ஆங் சூகியிடம் இன்னும் நோபல் பரிசு இருப்பது நோபல் பரிசுக்கே அவமானம்
மனித வரலாற்றில் மிகப்பெரும் அநியாயங்களையும், வக்கிர படுகொலைகளையும் சந்திக்கும் மியன்மார் முஸ்லிம்கள் விடயத்தில் துருக்கி நாட்டின் அக்கறையை உலமா கட்சி பாராட்டுவதுடன் மியன்மார் அதிபர் ஆங் சூகியின் சமாதானத்துக்கான நோபல் பரிசு இன்னமும் அவரிடம் இருப்பது நோபல் பரிசுக்கே பெருத்த அவமானம் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
இது பற்றி உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்திருப்பதாவது,
பர்மா முஸ்லிம்களை இந்த நிலைக்கு கொண்டு வர பல திட்டங்கள் அந்நாட்டு அரசால் அமுல் படுத்தப்பட்டு வந்துள்ளது.
கல்வியில் அவர்கள் உரிமை மறுக்கப்பட்டனர். அவர்களின் இனத்துவ அடையாளங்கள் இல்லாமலாக்கப்பட்டன. அண்டைய நாடுகளுடனான உறவுகள் துண்டிக்கப்பட்டன. இவ்வாறு பல விடயங்கள் அரச தரப்பால் செய்யப்பட்டது.
இவ்வாறு பல வருடங்களாக பர்மா முஸ்லிம்கள் திட்டமிட்ட வகையில் பிற்படுத்தப்பட்டதோடு அடிக்கடி படுகொலைகளுக்கும் முகம் கொடுத்து வருகின்றனர்.
பர்மா முஸ்லிம்கள் மீது அரங்கேறும் மிலேச்சத்தனமான அத்துமீறல்களை உலக நாடுகள் பார்த்துக்கொண்டிருப்பதன் மூலம் மனிதாபினம் செத்து விட்டது என்றே தோன்றுகிறது. பர்மா முஸ்லிம்கள் கடந்த 50 வருடங்களுக்கு மேலாக ஆட்சியாளர்களினாலும் சில பௌத்த பயங்கரவாதிகளாலும் சித்திரவதை செய்யப்படுகிறார்கள். இராணுவம் அந்த நாட்டின் ஆட்சியை கைப்பற்றிய காலம் முதல் இத்துன்பம் அதிகம் தொடர்கிறது.
பர்மாவில் இன்னமும் இராணுவத்தின் அதிகாரமே உள்ளது. அங்கு ஜனநாயக ஆட்சி ஏற்பட்டால் முஸ்லிம்களுக்கு ஓரளவு பாதிப்பு குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட போதும் அங்கு ஆங் சாங் சூகி தலைமையில் ஜனநாயக மாற்றம் ஏற்பட்டும் முஸ்லிம்கள் மீதான அத்துமீறல்கள் குறையவில்லை. சமாதானத்துக்கான பரிசு பெற்ற ஆங் சாங் சூகியும் இது விடயத்தில் ஒரு பக்க சார்புடன் நடப்பதன் மூலம் சமாதானத்துக்கான பதவிக்கே அவமானம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல் பர்மா முஸ்லிம்கள் பற்றி முஸ்லிம் நாடுகளுக்கோ, ஐ. நா. சபைக்கோ, அமெரிக்கா கூட்டு நாடுகளுக்கோ அக்கறை இல்லை.
சதாம் கொடுமை படுத்துகிறார் என ஈராக்குக்குள் புகுந்த அமெரிக்க நேசப்படைகள், லிபியாவுக்குள் புகுந்த படைகள், ஐ. எஸ். ஐ.எஸ். ஸை ஒழிக்க புகுந்த படைகள் பர்மா விடயத்தில் மௌனமாக இருக்கின்றன. காரணம் அம்மக்களிடம் பெற்றோல் இல்லை என்பதைத் தவிர வேறு காரணம் இருப்பதாக தெரியவில்லை.
எனவே இந்த நிலையில் துருக்கி நாட்டின் அதிபரின் மியன்மார் முஸ்லிம்கள் பற்றிய அக்கறையை உலமா கட்சி பாராட்டுகிறது. அதுபோல் உலக முஸ்லிம் நாடுகள் ஒற்றுமையுடன் ஒன்றிணைந்து மியன்மார் முஸ்லிம்கள் விடயத்தில் களத்தில் இறங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றது.


Comments
Post a Comment