வடகிழக்கு இணைப்புபற்றி மு.காங்கிரஸ் பேசாதது ஏன்?


புதிய அரசியல் யாப்புக்கான இடைக்கால அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதிலே குறிப்பாக வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமான சரத்துக்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

புதிய அரசிலமைப்பொன்றை உருவாக்குவதற்காக வழிநடத்தல் குழுவில் ரஹுப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன் போன்றோரும் அங்கம் வகிக்கின்றனர்.
இந்த நிலையில் வடக்கு கிழக்கு இணைப்பு சம்பந்தமாகவும் அதன் தேவைப்பாடு குறித்தும் ஒரு அறிக்கையை தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசியல் அமைப்புக் குழுவுக்கு சமர்ப்பித்துள்ளது.

அதே நேரம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. அதிலே குறிப்பாக வடகிழக்கு இணைப்புக்கு தக்க காரணங்களோடு தங்களது எதிர்ப்பையும்  வெளியிட்டுள்ளனர்.

அதே போன்று முஸ்லிம்களின் குரல் என்று கூறிக்கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸும் தங்களது சார்பாக ஒரு அறிக்கையை சமர்ப்பித்துள்ளார்கள். ஆனால் அதிலே வடகிழக்கு இணைப்பு சம்பந்தமாகவோ, அதனால் ஏற்படும் நண்மை தீமையைப் பற்றியோ எதுவும் குறிப்பிட்டதாக அறியக்கூடியதாக இல்லை.

ஆனால் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டதன் காரணமாக தீர்வு திட்டத்தில் வடகிழக்கு சம்பந்தமாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால்  இதுசம்பந்தமாக முஸ்லிம் காங்கிரஸ் ஏன் அலட்டிக்கொள்ளாமல் இருக்கின்றது என்று புரியாத புதிராகவே இருக்கின்றது.

முன்பெல்லாம் அதனைப்பற்றி யாராவது, அந்தக் கட்சியின் தலைவர் ஹக்கீம் அவர்களிடம் இதனைப்பற்றி கேள்வி கேட்டால், அது சாணக்கியமாக பேசப்படவேண்டிய விடயம் என்றும், சந்தி பொந்துகளில் பேசுவது போன்று பேசமுடியாதென்றும், அது சம்பந்தமாக எடுக்கவேண்டிய நேரத்தில் தலைமை முடிவு எடுக்கும் என்றும் சாணக்கியமாக பதில் கூறிவந்தார்.

ஆனால் இப்போது அது சம்பந்தமாக பேசப்படவேண்டிய இடமான அரசியல் மாற்று வழிநடத்தல் குழுவிடம் இதைப்பற்றியதொரு  அபிப்பிராயமோ, கருத்துக்களோ அவர்களினால் வைக்கப்பட்டதாகவோ அல்லது கூறப்பட்டதாகவோ அறியக் கிடைக்கவில்லை.
வடக்கும் கிழக்கும் இணைக்கப்படுவதே எங்கள் முதல் கோரிக்கை அப்புரம்தான் மற்றவிடயங்கள் என்ற நோக்கத்தில் தமிழ் தரப்பினர் காய் நகர்த்திக்கொண்டு வருவதை நாம் அறிவோம்.

அப்படி இணைக்கப்பட்டால் முஸ்லிம்களுக்கு கிழக்கிலே அரசியல் ரீதியான இழப்புக்கள் ஏற்படும் என்ற காரணத்தினால், கிழக்கை சேர்ந்த புத்திஜீவிகளும் அரசியல்வாதிகளும் அந்த இணைப்புக்கு கடும் எதிர்ப்பை பகிரங்கமாக தெறிவித்துவரும் வேளையில், மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் அவர்கள் மட்டும் அந்த விடயத்தில் கழுவின மீனிலும் நழுவின மீனாட்டம் நடந்து வந்ததைத்தான் நாம் அவதானித்து வந்தோம்.

அதே நேரம் சம்பந்தன் ஐயாவினதும்,  ஹக்கீம் அவர்களினதும் அண்மைக்கால நெருக்கத்தின் காரணமாகவும், இதுசம்பந்தமாக சில சந்தேகங்களை மக்கள் எழுப்பியிருந்தார்கள்.
அந்த சந்தேகங்களுக்கு உரமூட்டுவதாகத்தான், அவர்களுடை இந்த அலட்சியப் போக்கும் சுட்டிக்காட்டுகின்றது என்பதுதான் உண்மையாகும்.

இந்த நிலைமை தொடர்ந்தால் இரவோடு இரவாக அதற்கும்  கை ஒயர்த்தி விட்டு பேசாமல் இருக்கும் நிலைமைகளும் செல்லலாம். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

எம்எச்எம்இப்றாஹிம்
கல்முனை.

Comments