வடக்கு மாகாணத்தில் சாதிய முரண்பாடுகளும் மத ரீதியான முரண்பாடுகளும் அபிவிருத்திக்குத் தடைபோடுகின்றன. அ.அஸ்மின் வ.மா.ச. உறுப்பினர் தெரிவிப்பு
n.m. abdullah
வடக்கு மாகாணசபை உறுப்பினர்களுக்கான பிரமான அடிப்படையிலான நிதி ஒதுக்கீட்டில் இருந்து யாழ்ப்பாணம் வைத்தீஸ்வரா கல்லூரிக்கு பல் ஊடக ஒளிக் கருவி (மல்டி மீடியா புரொஜெக்டர்) ஒன்றினைக் கையளிக்கும் நிகழ்வு இன்றைய தினம் பாடசாலை மண்டபத்தில் அதிபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது இதன்போது கருத்து வெளியிட்ட மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் அவர்கள் மேற்கண்டவாறு குறிப்பிட்டார், அவர் மேலும் தெரிவிக்கையில்
ஒரு நீண்டகால யுத்தம் எமது மக்களுக்கு 30 வருடப் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கின்றது, ஒரு தேசியத்திற்கான உரிமைப்போராட்டமாக எமது போராட்டம் அமைந்திருந்தாலும் அது பல்வேறு வாழ்வியல் ரீதியான பாதிப்புக்களை எமது மக்க்களிடையே விட்டுச் சென்றுள்ளது. இப்போது நடந்து முடிந்த விடயங்களை வைத்து விவாதங்களை செய்வதும்; அதனை வைத்து அரசியல் செய்வதும்; சர்ச்சைகளை ஏற்படுத்துவதும் பரவலாக இடம்பெறும் விடயமாகிவிட்டது. அதனை நான் சரியென்று கூறவோ அல்லது பிழை என்று கூறவோ முனையவில்லை ஆனால் எமது மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் ஒரு செயற்பாடே இப்போது எமக்கு அவசியமாகியிருக்கின்றது. அதிலும் குறிப்பாக கல்வி சார்ந்த வளர்ச்சி, மனித வள மேம்பாடு மிகவுமே அத்தியாவசியமான ஒன்றாகவிருக்கின்றது. இதனை நாம் புரிந்துகொள்தல் அவசியமாகும். மத ரீதியான முரண்பாடுகள், சாதிய ரீதியான முரண்பாடுகள் எம்மை மேலும் பலவீனப்படுத்தும் இதனை நாம் புரிந்துகொள்தல் வேண்டும்.
எமது மாணவர்களின் கல்விச் செயற்பாடுகள் தற்போது 9வது நிலையில் இருக்கின்றன என்று தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன, நாம் பின்னடைவான நிலையில் இருக்கின்றோம், இதனை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஒரு செயற்திட்டம் அவசியமாகின்றது. இதனை ஒரு சாராரிடம் விட்டுவிடுவது சிறப்பானதல்ல, அரசியல் தலைவர்கள், அதிகாரிகள், பாடசாலை அதிபர் ஆசிரியர்கள், பெற்றோர், மாணவர்கள் என அனைவரும் இணைந்த ஒரு கூட்டு முயற்சி அவசியமாகின்றது. கனேடிய நாட்டிலே மாணவர்கள் எத்தகைய கற்றலுக்கான சூழ்நிலைகளைப் பெற்றுக்கொண்டிருக்கின்றார்கள் என்று பார்ப்பதற்காக நாம் அங்கு சென்று அவற்றை அவதானித்தோம்; அவற்றை இலங்கையில் எப்படி நடைமுறைப்படுத்துவது என்றும் ஆராய்ந்தோம், இது இவ்வாறு இருக்க அண்மையில் நுவரெலியாவின் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தினைப் பார்வையிடச் சென்றேன், கனடாவில் இருக்கின்ற கற்றல் கற்பித்தல் சூழ்நிலைகளுக்குச் சமாந்தரமான ஒரு சூழ்நிலையை அவர்கள் ஏற்படுத்தியிருக்கின்றார்கள் என்பதை கண்ணுற்றபோது வியப்பாக இருந்தது, அவர்களிடம் இவற்றை எவ்வாறு மேற்கொண்டீர்கள் என்று கேட்டபோது “பெற்றோர்-ஆசிரியர் கூட்டுறவு” என்று பதில் சொன்னார்கள், வெளியிலிருந்து வருகின்ற நிதிசார்ந்த உதவிகளை விடவும் இந்தக் கூட்டுறவு மிகவும் முக்கியமானது என்று அறிந்து கொண்டேன். நாமும் அத்தகைய மாற்றங்களை இங்கும் ஏற்படுத்தலாம் என்ற நம்பிக்கை எனக்குள் உருவாகியது. எனவே இத்தகைய நல்ல மாற்றங்களை நாம் ஏற்படுத்துவது எம்மை முன்னோக்கிப் பயணிக்கச் செய்யும் என்று நம்புகின்றேன்.
மிகவும் நேர்த்தியாக இந்த நிகழ்வை ஏற்பாடு செய்த மாணவர்களின் சிறப்பான ஒழுக்கத்தை இவ்விடத்தில் நான் மெச்சுகின்றேன், பாராட்டுகின்றேன். யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரியின் முன்னேற்றத்திற்கு என்னால் முடியுமான பங்களிப்புக்களை நான் நல்குவேன் என்றும் இவ்விடத்தில் குறிப்பிட விரும்புகின்றேன்.
என்றும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் அவர்கள் தனதுரையில் குறிப்பிட்டார்.
தகவல் எம்.எல்.லாபிர்



Comments
Post a Comment