லது அதற்கு மேலும் அங்கு வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு எப்படி குடியுரிமையை மறுப்பது சரியாகும்?’’ என கேள்வி எழுப்பி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments