போர்க் குற்றவாளிகளை புத்த பெருமானும் மன்னிக்க மாட்டார்!
ஜெனரல் ஜகத் ஜயசூரிய உட்படப் படையினர் அனைவரையும் போர்க்குற்ற விசாரணையிலிருந்து பாதுகாப்பேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளமை தெற்கில் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் என்பதில் சிறிதளவும் ஐயமில்லை.
தெற்கில் நிலவுகின்ற தற்போதைய சூழ்நிலையில் அவர் அப்படித்தான் கூறியிருக்க வேண்டும். அவ்வாறு கூறியிருக்காது விட்டால், அவரால் ஆட்சியில் தொடர முடியாத நிலைதான் உருவாகியிருக்கும்.
முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய மீதான குற்றச்சாட்டுக்கள் தற்போது தீவிரமடைந்துள்ளன. இவர் போர்க்குற்றங்கள் புரிந்ததற்கான ஆதாரங்கள் தம்மிடம் உள்ளதாகவும், அவற்றைத் தம்மால் வெளியிட முடியுமெனவும் இறுதிப்போர் கால இராணுவத் தளபதியும், தற்போதைய கூட்டு அரசின் அமைச்சருமான சரத் பொன்சேகா கூறியுள்ளமை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி விட்டது.
இந்த நிலையில் அரச தலைவரின் மேற்படி அறிவிப்பு வெளிவந்தமை முக்கியத்துவம் பெறுகின்றது.
இறுதிப் போரின் இறுதி நாள்களில் போர்முனையில் இடம்பெற்ற சம்பவங்கள் மிகக் கொடியவை. இவற்றுக்கு அப்போதைய அரச தலைவர், பாதுகாப்புச் செயலர், இராணுவத்தளபதி ஆகியோர் பொறுப்புக் கூற வேண்டும்.
முன்னாள் அரச தலைவரும், பாதுகாப்புச் செயலரும் போர்க் குற்றங்கள் எதுவும் இடம்பெறவில்லையென அடித்துக் கூறி வருகின்றனர். சரத் பொன்சேகாவும் இந்த நிலைப்பாட்டையே பின்பற்றி வந்தார்.
தற்போது திடீரென தூக்கத்தில் இருந்து விழித்தவர் போன்று ஜகத் ஜயசூரிய போர்க் குற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறுகிறார். ஆனால் ஜகத் ஜயசூரிய இதை முற்றாகவே மறுக்கிறார்.
போர் முனையில் நடந்த சகலவற்றையும் தாம் தெரிந்து வைத்துள்ளதாகவும், அப்போதைய இராணுவத் தளபதியின் உத்தரவின் பேரிலேயே அனைத்துச் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார்.
போர்க்குற்ற விசாரணைகளை மேற்கொள்ளும் நோக்கம் இலங்கை அரசிடம் இல்லை
இறுதிப்போர் முடிவடைந்து எட்டு ஆண்டுகளாகி விட்டன. போர்க் குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு எதிரான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு விட்டது.
இலங்கை அரசு, போர்க் குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்குப் பதிலாக, கால அவகாசம் கேட்டுக் காலத்தைக் கடத்திக் கொண் டிருக்கிறது.
விசாரணைகளை நடத்துவதற்கான விருப்பம் இலங்கை அரசிடம் அறவே இல்லையென்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது. தற்போது அரச தலைவரும் இதை உறுதி செய்து விட்டார்.
தற்போது மியன்மாரில் சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கு எதிரான வன்செயல்கள் அதிகரித்துக் காணப்படுகின்றன.
முஸ்லிம் மக்கள் வகை தொகையின்றிக் கொலை செய்யப்படுகின்றனர்.இதுவோர் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையென விமர்சிக்கப்படுகின்றது.
நீண்டகாலமாக இராணுவ ஆட்சியினரால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்தவரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான ஆங் சாங் சூகியின் ஆதரவிலான மியன்மார் அரசு முஸ்லிம் மக்களுக்கு எதிரான கொடுமைகளைத் தடுப்பதற்குத் தவறியுள்ளது.
மேலும் வெளியாட்கள் மியன்மாருக்குள் வந்து விசாரணையில் ஈடுபடுவதையும் ஆட்சியாளர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. உள்நாட்டில் வகுக்கப்படுகின்ற பொறிமுறைகளுக்கு அமையவே விசாரணைகள் இடம்பெறுமென அரசு கூறி வருகின்றது.
சிறுபான்மை இனத்தவர் பெரும்பான்மைத் தரப்புக்களால் ஒடுக்கப்படுவது உலக வழக்கமே
இலங்கையும் மியன்மார் அரசு போன்றே நடந்து கொள்கின்றது. இன்று உலகளாவிய ரீதியில் சிறுபான்மை யின மக்கள் பெரும்பான்மையின மக்களாலும் ஆட்சியாளர்களாலும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவது வழக்கமானதொன்றாகியுள்ளது.
இறுதிப் போரின் இறுதிக் கட்டத்தில் அப்போதைய அரச தலைவரான மகிந்த ராஜபக்ச நாட்டில் இருக்கவில்லை. இதனால் தற்போதைய அரச தலைவரான மைத்திரிபால சிறிசேனவே பதில் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றிருந்தார்.
இந்த வகையில் படையினர் அனைவரது செயற்பாடுகளுக்கும் இவரே பொறுப்பாக இருந்துள்ளார். ஆனால் அப்போதைய நிலையில் பாதுகாப்புச் செயலர் பதவியில் அமர்ந்திருந்த கோத்தபாய ராஜபக்சவே பாதுகாப்புத் தொடர்பான முழு அதிகாரத்தையும் கொண்டிருந்தார்.
அரச தலைவரைவிட இவரது கட்டளைகளையே படையினர் பெரிதும் மதித்தார்கள். அவற்றுக்கு ஏற்பவே செயற்பட்டார்கள்.
தம்மைப் புனிதமானவர்களாக நிலை நிறுத்த முயலும் ஆட்சியாளர்களும் பாதுகாப்புப் படையினரும்
தற்போது அரசின் சார்பில் போரில் ஈடுபட்ட அனைவருமே குற்றமற்றவர்களாகத் தம்மைச் சித்திரிப்பதற்கு முயற்சி செய்கின்றனர். அரசின் முழு ஆதரவும் இவர்களுக்குக் கிடைத்து வருவதால் அது குறித்து அச்சம் இவர்களிடம் கிடையாது.
ஐக்கிய நாடுகள் சபை பெயரளவில் மட்டுமே ஒரு பன்னாட்டு நிறுவனமாகக் காட்சி தருகின்றது. அதன் செயற்பாடுகள் திருப்தி தருவதாகக் காணப்படவில்லை.
பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்புரிமையைக் கொண்டிருக்கும் அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா ஆகிய வல்லரசு நாடுகள் தமது விருப்பம் போன்று ஐ.நா.அமைப்பைப் பயன்படுத்தி வருகின்றன.
இந்த நாடுகள் தமக்கு வழங்கப்பட்ட வீட்டோ அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு தமது எண்ணம் போன்று செயற்பட்டு வருகின்றன.
ஈழத்தமிழர் விடயத்திலும் கூட ரஷ்யாவும், சீனாவும் இலங்கை அரசுக்கு முண்டு கொடுக்கின்றன. இதனால் தமிழர்களுக்கு உதவ முடியாத பரிதாபகரமான நிலையில் ஐ.நா.காணப்படுகின்றது.
இலங்கைக்கு எதிரான தீர்மானங்கள் வரும் போது அவற்றைச் செயலிழக்கச் செய்வதற்கு வீட்டோ அதிகாரம் காத்திருக்கின்றது.
இலங்கையொரு பௌத்த நாடு எனக் கூறிக் கொள்கிறார்கள். புத்தபெருமான அன்பு, அகிம்சை, இரக்கம், பிற உயிர்களை வருத்தாமை ஆகிய உயர்ந்த தத்துவங்களையே தமது போதனைகளாகக் கொண்டிருந்தார். தமது அரச வாழ்வைத் துறந்து அரச மரத்தடியில் ஆண்டியாக அமர்ந்திருந்த மிகப் பெரிய மகான் அவர்.
ஆனால் அவரது வழியைப் பின்பற்றி பெளத்த மதத்தைக் கைக்கொள்ளும் இலங்கையில் அடிக்கடி மனித உயிர்கள் வதைக்கப்படுதையும் குருதி ஆறு பெருக்கோடும் நிலை ஏற்படுவதையும் எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. புத்தபகவானும் இதை ஒரு போதுமே ஏற்றுக் கொள்ள மாட்டார்.
இறுதிப் போரின் போது தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளைக் கண்டு அவரது கண்களிலிருந்து கண்ணீருக்குப் பதிலாக குருதியே ஆறாகப் பாய்ந்தோடியிருக்கும். ஆனால் அவரைப் பின்பற்றி நடப்பதாகக் கூறுபவர்கள் பொய்களைக் கூறி அவற்றை உண்மையாக்குவதற்காக முயன்று கொண்டிருக்கின்றனர்.
எவரது அழுத்தங்களுக்கும் வளைந்து கொடாது இலங்கையின் அரச தலைவர் போர்க் குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுக் கொடுப்பாராயின், அவர் புத்தபகவானுக்கு நிகராக வைத்துக் கணிக்கப்படுவார்.


Comments
Post a Comment