யாழ் முஸ்லிம் மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் அவர்களது அடிப்படை உரிமையாகும். மக்கள் சந்திப்பில் தீர்மானம்.

n.m. abdullah

யாழ்ப்பாண முஸ்லிம் மக்களுக்கான வீட்டுத்திட்டங்கள் அவர்களது அடிப்படை உரிமையாகும் என இன்றையதினம் (24-9-2017) இடம்பெற்ற பொதுமக்கள், சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் தலைவர்கள் கலந்துகொண்ட மக்கள் சந்திப்பில் தீர்மானிக்கப்பட்டது. யாழ் முஸ்லிம் வீட்டுத்திட்ட இயக்கத்தினால்  குறித்த மக்கள் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதிலே கலந்துகொண்ட மக்கள் பின்வரும் மூன்று முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார்கள்.

தற்போது மீள்குடியேற்ற அமைச்சின் கீழ் நிறுவப்பட்டுள்ள நீண்டகால அகதிகளை மீள்குடியேற்றுவதற்கான விஷேட செயலணியினால் யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 200 வீட்டுத்திட்டங்களும் முழுமையாக மீள்குடியேறுகின்ற முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்படுதல் அவசியமாகும்.

இதனைப் பெற்றுக்கொள்வதில் காணப்படும் தடைகளை நீக்கும் நோக்குடன் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர், மீள்குடியேற்ற அமைச்சின் அதிகாரிகள், மற்றும் புத்தளம் கம்பஹா ஆகிய பிரதேசங்களின் அரசாங்க அதிபர்கள் ஆகியோரை சந்தித்து நிலைமைகளை எடுத்துறைத்தல்

மேற்படி சந்திப்புகளின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு தேவையேற்படின் தொடரான மக்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தல் 

ஆகியனவே குறித்த தீர்மானங்களாகும்.

இந்நிகழ்வில் விஷேட உரை நிகழ்த்திய வடக்கு மாகாணசபை உறுப்பினர கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள், இவ்வாறான மக்கள் சந்திப்புகள் வரவேற்கத்தக்கன, வீட்டுத்திட்டங்களைப் பெற்றுக்கொள்வதற்கான 2010ம் ஆண்டு முதல் எமது மக்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள், கியூடெக்ஸ் கரிடாஸ் நிறுவனத்தினால் 1 வீடு முஸ்லிம் மக்களுக்கு வழங்கப்பட்டது, எம்.எப்.சீ.டீ என்னும் முஸ்லிம் நிறுவனம் முஸ்லிம் மக்களுக்கான வீடமைப்புத் தேவைகளை நிறைவேற்ற முன்வந்த போதிலும் அதிகாரிகள் குறித்த நிறுவனத்தின் செயற்பாடுகளுக்கு பல்வேறு இடையூறுகளை மேற்கொண்டு குறித்த நிறுவனம் தமது கருத்திட்டத்தை விட்டுவிட்டு யாழ்பாணத்திலிருந்து வெளியேறியது, அவர்களால் 7 வீடுகள் நிர்மானிக்கப்பட்டன. அடுத்து இந்திய அரசாங்கம் யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு 300 வீடுகளை வழங்குவதாக வாக்குறுதியளித்திருந்தது, ஆனால் அதிகாரிகள் வெறும் 47 வீடுகளை மாத்திரமே யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு வழங்கினார்கள். அடுத்து மீள்குடியேற்ற அமைச்சின் வீட்டுத்திட்டத்தின் கீழ் 28 வீடுகள் வழங்கப்பட்டன. இப்போது மீள்குடியேற்ற செயலணியின் 200 வீட்டுத்திட்டங்கள் வந்திருக்கின்றன என்னுடைய பிரத்தியேகமான கணிப்பின் பிரகாரம் 30 ற்கும் குறைவான வீடுகளே மக்களுக்கு வழங்கப்படும் வாய்ப்பு இருக்கின்றது, இந்நிலை தொடர நாம் அனுமதிக்க முடியாது. வீட்டுத்திட்டம் என்பதை எமக்கான அடிப்படை உரிமை, இங்கிருந்து வீடுவாசல்களை விட்டுச் சென்ற மக்களுக்கு வீடுகளை வழங்கவேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும், இதனை தடுக்கும் உரிமை எவருக்கும் கிடையாது, நாம் வீட்டுத்திட்டங்களை பிச்சை பெறுவதைப் போன்று பெறவேண்டிய அவசியம் கிடையாது, அது அரசாங்கம் எமக்குத் திருப்பித் தரவேண்டிய கடனாகும், அதனை நாம் உரிமையோடு பெற்றுக்கொள்ளவேண்டும். இதற்கு யாழ்ப்பாண முஸ்லிம்கள் முறையான முயற்சிகளை மேற்கொள்தல் அவசியமாகும், அவ்வாறு முறையான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்போது அதற்கு எம்மாலான ஒத்துழைப்புகளை நாம் வழங்குவோம் என்றும் குறிப்பிட்டார்.

ஜனாம் கே.எம். நிலாம் தலைமையில் குறித்த சந்திப்பு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

தகவல் – எம்.எல்.லாபிர்

Comments